Take a fresh look at your lifestyle.

ஜானகியும், மாதுரிதேவியும் இணைந்ததால் கிடைத்த வெற்றி!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ‘மந்திரி குமாரி’ படத்துக்குப் பிறகு, ‘தேவகி’ என்ற சமூகப் படத்தைத் தயாரித்தது. அந்தப் படத்தில் கை முடமான ஒரு கணவன், அந்தக் கணவனைத் தெய்வமாகக் கருதும் ஒரு பத்தினிப் பெண், அவளுக்கு ஒரு தங்கை.

நவீன நடைமுறையிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் வேகமான எண்ணம் கொண்ட புதுமைப் பெண் இந்த வேடங்களுக்கு நடிகர், நடிகைகளைத் தேடும் பணியில், அப்போது மாடர்ன் தியேட்டரில் டி.ஆர்.எஸ் அவர்களுக்கு நெருங்கிய நண்பராகவும், நிர்வாகி ஆகவும் இருந்த ‘கொடாக்’ சீனிவாசன் என்பவர் ஈடுபட்டார்.

இறுதியாக, அவர் அடிக்கடி விமானப் பயணத்தை மேற்கொண்ட காரணத்தால், விமானத்தில் பணியாற்றியதாக இரு பெண்மணிகளைச் சேலம் ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்தார்.

‘தேவகி’ படத்துக்கு நான் (கலைஞர்) எழுதிய வசனங்களை அவர்களிடம் கொடுத்து, ஒத்திகையில் பேசுமாறு டி.ஆர். சுந்தரம் கூறினார்.

அந்த பெண்மணிகளாலும் அந்த வசனத்தைப் புரிந்துகொண்டு பேச முடியவில்லை. எனவே, வசனமே சரியாக எழுதப்படவில்லையென்று அந்தப் பெண்மணிகள் கூறிவிட்டனர்.

“அன்னை காவேரி! பொன்னையும் மண்ணையும் சுமந்து செல்லும் உன் நீர்த்தோள்களிலே என்னையும் எடுத்துப் போ!”

இதை அவர்களால் பேச முடியவில்லை. பிறகு, சாதாரண வசனங்களும் தரப்பட்டன. அவற்றையும் அவர்களால் பேச இயலவில்லை!

அவர்கள்தான் சந்தியா, வித்யா என்ற சகோதரிகள்.

பின்னர், அந்தப் பாத்திரங்களில் வி.என். ஜானகியும் மாதுரிதேவியும் நடித்தார்கள். படம் மகத்தான வெற்றிபெற்றது.

– நன்றி: கலைஞர் 100 – விகடனும் கலைஞரும் நூலிலிருந்து ஒரு கட்டுரை.