திரைத் தெறிப்புகள்-26:
*
ஒரு திரைப்படப் பாடலுக்கு இந்த அளவுக்கு மகத்தான நல் விளைவுகள் இருக்குமா? என்கின்ற கேள்விக்குப் பதிலாக தன்னுடைய வாழ்வையே மாற்றிய அனுபவத்தைச் சொன்னவர் கவிஞர் வாலி.
1962-ம் ஆண்டு வெளிவந்த ‘சுமைதாங்கி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி.
“மயக்கமா கலக்கமா..
மனதிலே குழப்பமா..
வாழ்க்கையில் நடுக்கமா?”
என்று மிகமிக மென்மையாகத் துவங்கும் இந்தப் பாடலுக்கான ‘ரிக்கார்டிங்’ முடிந்த நேரம்.
கவிஞர் வாலி அப்போது திரையுலகில் பல நெருக்கடிகளைச் சந்தித்து, விரக்தி அடைந்து, சென்னையை விட்டு தன்னுடைய சொந்த ஊருக்குக் கிளம்பி விடுவதற்கு முடிவெடுத்த தருணம்.
அவரின் வீட்டுக்கு வந்திருக்கிறார் பாடகரான பி.பி. ஸ்ரீநிவாஸ்.
“சமீபத்தில் கவியரசு கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலுக்கான ரெக்கார்டிங்கை முடிச்சிட்டு இங்க வந்திருக்கேன். இதைக் கேட்டுப் பாருங்கள்” என்று தன்னுடைய மென் குரலால் பாடிய பாட்டுதான் “மயக்கமா கலக்கமா” என்று துவங்கும் பாடல்.
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
வாசல் தோறும் வேதனை இருக்கும்.
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்…”
என்று பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடப் பாட, கவிஞர் வாலியின் மனசுக்குள் நம்பிக்கையின் துளிர்.
“ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு.
நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து,
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு.
உனக்கும் கீழே உள்ளவர் கோடி.
நினைத்துப் பார்த்து
நிம்மதி நாடு”.
– என்று பி.பி.எஸ் பாடி முடித்தபோது, கவியரசரின் வரிகள் – சமகாலத்திய கவிஞரான வாலியின் மனதையே மாற்றி அமைத்திருக்கின்றன.
இந்தப் பாடல், அவர் சென்னையில் இருந்து கிளம்புவதைத் தடுத்து, தொடர்ந்து திரையிசைப் பயணத்தைத் தொடர வைத்து, வெற்றியும் பெற்றுக் கொடுத்தது.
நேரடிப் பேச்சில், “இது கவிஞர் தன்னுடைய பாடலின்மூலம் எனக்குக் கொடுத்த வாழ்க்கை.
ஆக என்னுடைய வாழ்க்கையில் கண்ணதாசனையும் மறக்க முடியாது, அதைப் பாடிய பி.பி. ஸ்ரீநிவாசையும் மறக்க முடியாது. இந்தப் பாடலையும் என்றைக்கும் மறக்க முடியாது” என்று குரலில் வாஞ்சையுடன் சொன்னார் கவிஞர் வாலி.
சென்னையின் பரபரப்பான நெரிசலுக்கு நடுவே அமைந்திருந்த ‘டிரைவ் இன் உட்லண்ட்ஸ்’ ஹோட்டலில் தனது வழக்கமான தொப்பி – தடித்த பிரேம் போட்ட கண்ணாடியுடன் இதே பாடல் வரிகளைக் குரல் தழுதழுத்தபடி பி.பி. ஸ்ரீநிவாஸ் மெல்லிய புன்னகையுடன் நேரில் பாடிக் காட்டிய அந்த அருமையான தருணத்தையும் மறக்க முடியாது.
ஒரு பாடல் எத்தனை மனங்களில் சத்துமிக்க விதையைப் போல, கேட்கும் கணம்தோறும்
பசுமையாக முளைத்தபடி இருக்கிறது.
-யூகி.