Take a fresh look at your lifestyle.

பிரபல நடிகை லட்சுமி இயக்கிய ஒரே படம்!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள், திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்கள். அதில் ஒரு சில படங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநர் டி.பி. ராஜலக்ஷ்மி.

தமிழ், தெலுங்கு சினிமாவின் முதல் ஹீரோயினும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்குப் பிறகு ஏராளமான பெண் இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள்.

தற்போது சுதா கொங்கரா, ஹலீதா ஷமீம் வரை சிலர் தங்கள் திறமைகளை நிரூபித்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு முன்னோடி நடிகை லட்சுமி. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்தே ஹீரோயினாக நடித்து வந்த லட்சுமி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர்.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது, தமிழ், கன்னடம், மலையாளம், வங்க மாநில மொழி விருதுகளையும் பெற்றுள்ள நடிகை லட்சுமி, இயக்குநராக அறிமுகமான படம் ‘மழலைப் பட்டாளம்’.

காமெடி கதைகளுக்கு எந்தக் காலத்திலும் வரவேற்பு உண்டு என்பதை நிரூபித்த படம் இது.

குடும்பம் மற்றும் ஆக்‌ஷன் கதைகள் வந்துகொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் இந்தக் காமெடி கதையை இயக்குநர் கே.பாலசந்தரின் மேற்பார்வையில் இயக்கினார் நடிகை லட்சுமி.

கன்னட நடிகர் விஷ்ணுவர்தன், சுமித்ரா உட்பட பலர் நடித்த இந்தப் படம், ஆங்கிலப் படத்தைத் தழுவி உருவான காமெடி படம்.

மெல்விலே ஷவெல்சன் இயக்கி 1968ம் ஆண்டு வெளியான ‘யுவர்ஸ், மைன் அண்ட் அவர்ஸ்’ என்ற அமெரிக்கப் படத்தின் உல்டாதான் இந்தப் படம்.

லுசில்லே பால், ஹென்றி ஃபாண்டா, வான் ஜான்சன் உட்பட பலர் நடித்த இந்த ஃபேமிலி காமெடி படத்தின் கதையை கேட்டாலே சுவாரஸ்யமாக இருக்கும்.

விஷ்ணுவர்தனுக்கு ஆறு குழந்தைகள். சுமித்ராவுக்கு ஐந்து குழந்தைகள். முதலில் மோதலில் உருவாகும் குழந்தைகளின் நட்பு, பிறகு நெருக்கமாகி அடிக்கும் நான்ஸ்டாப் லூட்டிதான் கதை.

இரு தரப்பு குழந்தைகளும் சேர்ந்து விஷ்ணுவர்தனுக்கும், சுமித்ராவுக்கும் திருமணம் செய்து வைக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பதை காமெடியாக சொல்லியிருப்பார்கள்.

ஒரே நேரத்தில் தமிழ், கன்னடத்தில் உருவான இந்தப் படத்துக்கு கன்னடத்தில் ‘மக்கள சையின்யா’ என்று டைட்டில்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்த படத்தில், “தள்ளுமாடல் வண்டியிது தள்ளிவிடுங்க…”, “கவுரி மனோகரி” ஆகிய பாடல்கள் அப்போது அதிக வரவேற்பைப் பெற்றன.

படம் ரிலீஸ் ஆன காலக்கட்டத்தில் குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக பார்த்தார்கள். விஷ்ணுவர்தனுக்கு தமிழில் டெல்லி கணேஷ் பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.

இந்தப் படம் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அதற்குப் பிறகு நடிகை லட்சுமி படம் இயக்குவதில் ஏனோ கவனம் செலுத்தவில்லை.

– அலாவுதீன்