ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் சினிமாவில் வளர்ந்த ஆரம்பக் காலத்தில் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, அலாவுதீனும் அற்புத விளக்கும், அவள் அப்படித்தான், ஆடுபுலி ஆட்டம், தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும் உள்பட சுமார் 13 படங்களில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு தனித்தனியாக நடிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் மும்பையில் நடந்த இந்தியன்-2 பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், தனக்கும் ரஜினிக்கும் உள்ள நட்பை நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார்.
இதுகுறித்து பேசிய கமல்ஹாசன், “எனக்கும் ரஜினிக்கும் இருக்கும் தொடர்பு புதிய கூட்டணி அல்ல. நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நிறையப் படங்களில் நடித்திருக்கிறோம். ஒரு கட்டத்தில் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம்.
மற்ற போட்டியாளர்கள் போல் நாங்கள் அல்ல. எங்கள் இருவருக்குமே ஒருவர்தான் குரு. எனக்கும் ரஜினிக்கும் இடையே பிற நடிகர்களைப் போல் போட்டி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எங்களுக்குள் பொறாமை கிடையாது.
எங்கள் இருவருடைய பாதைகளும் வெவ்வேறாக இருக்கிறது. ஆனாலும் நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டது கிடையாது. இது நாங்கள் இருவரும் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தம்” என்றார்.
-நன்றி: தினந்தந்தி.