அகிரா குரோசாவாவின் படங்களிலேயே ‘செவன் சாமுராய்’ தான் மகத்தான படைப்பு என்பது விமர்சகர்களின் கணிப்பு.
சினிமாக் கலையின் மூலவர்களான க்ரிஃபித், ஐசன் ஸ்டின் ஆகியோர் தயாரித்த படங்களுக்கு இணையாக, ‘செவன் சாமுராய்’ என்ற படத்தையும் உலக சினிமா விமர்சகர்கள் மதிக்கிறார்கள். இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1954.
‘சாமுராய்’ என்பவன் போர் புரிதலைக் தன் முழு நேரப் பணியாகக் கொண்ட க்ஷத்ரியன். இந்தக் கதை பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜப்பானில் நடைபெறுகிறது.

சின்னஞ் சிறு கிராமமொன்று அடிக்கடி நாடோடிக் கொள்ளைக்காரர்களின் தாக்குதலுக்கு ஆளாகிறது.
கொள்ளையரை முறியடிக்க, வேலை இல்லாமல் திரியும் ஏழு சாமுராய்களை கிராமத்து மக்கள் கூலிக்கு அமர்த்துகிறார்கள்.
கொள்ளையரை முறியடித்து இந்தப் போர் வீரர்கள் வெற்றி வாகை சூடுவதுதான் கதை.
ஒரே சமயத்தில் பல கேமராக்களை இயக்கிப் படம் பிடிக்கும் யுத்தியை இதில் திறம்படக் கையாண்டு குரோசாவா அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார். இந்தப் படத்தின் வேகமும், விறுவிறுப்பும் எடிட்டிங் கலையின் உச்சத்தை எட்டுகின்றன.
கொள்ளையருக்கும், சாமுராய்களுக்கும் இடையே போர் நடக்கும் கடைசிக்காட்சி மயிர்க்கூச்செறிய வைப்பதாகும்.
வேகவேகமான ட்ராக்கிங் ஷாட்டுகள் மற்றும் டெலி ஃபோட்டோ க்ளோஸ் – அப்புகள் இதில் கையாளப்பட்டுப் படம் பார்ப்போரை உலுக்கி எடுக்கின்றன.
பல உலகப் பெரும் பரிசுகளை வென்று குவித்தது இந்தப் படம்.
நன்றி: புதிய பார்வை 1994-ம் ஆண்டு மே மாத இதழில் வெளிவந்த கட்டுரை.