Take a fresh look at your lifestyle.

சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி தரும் ‘ரெட்ரோ’ அனுபவம்!

ஆங்கிலத்தில் ‘ரெட்ரோஸ்பெக்டிவ்’ (retrospective) என்ற வார்த்தைக்கு பின்னோக்கிய, கடந்த காலத்தை நினைவூட்டுகிற, கடந்த காலத்தில் இருந்தது போன்ற என்று சில அர்த்தங்கள் தமிழில் சொல்லப்படுகின்றன.

ஆனால், இந்த வார்த்தையைக் கண்டால், கேட்டால் உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடுவார்கள். காரணம், கிளாசிக் அந்தஸ்து பெற்ற கடந்த காலப் படங்களை, அதனைத் தந்த ஜாம்பவான்களை அறிகிற வாய்ப்பைத் தருவதுதான்.

அதனால், திரைப்பட விழாக்களில் அந்தப் பிரிவில் திரையிடப்படுகிற படங்களை மட்டுமே காண ஒரு கூட்டம் திரளும். சில நேரங்களில், அதே போன்ற காட்சியாக்கத்தினைக் கொண்டிருக்கிற சமகாலப் படங்களும் வரவேற்பினைப் பெறும்.

அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடுகிற அளவுக்கு அப்படியொரு அனுபவத்தை ஒரு திரைப்படம் தரும்போது உருவாகிற உற்சாகமே தனி ரகம்.

கடந்த காலத்தைக் கண் முன்னே நிழலாட வைக்கிற அந்த அனுபவத்தைத் தர, தற்போது பல இயக்குநர்கள் போட்டி போடுகின்றனர்.

முழுக்க வரலாற்றுப் படங்களை உருவாக்குவதற்கும், சுமார் 40 முதல் 100 ஆண்டுகளுக்குள் இருந்த வாழ்வைக் காட்டுவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அதனை உணரவைப்பவை இந்த ரகப் படங்கள்.

அப்படியொரு அனுபவத்தை பெறப்போவதை ரசிகர்கள் முன்னரே அறிய வேண்டுமென்ற எண்ணத்துடன், சூர்யாவை நாயகனாக வைத்து தான் இயக்கும் படத்திற்கு ‘ரெட்ரோ’ என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

இதுநாள் வரை ‘சூர்யா 44’ என்றழைக்கப்பட்ட அப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது.

கிட்டத்தட்ட ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் எப்படிப்பட்ட அனுபவத்தை தந்தாரோ, அதற்கிணையாக ‘மாஸ்’ ஆன ஒரு திரைப்படைப்பினை ‘ரெட்ரோ’வில் தர மெனக்கெட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இந்த டீசர் அதையே உணர்த்துகிறது.

காசி போன்ற ஒரு தலம். ஒரு ஆறு. அதன் படித்துறை. அதில், பின்னணியில் கண் மூடி தியானித்திருக்கும் சில சாமியார்கள். படிக்கட்டுகளில் உட்கார்ந்திருக்கும் நாயகன் சூர்யா கையில் ‘அன்பு விலங்கு’ போன்று ஒன்றைக் கையில் மாட்டிவிடுகிறார் நாயகி பூஜா ஹெக்டே.

கொஞ்சமும் புன்னகைக்காமல், அதேநேரத்தில் வெறுமையையும் தவழவிடாமல், ‘இனிமேல் நான் நீ விரும்பியவாறு இருக்கிறேன்’ என்று அதுநாள்வரை தான் செய்தவற்றைக் கைவிடப் போவதாகத் தெரிவிக்கிறார் நாயகன். ‘நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா’ என்று அவர் கேட்க, நாயகி தலையாட்டுகிறார்.

இடையிடையே பெரிய கிருதா, தாடையில் நீண்டு தொங்குகிற மீசை, பின்னந்தலையில் புரளும் ‘பங்க்’ ஸ்டைல் தலைமுடி என்று முந்தைய பல காலகட்டத்தைச் சேர்ந்த ‘ஸ்டைல்’களை வாரிப் பூசியிருக்கிறார் சூர்யா.

போலவே, பூஜாவும் பெரிய பொட்டு, படிய வாரிய தலைமுடி என்று எண்பதுகளுக்கு முன்னால் இருந்த சில திரை நாயகிகளை நினைவூட்டுகிறார்.

படத்தின் டேக்லைன் போலவே, டீசரிலும் ‘காதல், போர், சிரிப்பு’ மூன்றும் காட்டப்பட்டிருக்கிறது. வன்முறையில் தோய்ந்த ஒரு ஆணைத் தனது காதலால் ஒரு பெண்ணால் மாற்ற முடிகிறதா என்பது இப்படத்தின் ஒருவரிக்கதையாக இருக்கக்கூடும்.

நிச்சயமாக, தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை அது பத்தோடு பதினொன்றாவது கதைதான். அதில், எந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் வித்தியாசத்தைப் புகுத்துகிறார் என்பதுவே சிறப்பம்சம்.

ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், தமிழ் என்று திரையில் முழுக்க ஆண் கலைஞர்களின் வாசம். அதைக் கண்டாலே ‘சேவல் பண்ணை’க்குள் நுழைந்த உணர்வு. கேங்க்ஸ்டர் கதை என்பதால் படமும் கூட அதே ரகத்தில் அமையலாம்.

யார் கண்டது? ‘ஆவேசம்’ போல இப்படமும் அமைவதில் தப்பில்லை. ஆனால், ‘போரடிக்குதே’ என்று சொல்லாத வகையில் இருக்க வேண்டும்.

இப்போதைக்கு கேங்க்ஸ்டர், ஆக்‌ஷன், ட்ராமா, ரொமான்ஸ், டார்க் ஹ்யூமர் வகைமை கதையைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது ‘ரெட்ரோ’.

அதனைத் தாண்டிய திரையனுபவத்தைத் தரும்போது மட்டுமே ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’கள் நிறைய கிடைக்கும். சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி அதனைத் தருமா?

-மாபா