Take a fresh look at your lifestyle.

தமிழ் சினிமாவில் பெருகி வரும் விவாகரத்துகள்!

எதிர்பார்க்கப்பட்டது போலவே காதல் தம்பதியான தனுஷ் – ஐஸ்வர்யா அதிகாரபூர்வமாக பிரிந்து விட்டார்கள். இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு எழுதி விட்டது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மகளும் இயக்கநருமான ஐஸ்வர்யாவை, 2004 ம் ஆண்டு நடிகர் தனுஷ் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திரத் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ், ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

நாட்கள் செல்லச் செல்ல விரிசல் பெரிதானது. மண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக, இரு ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பிரகடனம் செய்தனர்.

இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி, கடந்த ஏப்ரல் மாதம், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் நேரில் ஆஜராக, மூன்று முறை உத்தரவிட்டும் அவர்கள் நீதிமன்றம் வரவில்லை.

அப்போது, ரஜினிக்கு மட்டுமல்லாது, ரசிகர்களுக்கும் சின்ன சந்தோஷம் ஏற்பட்டது.

‘மனக்கசப்பு நீங்கி விட்டது – இருவரும் சேர்ந்து வாழப்போகிறார்கள்’ என்றே அனைவரும் குதூகலித்தனர்.

ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. கடந்த 21-ம் தேதி, விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஆஜர் ஆனார்கள்.

‘இப்போதும் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்களா அல்லது மாற்றம் உள்ளதா’ என்று நீதிபதி கேட்க, இருவருமே, ‘முடிவில் மாற்றம் இல்லை – பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்’ என்று அடித்துச் சொன்னார்கள்.

இதனையடுத்து, இந்த வழக்கில் நேற்று (புதன்கிழமை) நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதில், ‘தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது – இவர்கள் திருமணம் ரத்து செய்யப்படுகிறது’ என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பின் மூலம் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியின் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

அண்மைக் காலத்தில் பிரிந்த சில சினிமா நட்சத்திரங்களை, இந்தத் தருணத்தில் நினைவு கூர்வோம்.

சோனியா அகர்வால் முதல் ரஹ்மான் வரை:

இயக்குநர் செல்வராகவனை, காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்தார், நடிகை சோனியா அகர்வால்.

மூன்றே ஆண்டுகளில் கல்யாணம் கசந்தது. இந்த நட்சத்திர ஜோடி பிரிந்தது. செல்வராகவன், இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சோனியா, தனிமரமாகவே நிற்கிறார்.

இளையராஜாவின் மகனும், இசை அமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா, 2003 ஆம் ஆண்டு பாடகி சுஜாவை, திருமணம் செய்து, நான்கே ஆண்டுகளில் பிரிந்தார். உடனடியாக, இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார்.

நடன இயக்குநர் – நடிகர் – இயக்குநர் என பன்முகத் திறமைகள் கொண்ட பிரபுதேவா, நடனக் கலைஞர் ரமலத் என்பவரை, பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து, சில வருடங்களில் பிரிந்தார். இதற்கான காரணத்தை உலகம் அறியும்.

‘டூயட்’ படம் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமான பிரகாஷ்ராஜுக்கு, அந்தப் படம் வெளிவரும் முன்பே, ‘டிஸ்கோ’ சாந்தியின் தங்கை லலிதாகுமரியுடன் காதல் இருந்தது.

1994 ஆம் ஆண்டு கல்யாணம் செய்த இந்த நட்சத்திர ஜோடி, 2009 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

இயக்குநர் ஏ.எல். விஜயை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்த நடிகை அமலாபால், மூன்றே ஆண்டுகளில் விவாகரத்து செய்தார். கடந்த ஆண்டு, ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டார் அமலாபால்.

நாக சைதன்யா – சமந்தா, ஜிவி பிரகாஷ் – சைந்தவி, ஜெயம் ரவி – ஆர்த்தி, ஏ.ஆர். ரஹ்மான் –சாய்ரா பானு என, பாதியில் வாழ்க்கைத் துணையைத் தொலைத்த சினிமாக்காரர்கள் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

– பாப்பாங்குளம் பாரதி.