தினமும் திரை இசைப்பாடல்களைக் கேட்பவர்களுக்கே மலைப்பைத் தந்தவர் ஜெயச்சந்திரன். ஒரு பாடலின் ‘ஹம்மிங்’ ஒலிக்கும்போதே, இது ‘எஸ்.பி.பி’, ‘இது மலேஷியா’ என்பது மனதில் பதிந்து விடும்.
ஹம்மிங், சரணம், பல்லவி எல்லாம் தாண்டிய பிறகுதான். ‘அட .. இது ஜெயச்சந்திரன்’ என்பதை உணர முடியும்.
எஸ்.பி.பி., மலேசிய வாசுதேவன் ஆகிய இருவரின் குரல்களும், ஜெயச்சந்தினின் தொண்டைக் குழிக்குள் இருந்தது. 60 ஆண்டுகள் இசை ஆட்சி நடத்திய அந்தக் குரல், இன்று குழிக்குள் புதைந்து போனது.
கடந்த சில நாட்களாகவே ஜெயச்சந்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
புற்றுநோய். அத்துடன், கல்லீரல் பிரச்சினையும் சேர்ந்தே இருந்தது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே பூக்குன்னத்தில் உள்ள தனது பூர்வீக இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார்.
அங்குள்ள தனியார் மருத்துவமனையில், நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்தார். 9 நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்தார். ஓரளவு குணம் அடைந்தார்.
நேற்று காலை வீடு திரும்பினார். மாலை 7 மணிக்கு திடீரென மயங்கி விழுந்தார். சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனைக்கு அவரை தூக்கிக்கொண்டு போனார்கள். ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள், உதட்டைப் பிதுக்கினர்.
ஜெயச்சந்திரன், பூக்குன்னத்தில் கடந்த 1944 ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தையைப் பின்பற்றி இசைப் பயின்றார்.
சிறு வயதில் மிருதங்க இசையில் தேர்ச்சிப் பெற்ற ஜெயச்சந்திரன், பள்ளி, கல்லூரிகளிலும், தேவாலயங்களிலும் பாடல்கள் பாடி வந்தார்.
சினிமாவுக்கு வந்த கதை:
கடந்த 1967 ஆம் ஆண்டு எம்.எஸ். பாபுராஜ் இசையில் வெளியான ‘உத்யோகஸ்தா’ மலையாளப் படத்தில், “அநுராக கானம் போலே” என்ற பாடலைப் பாடி திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
அவரை, ‘மணிப்பயல்’ படம் மூலமாக தமிழில் அறிமுகப்படுத்தினார் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.
1973-ம் ஆண்டு. அந்தப் படத்தில் அவர் பாடிய பாடல் “தங்கச் சிமிழ் இதழே”. இதனை தொடர்ந்து ஜெயச்சந்திரனின் ராக ராஜ்யம், தமிழில் ஆரம்பமானது.
‘மூன்று முடிச்சு’ படத்தில் கமல்ஹாசன் வாயசைக்கும் “வசந்த கால நதிகளிலே” பாடல் ஓர் இனிமையான தாலாட்டு.
ரஜினிகாந்துக்கு ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’, ‘அந்த 7 நாட்’களில் “கவிதை அரங்கேறும் நேரம்”, ‘நானே ராஜா நானே மந்திரி’ படத்தில் “மயங்கினேன் சொல்ல தயங்கினேன்”, ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் “ராசாத்தி உன்ன”
‘கிழக்கு சீமையிலே’ படத்தில் “கத்தாழங் காட்டு வழி”, ‘மே மாதம்’ படத்தில் “என் மேல் விழுந்த பனித்துளியே”, ‘பூவே உனக்காக’ படத்தில் “சொல்லாமலே யார் பார்த்தது”, ‘கிரீடம்’ படத்தில் ‘கனவெல்லாம் பலிக்குதே’ உள்ளிட்ட பாடல்களை அவர் தமிழில் பாடி உள்ளார்.
தமிழில் எம்.எஸ். விஸ்வநாதன் அறிமுகம் செய்த ஜெயச்சந்திரனின் கந்தர்வக் குரலை, இளையராஜா, எஸ்.ஏ. ராஜ்குமார், தேவா, ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்ட திரளான இசையமைப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
80 வயதான ஜெயச்சந்திரன் தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும், 16 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். அவரது ராக ராஜாங்கம் 60 ஆண்டுகள் கோலோச்சியது.
‘ஸ்ரீமன் நாராயண குரு’ மலையாளப் படத்தில் “சிவசங்கர சர்வ சரண்ய விபோ” பாடலுக்காக 1975 ஆம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார் ஜெயச்சந்திரன்.
மண்ணுலகை விட்டு அவர் விடைபெற்றாலும் அவரது கானம் என்றும் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
– பாப்பாங்குளம் பாரதி.