இளைஞர்களுக்கு வழிகாட்டும் படைப்பாக ‘கலன்’ இருக்கும்!
தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி பேச்சு
ராமலெட்சுமி புரொடக்ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கலன்’.
‘கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அப்புகுட்டி, தீபா, யாசர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் சம்பத் ராம், சேரன் ராஜ், மணிமாறன், ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஜெர்சன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெயக்குமார் மற்றும் ஜேகே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் பாடல்கள் எழுதியுள்ளனர். திலகராஜன் அம்பேத் கலை இயக்குநராக பணியாற்ற, வெரைட்டி பாலா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். சவுண்ட் எஞ்சினியராக சந்தோஷ் பணியாற்ற, துணை இணை இயக்குநராக ஜெகன் ஆல்பர்ட். துணை இயக்குநராக பாலாஜி சாமிநாதன், மகேஷ் மற்றும் பலர் பணியாற்றி உள்ளனர். பி.ஆர்.ஓ.வாக கார்த்திக் பணியாற்றுகிறார்.
‘கலன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி அக்டோபர் 19-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
இதில், இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, தயாரிப்பாளர்கல் சங்க செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அந்தோணிதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “கலன் சிறு திரைப்படமாக இருக்கலாம், அனைவரும் புதியவர்களாக இருக்கலாம்,
ஆனால் சிறப்பான படமாக இருக்கும் என்பது பாடல்கள் மற்றும் டிரைலரை பார்த்த போதே தெரிகிறது. இயக்குநர் சங்கத்தில் வீரமுருகன் உறுப்பினர் இல்லை என்று சொல்கிறார்.
நீங்கள் விரைவில் உறுப்பினராக வேண்டும். அப்போது தான் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். இந்தப் படத்தை வாழ்த்த வந்தது பெருமையாக இருக்கிறது.
இந்தப் படத்தின் டிரைலரை பார்க்கும் போது, சாமி படமாக மட்டும் இன்றி சமூகப் படமாகவும் இருக்கிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள். அதை மையப்படுத்திய இந்தப் படம் நிச்சயம் நன்றாக வந்திருக்கும் என்று நம்புகிறேன்.
நாம் எந்த துறையில் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் இறை நம்பிக்கை மிக முக்கியம் என்று நினைக்கிறேன்.
இறைவன் இருக்கிறனா, இல்லையா என்பது தெரியாது. ஆனால், இறைவன் இருக்கிறான், தப்பு செய்தால் உங்களை இறைவன் தண்டிப்பார், என்ற நம்பிக்கையை உருவாக்கி வைத்திருக்கும் நம் முன்னோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதை விட்டு விட்டு, இறைவன் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய கூடாது. இதை தான் அமெரிக்க திரைப்படமான ‘தி கான்வேர்சேசன்’ சொல்லியிருப்பார்கள்.
விண்வெளியில் பல கண்டங்களைத் தாண்டி ஏதோ ஒரு சத்தம் கேட்பதாக விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடிப்பார், அது என்ன என்பதை கண்டறிய அவர் அங்கு செல்ல முயற்சித்து, அதில் வெற்றியும் பெறுவார்.
ஆனால், அவர் அங்கு சென்றாரா? இல்லையா? என்பது குறித்து பெரிய விவாதம் நடக்கும். அப்போது, அமெரிக்க அதிபரான பிளிக் கிளிண்டனிடமே விஞ்ஞானிகள் இது குறித்து தீர்ப்பு கேட்க முடிவு செய்வார்கள்.
அப்போது அவர், இந்த உலகத்தில் எத்தனையோ மக்கள் இன்னமும் பெரிய கஷ்டத்தில் இருக்கிறார்கள், அவர்களின் முன்னேற்றத்திற்கான ஆய்வுகளை முன் எடுப்போம், அதை விட்டு விட்டு இறைவன் எங்கிருக்கிறான், என்ற ஆய்வு நமக்கு தேவையில்லை.
இறைவன் இருக்கிறானா? என்பதை ஆராய்வதை விட, இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் தான் இந்த உலக மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், என்று அவர் சொல்வது போல் அந்தப் படம் முடியும்.
எனவே, இறை நம்பிக்கை நம் வாழ்க்கையில் மிக முக்கியம். அதை தான் அந்த ஹாலிவுட் படம் சொன்னது, இந்தப் படமும் சொல்கிறது.
