அஜித்தின் ‘ராஜா’, விக்ரமின் ‘காதல் சடுகுடு’, ‘ஜனனம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா உபேந்த்ரா, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.
தற்போது ஆக்ஷன் நாயகி அவதாரம் எடுத்திருக்கும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உக்ராவதாரம்’.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பிரியங்கா உபேந்த்ரா வழங்க, எஸ்.ஜி.எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜி.சதீஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் குருமூர்த்தி கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.
நந்தா குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணா பஸ்குரு இசை அமைத்துள்ளார். வேங்கி படத்தொகுப்பு செய்ய, ஆக்ஷன் காட்சிகளை மாஸ் மாதா, அஷோக், சிவு ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.
பாடல்கள் மற்றும் வசனம் கின்ணாழ் ராஜ் எழுதியிருக்கிறார். கோவிந்தராஜ் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றுகிறார்.
‘ஆக்ஷன் குயின்’ என்ற பட்டத்துடன் நடிகை பிரியங்கா உபேந்தரா ஆக்ஷன் நாயகியாக களமிறங்கும் இப்படத்தில் ரோபோ கணேஷ், நட்ராஜ், சுமன், சாய் தீனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையமாக வைத்து ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 21 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இதில், இயக்குநர் பேரரசு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு படத்தின் பாடல்கள், டிரைலரை வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் குருமூர்த்தி, “இந்தப் படம் தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
சினிமாவுக்காக கமர்ஷியல் விசயங்களை சேர்த்திருந்தாலும், முழுக்க முழுக்க நாட்டில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு தான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
தற்போதைய காலக்கட்டத்தில், ஒவ்வொருவரும் தங்களது பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லாமல் அனைத்து பெண்களையும் தங்கள் வீட்டுப் பெண்களாகப் பார்க்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். அத்தகைய விசயத்தை படத்தில் சொல்லியிருக்கிறோம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. அப்படிப்பட்ட குற்றங்களை எப்படி தடுப்பது, என்பது குறித்த விழிப்புணர்வாகவும், நாட்டுக்கு தேவையான நல்ல மெசஜ் சொல்லும் படமாகவும் இது இருக்கும்.
தற்போதைய சூழலில் ஊடகங்கள் இல்லை என்றால், நாட்டில் அதிகமான தவறுகள் நடக்கும். காரணம், இன்று நாட்டில் எந்த மூளையில் எது நடந்தாலும் அதை நீங்கள் உலகத்திற்கு தெரியப்படுத்தி விடுகிறீர்கள். அதனால் தான் தவறு செய்ய நினைப்பவர்கள் பயப்படுகிறார்கள்.
குற்றங்கள் குறைவாக நடப்பதற்கு ஊடகங்கள் தான் மிக முக்கியக் காரணம். ஊடகங்கள் இல்லை என்றால் குற்றங்கள் அதிகரித்துவிடும்.