இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள ‘பன் பட்டர் ஜாம்’ படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
சாதாரணமாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேப்பரிலும், சோசியல் மீடியாவிலும் வெளியிடுவதுதான் வழக்கம்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக இப்படத்தின் 30 அடி உயரம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள உயர்ந்த சுவரில் மேலிருந்து கீழாக இறக்கி மீடியா முன்பாக வெளியிட்டது புதுமையாக இருந்தது.

பின்னர் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் ராகவ் மிர்தாத்: “பொதுவாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நட்சத்திரங்கள் தான் வெளியிடுவார்கள்.
ஆனால் எனது முதல் படத்திற்கு பத்திரிகையாளர்கள் கொடுத்த ஆதரவு காரணமாக அவர்கள் முன்னிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்தேன்.
இப்படி ஒரு தயாரிப்பாளர் இருந்தால், நாம் நினைத்ததை நினைத்தபடி எடுக்கலாம் என்று சொல்லும் விதமாக சினிமாவின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட தயாரிப்பாளர் என்பதால் படத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சரியாக செய்து கொடுத்தார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரை எனக்கு அறிமுகப்படுத்தியதும் இதில் கதாநாயகனாக ராஜுவை உள்ளே கொண்டு வந்ததும் நண்பர் சதீஷ் தான். அவர் இந்தத் திரைப்படத்தின் வடிவமைப்பாளர்.
இந்தப் படத்தின் கதையை இரண்டு மணி நேரம் கேட்டதும் ராஜு உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்தப் படத்தின் கருவை சொல்லும் விதமாக இதன் போஸ்டர் இருக்க வேண்டும் என நினைத்து கிட்டத்தட்ட 50 நாட்கள் எடுத்துக்கொண்டு கைகளாலேயே வரையப்பட்ட போஸ்டர் தான் இது.
வாழ்க்கையில் நிறைய போராட்டம் நடக்கும். எல்லோருடைய மனதிலும் ஒரு போர்க்களம் இருக்கிறது. பல பிரச்சனைகளால் நாம் அன்றாட வாழ்க்கையை அனுபவிக்காமலேயே நாளை பார்த்துக் கொள்வோம் என கடந்து செல்வோம்.
ஆனால் திடீரென ஒருநாள், நாளை என்பதே இல்லாமல் போய்விடும். அதனால் அந்த கணத்தின் சந்தோஷத்தை அப்போதே அனுபவிக்க வேண்டும் என்பதைத்தான் இந்தப் போஸ்டர் மூலமாக சொல்ல நினைத்தேன்” என்றார்.
நாயகன் ராஜு: வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மட்டுமல்ல பத்திரிகையாளர்களிடமும் பொய் சொல்ல கூடாது என்று நினைக்கிறேன்.

