1967ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி திரைக்கு வந்த காவல்காரன் திரைப்படத்தின் ஆரம்ப காட்சியே குத்துச் சண்டை தான்.
அதில் ஆப்ரிக்க வீரர் கொம்பேவை வீழ்த்துவார் மக்கள் திலகம். அந்தப் போட்டியின் இறுதியில் நான் ‘சார்ப்பட்டா பரம்பரை’ என சொல்வாருன்னு ‘நாக் அவுட் ஆறுமுகம்’ என்பவர் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார்.
அதே போல 41 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு முதல்வராக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இருந்தபோது 1980-ம் ஆண்டு தமிழ்நாடுக்கு வந்தார் குத்துச்சண்டை வீரர் முகமது அலி.
சென்னை அமெச்சூர் பாக்சர்கள் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்பதற்கான பயணம் அது.
அவருடன் சண்டையிட முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியனான ஜிம்மி எல்லிஸ் என்பவரும் உடன் வந்திருந்தார்.
முதல்வர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், ரசிகர்களும் முகமது அலிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தன்னை வரவேற்க கூடியிருந்த மக்கள் திரளைக் கண்டு வியந்த முகமது அலி, “என்னை வரவேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதைப் பார்த்து நெகிழ்ச்சி அடைகிறேன். என்மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை எனது வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாப்பேன்” என்று தழுதழுத்தக் குரலில் கூறினார்.
சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் குத்துச்சண்டை போட்டி நடந்தது. சுமார் இருபதாயிரம் பேர் திரண்டிருந்தனர்.
முகமது அலி அரங்கினுள் நுழைந்தபோது அரங்கமே கரகோஷங்களால் அதிர்ந்தது.
ஜிம்மி எல்லிஸ் உடன் மோதிய முகமது அலி சென்னையில் பயிற்சிமுறை பாக்சர்களாக இருந்த சிலருடனும் விளையாட்டாக மோதினார்.
தமிழ்நாட்டின் அப்போதைய மாநில குத்துச்சண்டை சாம்பியனான திருவள்ளூரைச் சேர்ந்த ராக்கி பிராஸ் என்பவருடனும் முகமது அலி மோதினார்.
‘முகமது அலியுடன் மோதினார்’ என்கிற ஒரே காரணத்திற்காகவே எட்டாம் வகுப்பு படித்த ராக்கி பிராஸ்க்கு தெற்கு ரயில்வேயில் கலாசி வேலை கிடைத்தது. எழும்பூர் ரயில்வே நிலையத்தில் கலாசியாக வேலை பார்த்து பின் பயணிகளுக்கு வழிகாட்டுபவராக உயர்ந்தார் ராக்கி பிராஸ்.
ஷோ பைட் போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் எம்.ஜி.ஆர். “எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்…?” என அலியிடம் கேட்டார்.
அதற்கு அலி, “சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே… அது எங்கு கிடைக்கும்?” என்றார்.
விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற நம் தலைவரிடம், இப்படி ஒருவர் கேட்டால், அதுவும் உலக பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா? அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது.
ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளைச் சோறு, மீன் குழம்பு, முட்டைக் குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், பாயாசம் என விதவிதமான உணவு வகைகள் அன்று முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.
உணவு அருந்தியபின் “உணவு எப்படி இருந்தது” என தலைவர் எம்.ஜி.ஆர் கேட்டாராம்.
அதற்கு முகமது அலி, “எனக்கு உலகில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவைத் தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அது என்னைக் கவர்வதற்கானதாக இருக்கும். நீங்கள் அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான்” என்று நெகிழ்வாக கூற, எம்.ஜி.ஆர் நெகிழ்ந்து நின்றாராம்.
முகமது அலியின் சென்னை விசிட் இப்படித்தான் நெகிழ்வாக இருந்தது.
மக்கள் திலகம் பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி தான் முகமது அலிக்கும் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.