Take a fresh look at your lifestyle.

‘இந்தியன்-2’ படத்தைப் பாராட்டிய ரஜினி!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும், ‘உலக நாயகன்’ கமல்ஹாசனும் உச்ச நிலையை எட்டிய பின், அவர்களை வைத்து படம் இயக்கிய சொற்ப இயக்குநர்கள் பட்டியலில் இடம் பெறுபவர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர்.

தனது மூன்றாவது படத்திலேயே கமலஹாசனை நடிக்க வைக்கும் வாய்ப்பு கிட்டியது ஷங்கருக்கு. அதுதான் ‘இந்தியன்’. ஐந்தாவது படத்திலேயே ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பும், ஷங்கருக்கு நெருங்கி வந்தது.

ஆனால் சில காரணங்களால் அது, நிகழாமல் போய் விட்டது. அந்தப் படம் – ‘முதல்வன்’.

எனினும் பிற்காலங்களில் ரஜினியுடன் இணைந்து ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0′ ஆகிய மூன்று மெகா ஹிட் சினிமாக்களைத் தொடர்ச்சியாக கொடுத்தார் ஷங்கர்.

இந்த நிலையில் கமல்ஹாசனுடன் இணைந்து ஷங்கர் ‘இந்தியன்-2 படத்தை உருவாக்கினார்.

அண்மையில் தியேட்டர்களில் வெளிவந்த இந்தப் படம், கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. எனினும் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு அமோக வரவேற்பு உள்ளது. கடந்த 10 நாட்களில் 150 கோடி ரூபய் வசூலித்துள்ளது இந்தியன் -2 .

இந்தப் படத்தை ரஜினிகாந்த் வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.

கேரளாவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு விட்டு, சென்னை திரும்பினார். அவரை விமான நிலையத்தில் சந்தித்த செய்தியாளர்கள், ‘கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ திரைப்படம் எப்படி உள்ளது?’ என கேள்வி எழுப்பினர்.

இதற்கு ரஜினிகாந்த், இந்தியன்-2 படத்தைப் பார்த்தேன் – நன்றாக இருக்கிறது என்று புன்னகை பொங்க பதிலளித்தார். தொடர்ந்து ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் குறித்தும் வினாக்கள் எழுப்பப்பட்டன.

‘வேட்டையன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவாகவில்லை – படத்தின் டப்பிங் பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்து விட்டு, தனக்கே உரிய ஸ்டெய்லில், விமான நிலையத்தை விட்டுச் சிட்டாகப் பறந்தார்.

‘இந்தியன் – 2′  படத்தை ரஜினி பாராட்டியதை, கோடம்பாக்கத்தில் சிலர் விவாதப்பொருளாக்கி விட்டனர்.

‘கமலுக்கு ரஜினிகாந்த் நெருங்கிய நண்பர் – இதனால் நண்பர் படத்தை விட்டுக்கொடுக்காமல் பேசியுள்ளார், ரஜினி’ என ஒரு தரப்பு சமூக வலைத்தளங்களில் கொளுத்திப்போட்டுள்ளனர்.

இன்னொரு தரப்பு, ‘இந்தியன்-2′ படத்தை எடுத்த லைக்கா நிறுவனம் தான், ‘வேட்டையன்’ படத்தையும் தயாரிக்கிறது – எனவே, கமல் படத்தை விட்டுக்கொடுக்காமல் ரஜினி பேசி இருக்கிறார்’ என்கிறது.

நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள். அதுபோல் ஒரு படைப்பு மீதும் இரு வேறு கருத்துகள் இருப்பது சகஜம் தானே?

– பாப்பாங்குளம் பாரதி.