வாய்ப்பு தேடிய காலகட்டத்தில் இந்தப் பகுதியில் இருந்த அட்ரஸ் கார்த்திக் என்பவர் மூலமாக பல கம்பெனிகளில் வாய்ப்பு தேடிய எனக்கு பிக்பாஸில் ஒரு வெற்றி வந்த பிறகு, கதை சொல்கிறேன் கேட்கிறீர்களா என வாய்ப்பு தேடி வந்தது.
என்னை பொறுத்தவரை நான் ஒரு கதையை கேட்டு அதில் குறை நிறைகளை சொல்ல வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. என்னைத் தேடி வரும் ஒவ்வொரு வாய்ப்பும் எனக்கு தேவதை மாறித்தான்.
அதனால் எந்த தேவதை கை கொடுத்தாலும் அந்த தேவதையின் கையை இறுகப்பிடித்துக் கொண்டு மேலே வந்து விட வேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக இருந்தது.
பிக்பாஸ் முடிந்து சினிமாவுக்கான முயற்சி மேற்கொண்ட போது பலரும் பலவிதமாக நடிப்பு ஆலோசனைகள் கூறி அதிலேயே ஒரு வருடத்திற்கு மேல் போய்விட்டது.
ஒரு கட்டத்தில் நானே எனக்காக படம் பண்ணலாம் என்று நினைத்து என்னுடைய கெட்டப்பை மாற்றி என் வீட்டிலேயே என்னை அடையாளம் புரியாத அளவுக்கு ஆளே மாறிப்போனேன். அதன் பிறகு நம்மிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், நம்மை எப்படி பார்க்க விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு நடித்த படம் தான் இந்த ‘பன் பட்டர் ஜாம்’.
இந்தப் படம் தாய்க்குலங்களுக்கு ரொம்ப பிடித்த படமாக இருக்கும். புராணக் கதைகளில் எல்லாம் மனிதர்களின் தலை எழுத்தை நான்கு தலை கொண்ட பிரம்மன் எழுதுகிறார் என சொல்வார்கள்.
அதுபோல எனக்காக கதையை எழுதிய இயக்குநர், இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் என நான்கு தலைகள் தான் என்னுடைய தலையெழுத்தை தீர்மானிக்க போகிறீர்கள்” என்றார்.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நடிகர் ராஜு:
‘பன் பட்டர் ஜாம்’ என்றால் நான் ஒரு நினைப்பில் இருந்தேன்.. ஆனால் இந்தப் படத்தில் என்னை கதாநாயகியை தொடவே விடவில்லை. அவர் ஒரு பக்கம் தனியாக நடித்துக் கொண்டிருந்தார். நான் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தேன்.
இந்தப் படத்தில் பன் என்றால் அது இயக்குநர் தான். மீதி நாங்கள் எல்லோரும் பட்டர் ஜாம் என்று சொல்லலாம்.
பிக்பாஸ் முடிந்து வெளியே வந்ததுமே ஹீரோ ஆகிவிடலாம் என்கிற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை.
ஏனென்றால் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்ததால் ரியாலிட்டி என்னவென்று எனக்கு தெரியும். எப்போதுமே கதை தான் ஹீரோ.
கதை சரியாக இருந்தால் மட்டும்தான் ஒரு நல்ல நடிகன் உருவாக முடியும் என்பதை நான் திடமாக நம்புகிறேன்.
ஐந்து வருடத்திற்கு முன்பாக எஸ்.ஜே சூர்யாவிற்காக ஒரு கதை எழுதி வைத்திருந்தேன். அதில் நீயே நடி என்று கூறி எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அதை எழுதுவதற்காக மற்ற விஷயங்களில் இருந்து ஒதுங்கி சென்றதால் நாட்கள் போனதே தெரியவில்லை.
அதிலேயே கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. அதன் கடைசி பகுதியை எழுதும்போது, நமக்கு யாராவது ஒரு கதையுடன் வந்தால் அழகாக நடித்துவிட்டு போகலாமே என்று நினைத்த சமயத்தில் தான் இந்தப் படம் என்னை தேடி வந்தது.
ஒரு நடிகனாக வேண்டுமென்றுதான் சென்னைக்கு வந்தேன். வாய்ப்பு கிடைப்பது கஷ்டமாக இருக்கவே, நமக்கான கதையை நாமே எழுதி படத்தை இயக்கிக் கொள்ளலாம் என்று தான் பாக்யராஜ் சாரிடமும் நெல்சனிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன்.
ஆனால் நடித்து விடலாமே என்று நினைக்கும் அளவிற்கு டைரக்ஷன் பணி கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. அதே சமயம் பிக்பாஸ் முடிந்தவுடன் நானே எழுதி, இயக்கி, நடிக்கும் விதமாகத்தான் வாய்ப்பு உருவானது.
அதில் நீண்ட காலம் எடுத்துக் கொண்டதும், மக்கள் நம்மை மறந்து விடுவார்கள் என்று தான் இந்த பட வாய்ப்பு வந்ததும் நடிகராக மாறிவிட்டேன். எது எப்போது நடக்குமோ, அப்போது நடக்கும் என்று நம்புகிறேன்.
விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தபோது அதன் இயக்குநர் ஜோஷ்வா மூலமாகத்தான் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நீங்கள் நடிகர் கவினுக்கு போட்டியா என்றால் அப்படி எல்லாம் எதுவும் இல்லை.
கவின் எப்படிப்பட்ட கடின உழைப்பாளி, அவருக்குள் என்ன இருக்கிறது என்பதை நான் அருகில் இருந்து பார்த்தவன். இயக்குநருக்கு என்னை பிடித்திருந்தால் இந்தப் படத்தில் நடித்துள்ளேன். படம் வெளியானதும் உங்களுக்கு பிடித்திருந்தால் அடுத்தக் கட்டத்திற்கு செல்வேன்” என்றார்.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இயக்குநர் ராகவ்:

“வாழ்க்கையில் பல பேர் கடந்த காலத்தை சுமந்து கொண்டே நிகழ்காலத்தை வாழ தவறி விடுகின்றனர். அப்படி எல்லாம் இல்லாமல் அந்தக் கணத்தை அப்போதே வாழ்ந்து விடுவது நல்லது என்பதைத்தான் இந்த பன் பட்டர் ஜாம் சொல்கிறது.
அதைத்தான் இந்தப் போஸ்டர் மூலம் வெளிப்படுத்த முயற்சித்துள்ளோம். இந்தப் படத்தின் திரைக்கதையில் ஒரு உணவுப்பொருள் தேவைப்பட்டது. எல்லோருக்குமே தங்களது குழந்தை பருவத்தில் ஒரு உணவு நினைவில் இருக்கும்.
நீண்ட நாள் கழித்து அதை பார்க்கும்போது உங்களது பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வந்து விடும். இந்தப் படத்தில் அப்படி படத்தில் கருத்தை உருவகமாக சொல்வதற்கு எளிமையான வழியில் தேவைப்பட்ட உணவுப் பொருளாக பன் பட்டர் ஜாமை தேர்வு செய்தோம்.
படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கதைக்கான ஒரு வரி கருவுடன் என்னிடம் வந்தார். அவர் சொன்ன அந்தக் கருவில் ஒரு ஸ்பார்க் இருந்தது. அதை ஒரு முழு ஸ்கிரிப்ட் ஆக மாற்றும் அளவிற்கு அதில் விஷயம் இருந்தது. அப்படித்தான் இந்தக் கதை உருவானது” என்றார்.