Take a fresh look at your lifestyle.

பல மொழிப் படங்கள் கைவசம்: ரூ.15 கோடி சம்பளம் கேட்கும் அனிருத்!

கடந்த 50 ஆண்டு தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரே பாடலில் உச்சம் தொட்ட இசை அமைப்பாளர்கள் என மூன்று பேரைச் சொல்லலாம்.

‘மச்சானை பாத்தீங்களா?’ மூலம் இளையராஜா, ‘சின்ன சின்ன ஆசை’ வாயிலாக ஏ.ஆர்.ரஹ்மான், ‘ஒய் திஸ் கொல வெறி?’ வழியாக அனிருத் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இளையராஜா, ரஹ்மான் ஆகியோர் வரிசையில் உயர, உயரப் பறந்து கொண்டிருக்கிறார் அனிருத்.

இதன் மூலம் இன்றைய தேதியில் இந்தியத் திரையுலகின் ‘மோஸ்ட் வாண்டட்’ இசையமைப்பாளராக அனிருத் மாறியிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அண்மையில் பேட்டியொன்றில் அனிருத், “அடுத்த 10 மாதங்களில் 50 பாடல்களை உருவாக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

அது, வெறும் தம்பட்டமோ, மிகையோ அல்ல, நிதர்சனம். அனைத்து பெரிய பட்ஜெட் படங்களையும், உச்ச நட்சத்திரங்கள் படங்களையும் கைவசம் வைத்துள்ளார் அனிருத்.

தமிழில் அனிருத் இசையில் ரஜினியின் ‘கூலி’, கமலின் ‘இந்தியன்-3’, விஜய்யின் ‘விஜய் 69’, அஜித்தின் ‘விடாமுயற்சி’, சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே-23’, விக்னேஷ் சிவனின் ‘லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’, கவினின் ‘கிஸ்’ ஆகியப் படங்கள் தயாராகி வருகின்றன.

இதர மொழிகளிலும் கணிசமான படங்கள் உள்ளன. இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’, அட்லி இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் படம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘விடி 12’, கெளதம் இயக்கி வரும் ‘மேஜிக்’, நானியின் ‘நானி ஓடிலா 2’ ஆகிய படங்கள் உள்ளன.

ஒரே சமயத்தில் இத்தனைப் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி விட்டார். புதிதாக ஒப்பந்தமாகும் படத்துக்கு 15 கோடி ரூபாய் வரை ஊதியம் கேட்கிறார் அனிருத். கேட்பதைக் கொடுக்கப் பல தயாரிப்பாளர்கள் தயாராகவே உள்ளனர்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்க ப்ரோ!

– பாப்பாங்குளம் பாரதி.