‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து வெளியான, ஓடாத படங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வது வழக்கம். அவரது ‘பாபா’ படமே பிரச்சினையை எதிர்கொண்டது. இப்போது ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படத் தயாரிப்பாளர் ‘செக்’ மோசடி விவகாரத்தில் சிக்கி உள்ளார்.
என்ன விவகாரம்?
ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது.
இந்தப் படத்தை ‘மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது.
படத்தை வெளியிட ‘ஆட் பியூரோ அட்வர்டைசிங்’ எனும் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனம் கடன் பெற்றிருந்தது.
இந்தக் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், மீடியா ஒன் நிறுவனம் 5 கோடி ரூபாய்க்கான காசோலையை ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் வழங்கியிருந்தது.
வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி விட்டது. இதையடுத்து, மீடியா ஒன் நிறுவனம் மீதும், அதன் இயக்குநர் முரளி மனோகர் மீதும் ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவன உரிமையாளர் அபிர்சந்த் நஹர், காசோலை மோசடி வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளம் நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது.
7 கோடியே 70 லட்சம் ரூபாயை இழப்பீடாக அபிர்சந்த் நஹருக்கு வழங்குமாறு முரளி மனோகருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து முரளி மனோகர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில், முரளியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அபிர்சந்த் நஹர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
“காசோலை மோசடி வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் விதிக்கும் இழப்பீட்டு தொகையில் 50% தொகையை செலுத்துமாறு நிபந்தனை விதித்தே தண்டனை நிறுத்தி வைக்கப்படும்
ஆனால், இந்த வழக்கில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படாமல் முரளி மனோகரின் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது – எனவே, அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என்று அபிர்சந்த் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, “ஏற்கனவே 8 கோடியே 99 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்டதாக முரளி மனோகர் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே, மீதமுள்ள கடன் தொகையான 1 கோடியே 1 லட்சம் ரூபாயை 4 வாரங்களில் அல்லிகுளம் நீதிமன்றத்தில் முரளி மனோகர் செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
“இந்தத் தொகையை செலுத்தாவிட்டால், தண்டனையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தானாக ரத்தாகி விடும் – சிறை தண்டனை தொடர்பாக விசாரணை நீதிமன்றம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்’’ எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
– பாப்பாங்குளம் பாரதி.