அதனால், கடவுள் இந்த வண்ணத்தில் இருப்பாரா, கடவுள் அங்கு இருப்பாரா, என்று நாம் தேட வேண்டாம். கடவுள் இருக்கிறார், என்ற நம்பிக்கையில் வாழ வேண்டும், அப்போது தான் குற்றங்கள் குறையும்.
படத்தின் பாடல்கள் மிக சிறப்பாக இருந்தது. தயாரிப்பாளரும், இணை தயாரிப்பாளரும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள், அவர்களின் வரிகள் ஆபாசம் இல்லாமல், ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் விதமாக மிக சிறப்பாக இருந்தது.
அதேபோல் படத்தின் இசையமைப்பாளருக்கும் பாராட்டு, இசை சிறப்பாக இருந்தது. அவர் பெயர் ஜெர்சன், அவர் ஒரு இந்து பாடலை மிக சிறப்பாக மட்டும் இன்றி உணர்ச்சிப்பூர்வமாக இசையமைத்திருக்கிறார், அது தான் இங்கு சிறப்பு.
நிச்சயமாக இந்தப் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும், அதை அர்ஜுன் சம்பத் மக்களிடம் கொண்டு சேர்ப்பார் என்று நம்புகிறேன். பாடல்கள் மிக சிறப்பாக இருக்கிறது, இது நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய பாடல்கள். படத்தில் நடித்தவர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது.
வில்லியாக நடித்திருக்கும் காயத்ரி சிறப்பாக நடித்திருக்கிறார், அவரை பார்த்து நான் பயந்துவிட்டேன். சம்பத் ராம் சிறப்பாக நடித்திருக்கிறார். மணிமாறன் விரலை இழந்து கூட நடித்தார், என்பது பெரிய விசயம்.
இதுபோன்ற தியாகங்கள் தான் சினிமாவில் வெற்றி பெற வைக்கும். இன்று கஷ்ட்டப்படும் நடிகர்கள் தான் பெரிய நடிகராக வந்திருக்கிறார்கள். அதற்கு நம்ம அப்புகுட்டி தான் உதாரணம். அவர் ஒரு துணை நடிகராக பயணித்தவர், பிறகு காமெடி நடிகராக உயர்ந்து பிறகு நாயகனாகி, தேசிய விருது வென்றார்.
நான் தேசிய விருது வழங்கும் குழுவில் இருந்தேன், அங்கு பல படங்கள் வரும், எத்தனை படங்கள், எத்தனை நடிகர்கள், அவர்களில் யாருக்கு விருது கொடுப்பது என்று முடிவு செய்வதில், தலையே சுற்றி விட்டது. அப்படி ஒரு சூழலில் ஒரு சிறிய படத்தில் நடித்து, தேசிய விருது வென்றிருக்கிறார் என்றால் அது அப்புகுட்டி தான்.
அப்படிப்பட்ட அப்புகுட்டி இந்த படத்தில் சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறார். அவரது மறைவுக்கு பிறகான அந்தப் பாடல் மெய்சிலிர்க்க வைத்தது, அந்தப் பாடலை பாடிய தம்பியும் சிறப்பாக பாடியிருக்கிறார். அவரது குரல் வலம் சிறப்பாக இருக்கிறது.
தீபா சிறந்த குணச்சித்திர நடிகை. மனோரமா ஆச்சி தான் அனைத்து வேடங்களிலும் நடிப்பார். காமெடியை கடந்து குணச்சித்திர வேடங்களிலும் அசத்துவார், அவர் இடத்தை தீபா பிடிக்க வேண்டும்.
அவரும் காமெடி மட்டும் இன்றி பலவிதமான குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார், அவருக்கு வாழ்த்துகள்.
தெய்வத்தின் சக்தி படத்தின் கிளைமாக்ஸில் காட்டுவார்கள் என்று நினைக்கிறேன், அந்த தெய்வ சக்தி இந்த படத்தின் வெற்றிக்கு துணையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
’கலன்’ சிறிய படமாக இருக்கலாம், இந்த அரங்கம் சிறியதாக இருக்கலாம், இங்கிருக்கும் கூட்டம் குறைவாக இருக்கலாம், ஆனால் இதன் வெற்றி மிகப்பெரியதாக இருக்கும். ஆன்மீகம் மற்றும் சமூக அக்கறையோடு உருவாகியிருக்கும் இந்த ‘கலன்’ மிகப்பெரிய வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும், என்று கூறி படக்குழுவினரை வாழ்த்துகிறேன்.” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, “கலன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சிறப்பாக இருந்தது. குறிப்பாக டிரைலரில் கிராமத்தை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள்.
