Take a fresh look at your lifestyle.

இளையராஜாவை மையம் கொண்ட ஆண்டாள் கோயில் சர்ச்சை!

முன்பெல்லாம் தமிழ் திரையுலகில், நடிகர், நடிகைகள் குறித்தே விவகாரங்களும் சர்ச்சைகளும் உருவாகும். அண்மைக்காலமாக இசை அமைப்பாளர்கள் தொடர்ச்சியாக பிரச்சினைகளில் சிக்கி வருகிறார்கள்.

இமான், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர், சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களால் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டனர்.

தனக்கென ஒரு வேலி அமைத்துக்கொண்டு, அமைதியாக, வாழ்க்கையை நகர்த்தும் இசையமைப்பாளர் இளையராஜாவும், சர்ச்சையில் சிக்க வைக்கப்பட்ட நிகழ்வு அவரது, ரசிகர்களை தாண்டி, அனைத்து தரப்பினரையும் வருத்தம் கொள்ள செய்துள்ளது.

என்ன விவகாரம்?

விரிவாகவே பார்க்கலாம்.

ஆண்டாள் பாடிய 30 திருப்பாவை பாடல்களையும் தொகுத்து ‘திவ்ய பாசுரங்கள்’ எனும் தலைப்பில் இளையராஜா, இசை அமைத்துள்ளார்.

மார்கழி மாதம் தொடங்கி உள்ளதால், இந்தப் பாடல்களின் வெளியீட்டு விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்காக இளையராஜா, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு வந்திருந்தார். ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

அங்கு அவருக்கு கோவில் வாசலிலேயே யானையைக் கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற அவருக்கு, பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

ஜீயர் சுவாமிகளும் இளையராஜாவுக்கு மரியாதை செய்தார். இந்த நிலையில், கருவறைக்குள் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்றும், அவர் அவமதிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

கோவில் கருவறை என்று அழைக்கப்படும் கர்ப்பக் கிரகத்தில் நுழைய, வி.ஐ.பி.க்களுக்கு அனுமதி கிடையாது. ஆதீனங்கள், மடாதிபதிகள், தக்கார்கள், அறங்காவலர்கள் உள்ளிட்ட யாருமே, உள்ளே செல்ல அனுமதியில்லை.

கருவறையில் அந்தந்த கோவிலில் பூஜை செய்யும் ஸ்தானிகர்கள், பட்டாச்சாரியார்கள், பரம்பரை குருக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதே கோவிலில், வேறு சன்னதியில் பூஜை செய்யும் குருக்களாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆகம விதிப்படி கட்டிய கோவில்களில், பண்டையக் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை இதுவே.

இந்த நிலையில் தான், ஆண்டாள் கோவில் அர்த்த மண்டபத்துக்குள் செல்ல முயன்ற இளையராஜா, தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் பரவி, சர்ச்சை ஆனது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியானது.

இந்தச் சர்ச்சைக்கு அறநிலையத்துறையும், இளையராஜாவும் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்த பின்னரே, பிரச்சினையில் தீவிரம் குறைந்தது.

இளையராஜா கோவிலுக்கு வந்தபோது நடந்தது என்ன என்பது குறித்து அறநிலையத்துறை அறிக்கை அளித்துள்ளது.

‘ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி அர்த்தமண்டபத்தில் (கர்ப்ப கிரகம் முன் உள்ள இடம்) மடாதிபதிகள், அர்ச்சகர்கள் தவிர, மற்றவர்கள் உள்ளே செல்ல கோவில் வழக்கப்படி அனுமதி இல்லை – இதனை திரிதண்டி ஜீயர் இளையராஜாவிடம் தெரிவித்துள்ளார்.

அதனை இளையராஜா ஏற்றுக்கொண்டு அர்த்தமண்டபம் முன் நின்று தரிசனம் செய்தார்’ என்று அந்த அறிக்கையில் அறநிலையத்துறை தெளிவு படுத்தியுள்ளது.

இளையராஜாவும் விளக்கம்:

சர்ச்சை குறித்து இளையராஜாவும், தனது சமூக வலைதளப் பதிவில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

‘என்னை மையமாக வைத்து சிலர் வதந்தி பரப்புகிறார்கள் – நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள் – இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்’ என இளையராஜா தெளிவு படுத்தியுள்ளார்.

நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக் கொடுக்கவும் இல்லை’ என்றும் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக இப்போது தயாராகி வருகிறது. இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். ஆண்டாள் கோயில் விவகாரம், படத்தில் இடம் பெறுமா? என்பது தெரியவில்லை.

– பாப்பாங்குளம் பாரதி.