Take a fresh look at your lifestyle.

35 – அதகளம் செய்யும் நிவேதா தாமஸ்!

186

சிறு வயதில் நமது உலகில் மகிழ்ச்சி தந்த விஷயங்கள் என்ன? நம்மைச் சோகத்தில் ஆழ்த்தியவை என்ன? ஒவ்வொரு மனிதருக்கும் அந்த ‘லிஸ்ட்’ வேறுபடும். ஆனால், அதையும் மீறி ஒருவரது மகிழ்ச்சியும் பயமும் எதைச் சார்ந்திருந்தன என்பதை அறிவது அனைவரையும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும்.

அந்த வகையில், கணித பாடத்தில் ‘பூஜ்யம்’ மதிப்பெண் பெறும் ஒரு குழந்தையின் உலகைக் காண்பித்த ‘35’ தெலுங்கு பட ட்ரெய்லர் சட்டென்று ஈர்த்தது. ’இந்தப் படம் நிச்சயமாக நம்மை பால்யத்திற்கு அழைத்துச் செல்லும்’ தோன்றியது.

புதுமுக இயக்குனர் நந்த கிஷோர் இமானி இயக்கியுள்ள இப்படத்தில் நிவேதா தாமஸ், விஸ்வதேவ் ரச்சகொண்டா, பிரியதர்ஷி, பாக்யராஜ், கௌதமி உடன் குழந்தை நட்சத்திரங்களான அருண் தேவ் பொதுலா, அபய் சங்கர் இருவரும் நடித்துள்ளனர்.

எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது ‘35’?!

‘பூஜ்யமான’ உலகம்!

திருப்பதியில் வாழ்ந்து வரும் சரஸ்வதி – பிரசாத் தம்பதியருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் அருண் ஆறாம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவது மகன் வருண் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.

பிரசாத் அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் நடத்துனர் ஆக வேலை பார்க்கிறார். சரஸ்வதி வீட்டை நிர்வகிக்கிறார்.

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் போனதால், மேற்கொண்டு படிக்கிற எண்ணமே சரஸ்வதியிடம் இல்லை. அதனால், தனது பிள்ளைகள் இருவரும் நன்றாகப் படிக்க வேண்டுமென்பது அவரது விருப்பமாக இருக்கிறது.

அதற்கேற்ப, வருண் படிப்பில் சுட்டியாக இருக்கிறார். மூத்த மகன் அருணோ கணிதம் தவிர்த்து அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெறுகிறார். கணித பாடத்தில் ‘பூஜ்யம்’ தான் அவரது மதிப்பெண்ணாக இருக்கிறது. ஆனாலும், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அவர் தேர்ச்சியடைகிறார்.

அருணின் உயிர் நண்பனான பவன் எப்போதும் கணிதத்தில் நூறு மதிப்பெண் வாங்குகிறார். அது ஒருபோதும் அருணிடத்தில் தாக்கம் ஏற்படுத்துவதில்லை. இருவரது நட்பிலும் பிரிவை உருவாக்குவதில்லை.

ஆனால், புதிதாக வரும் ஆசிரியர் சாணக்யாவினால் (பிரியதர்ஷி) அவர்களது நட்பில் விரிசல் விழுகிறது. ‘இவனோட சேர்ந்தா நீயும் மார்க் குறைஞ்சிடுவ’ என்று அருணை கடைசி பெஞ்சில் அவர் அமர வைக்கிறார். அந்த கோபத்தில், சாணக்யாவின் பைக்கை ‘இன்ஸ்டால்மெண்ட்’டில் சேதப்படுத்துகிறார் அருண். ஒருநாள் அது சாணக்யாவுக்குத் தெரிய வருகிறது. அதன்பிறகு, பவன் நெல்லூரில் வேறு பள்ளியில் சேர்கிறார்.

பவன் பிரிவு அருணை ரொம்பவே அலைக்கழிக்கிறது. ஒருகட்டத்தில், தலைமையாசிரியர் அறையில் பிரசாத்தைச் சந்திக்கிறார் சாணக்யா. ‘உங்கள் மகன் ஐந்தாம் வகுப்பில் படிப்பதே சரி’ என்கிறார். மகன் கணிதம் முதற்கொண்டு அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டுமென்று, அதற்குச் சம்மதிக்கிறார் பிரசாத்.

அதையடுத்து, சகோதரர் வருண் உடன் ஒரே வகுப்பில் பயிலத் தொடங்குகிறார் அருண். அங்கும் அவருக்கு கடைசி பெஞ்சையே தருகிறார் சாணக்யா.

வாழ்வே விரக்தியாகத் தெரிய, வெறுமையை உணரத் தொடங்குகிறார் அருண். அந்த நேரத்தில், புதிதாக அந்த வகுப்புக்கு வருகிறார் மாணவி கிரண். அவர், பள்ளி தலைமையாசிரியரின் பேத்தி. தாய்க்கு வேலை மாற்றலானாதால் திருப்பதிக்கு அவரது குடும்பம் இடம்பெயர்ந்திருக்கிறது.

வந்த முதல் நாளே, அருணுடன் கடைசி பெஞ்சில் அமர்கிறார் கிரண். அன்று முதல் இருவருக்கும் இடையே நட்பு மலரத் தொடங்கிப் பூக்க ஆரம்பிக்கிறது.

தலைமையாசிரியரின் பேத்தி என்பதால் கிரண் அருணுடன் நட்பு பாராட்டுவதை ஆசிரியர் சாணக்யாவால் கட்டுப்படுத்த முடிவதில்லை. இந்த நிலையில், ஒருநாள் சாணக்யா விபத்தில் சிக்கி அடிபடுகிறார். அதற்குக் காரணம் அருண் என்று தெரிய வருகிறது. அதையடுத்து, அவரைப் பள்ளியில் இருந்து நீக்க நிர்வாகம் முடிவு செய்கிறது.

அதேநேரத்தில், திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் வேத பாராயண வகுப்பில் அருணைச் சேர்க்க முடிவு செய்கிறார் பிரசாத். அதில் சரஸ்வதிக்குக் கொஞ்சமும் இஷ்டமில்லை.

இந்த நிலையில், அருணுக்குச் சாதகமாக கிரணும் ஐந்தாம் வகுப்பில் இருக்கும் சக மாணவர்களும் ஒரு முடிவெடுக்கின்றனர். அதனால், சாணக்யா மட்டுமல்லாமல் தந்தை பிரசாத்தின் வெறுப்பையும் சம்பாதிக்கிறார் அருண். தாய்க்கும் தந்தைக்கும் இடையே பேச்சுவார்த்தை அற்றுப்போகத் தான் காரணம் என்று அறிந்து வருந்துகிறார்.

அந்தச் சூழலில், ஆண்டிறுதித் தேர்வில் கணிதத்தில் 35 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அதே மாணவர்களோடு அடுத்த வகுப்புக்குப் பயணிக்க முடியும் என்ற இக்கட்டான நிலைமைக்கு ஆளாகிறார் அருண். அப்போது, ’தாய் சரஸ்வதியிடம் நீயே எனக்கு கணிதம் சொல்லித்தா’ என்கிறார் அருண்.

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத சரஸ்வதி, அருணுக்கு கணித பாடம் சொல்லித் தந்தாரா? பூஜ்யம் மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட அருண், அந்த தேர்வில் 35 மதிப்பெண் வாங்கினாரா என்று சொல்கிறது ‘35’ படத்தின் மீதி.
இந்த படத்தின் டைட்டிலில் ