‘பட்ட காலிலேயே படும்’ என்பது போல், கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக தொல்லைகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார், தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் ஷங்கர்.
பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் பெற்ற இவரது இயக்கத்தில், கொரோனா கால கட்டத்தில் ‘இந்தியன் 2’ படம் ஆரம்பிக்கப்பட்டது. மேக்கப்பில் ஹீரோவுக்கு அதிருப்தி, நிதி நெருக்கடி, படப்பிடிப்பில் உயிர்ப்பலிகள் என பல்வேறு தடைகளைத் தாண்டி படம் ரிலீஸ் ஆனது.
எல்லா திசைகளிலும் ‘நெகட்டிவ்’ விமர்சனங்களை பெற்றதால், இந்தப் படம் படுதோல்வி அடைந்தது. துவண்டு போய் இருக்கும் ஷங்கரின் கையில் இப்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் உள்ளன.
ஒன்று, ராம் சரணை வைத்து தெலுங்கில் இயக்கியுள்ள ‘டைம் சேஞ்சர்’. இன்னொன்று ‘இந்தியன்-3’, சின்னச் சின்ன ஒட்டு வேலைகளை செய்து முடித்தால், இரண்டு படங்களும் வெளியாகி விடும்.
இந்த நிலையில்தான், ஷங்கரை மேலும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் வகையில், ஒரு காரியம் நிகழ்ந்தேறியுள்ளது.
எழுத்தாளரும், மதுரை மக்களவை தொகுதி உறுப்பினருமான சு.வெங்கடேசன் ‘ஆனந்த விகடன்’ வார இதழில் ‘வேள்பாரி’ என்ற சரித்திர நாவலை எழுதி இருந்தார்.
வாசகர்களைப் பெரிதும் ஈர்த்த இந்த நாவலின் காப்புரிமையை, நல்ல தொகை கொடுத்து, வாங்கியுள்ள ஷங்கர், இதனை 3 பாகங்களாக சினிமாவாக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் வெளியான தெலுங்கு படமான தேவரா படத்தின் டிரெய்லரில் வேள்பாரி நாவலின் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனை தெலுங்கு ரசிகர்கள், ஷங்கர் காதுக்கு கொண்டு சென்றதை அடுத்து அவர் உறைந்து போனார்.
இந்த ‘இருட்டுக் கொள்ளை’ குறித்து, ஷங்கர், தனது எக்ஸ் தளத்தில் வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர், சு. வெங்கடேசன் எழுதிய தமிழ் நாவலான நவயுக நாயகன் ‘வேள்பாரி’யில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பல திரைப்படங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைப் பார்த்து கண் கலங்கினேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
‘அண்மையில் வெளியான டிரெய்லரில் ஒரு முக்கியப் பகுதியை பார்த்தேன் – அந்த நாவலுக்கு காப்புரிமை பெற்றவனாக உண்மையிலேயே வேதனையாக இருந்தது.
படங்கள், வெப்சீரிஸ் மற்றும் எந்த ஊடகத்திலும் நாவலின் காட்சிகளைப் பயன்படுத்துவதை தயவுசெய்து தவிர்க்கவும் படைப்பாளிகளின் உரிமைகளை மதியுங்கள்.
வேள்பாரி நாவலை தழுவிய காட்சிகள் படங்களில் இடம்பெற்று இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என இயக்குநர் ஷங்கர் எச்சரித்துள்ளார்.
‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள், தெலுங்கு முன்னணி நடிகரின் பட ‘டிரைலரில்’ இடம் பெற்றுள்ளது. நடிகரின் தந்தையும் பெரிய நடிகர்.
ஷங்கரின் தெலுங்கு படமான ‘கேம் சேஞ்சர்’ வெளியாக இருக்கும் நிலையில், அந்தப் படத்தின் பெயரை குறிப்பிட்டால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும் என்பதால், தனது அறிக்கையில் அந்தப் படத்தின் பெயரை ஷங்கர், தவிர்த்துள்ளார்.
இதனிடையே இரண்டு தமிழ் படங்களும் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகளை தங்கள் ‘டிரெய்லரில்’ பயன்படுத்தி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன.
– பாப்பாங்குளம் பாரதி.