தெருக்கூத்துக் கலைஞர்களைப் பின்தொடர்ந்தால் தினமும் ஒரு கதை எழுதலாம். நாசர் அவர்கள் அவதாரம் படத்தில் தெருக்கூத்து வாழ்வியலை சொல்லி இருப்பார்.
நான் ‘வெங்காயம்’ திரைப்படத்தில் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலைப் பதிவு செய்திருந்தேன்.
பிறகு நிறைய திரைப்படங்களில் ஆங்காங்கே காட்சிகளாக தெருக்கூத்து பதிவு செய்யப்பட்டது. ஜமாவில் முழுமையாகவே தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலைப் படம் பிடித்தது முதலில் பாராட்ட வேண்டிய ஒன்று.
அதிலும், குறிப்பாக பெண் வேடமிடும் கலைஞர்களின் மனநிலை அவர்கள் சந்திக்கும் சூழ்நிலை அவர்களது நடை, உடை, பாவனை என இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத மனிதர்களை திரையில் காண்பித்தது எளிதாகப் பாராட்டிவிட்டு மட்டும் செல்லவேண்டிய விஷயமில்லை. அத்தனை நுணுக்கங்களை சேர்த்து இருக்கிறார்கள்.
பெண் பார்க்கப் போகும் இடத்தில் பெண்ணுக்கு சேலை கட்டுவது தொடர்பான குறிப்புகளைச் சொல்லும் காட்சி ஒன்று, அந்த அந்தக் கலைஞன் அந்தக் கலையில் எவ்வளவு ஆழத்திற்கு சென்றிருக்கிறான் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
நாயகன் பெண் வேடம் போடுவதற்கும் பண்ணையாளராக வேலை செய்வதற்குமான வேறுபாட்டை காண்பிப்பதில் அத்தனை மெனக்கடல்கள் தெரிந்தது. நடித்திருந்த அத்தனை பேருமே தெருக்கூத்துக் குடும்பமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
தெருக்கூத்துக் கலை வளரும் விதமாக யாரேனும் ஒரு சிறிய வேலை செய்தால்கூட முதல் ஆளாகச் சென்று வரவேற்பேன். அவ்வகையில் ஜமா திரைப்பட குழுவினரை மனதாரப் பாராட்டி மகிழ்கிறேன் என்கிறார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.