உதயகுமார் சார் சொன்னது போல் இறை நம்பிக்கை மக்களுக்கு அவசியமானது. நாம் ஒரு மருத்துவரிடம் சென்றால் கூட, அவர் இறுதியில் கடவுளை தான் நம்புவார்.
அதேபோல் பல புதிய விசயங்களை கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளும் இறுதியில் கடவுள் கையில் தான் இருக்கிறது, என்று சொல்வார்கள்.
நம் முன்னோர்கள் முதலில் இயற்கையை தான் வணங்கினார்கள்.
நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் இவற்றை தான் வணங்கினார்கள்.
இன்றும் நாம் இயற்கையை தான் வணங்குகிறோம், ஆனால் அது தெரியாமல் வணங்குகிறோம்.
அதாவது, சமீபத்தில் ஆயுத பூஜை கொண்டாடினோம். அதில், தேங்காய் மீது கற்பூரம் வைத்து சுற்றி உடைத்திருப்போம், அதுவே பஞ்சபூத வழிபாடு தான். தேங்காய் மீது கற்பூரம் வைப்பதால் நெருப்பு இருக்கிறது, தேங்காய்க்குள் தண்ணீர் இருக்கிறது.
அதை சுற்றும் போது காற்று சேர்கிறது, ஆகாயத்தில் காட்டி விட்டு தரையில் உடைப்பதால் அவை இரண்டும் இணைகிறது, ஆக, பஞ்சபூதங்களின் வழிபாடாகத்தான் தேங்காய் உடைத்து வணங்குகிறோம்.
அதேபோல் குலதெய்வ கோவில் வழிபாடு என்பது மிக முக்கியம், அதற்கு காரணம் அப்படிப்பட்ட கோவில்கள் நம் முன்னோர்கள் கால்பட்ட இடம் அது, அவர்களுடைய மூச்சு அங்கு சுத்திட்டு இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு அது தேவைப்படுகிறது.
பூமியே அந்தரத்தில் தான் சுற்றிக்கொண்டிருக்கிறது, அதுவே கடவுள் சக்திக்கு சாட்சி. அதேபோல், பூமி சுற்றும் இடத்தில் ஓம் என்ற சத்தம் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், இவற்றை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை.
இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை, என்ற குறையை இதுபோன்ற படங்கள் போக்கும் என்று நினைக்கிறேன்.
படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது, இசையமைப்பாளர் ஜெர்சனுக்கு பாராட்டுகள். பாடல் பாடியவர்களின் குரல் வலம் சிறப்பாக இருக்கிறது. இவர்களை எல்லாம் ஒன்றினைத்த வீரமுருகன் அவர்களுக்கு பாராட்டுகள்.
தப்பு செய்தால், தண்டனை உண்டு என்று சொல்வதற்கு இப்போது ஆள் இல்லை. இன்று சாமி படங்கள் வருவது குறைந்துவிட்டது. ஒரு காலத்தில் தேவர் பிலிம்ஸ் எடுத்தார், பிறகு இராம.நாராயணன் சார் எடுத்தார்.
அவர் எடுக்கும் போது கூட, சாமி படம் என்றால் கண் தெரியாவருக்கு கண் தெரியும், நடக்காதவர் நடப்பார், போன்ற விசயங்களை தான் சொல்ல முடியும், அதைத் தாண்டி என்ன சொல்ல முடியும் என்று சொல்வார்கள்.
ஆனால், அந்த விசயங்களை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும் என்று தான் சொல்வார்கள், அது தான் இறை நம்பிக்கை. தீய பழக்கங்களில் இருந்தும், நம் வாழ்க்கையை நல்வழி படுத்துவதும் இறை நம்பிக்கை தான், அதை சொல்வதற்கு சங்கராச்சாரியர், கிருபானந்தவாரியார் போன்றவர்கள் இருந்தார்கள்.
ஆனால், இப்போது திரைப்படங்கள் மூலமாகத்தான் இதுபோன்ற விசயங்களை சொல்ல வேண்டும்.
எனவே, இறை நம்பிக்கை மற்றும் அதன் மூலம் குற்றவாளிகளுக்கு பயத்தைக் கொடுக்கும் விதமாக இருக்கும் ‘கலன்’ நிச்சயம் வெற்றி பெறும், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.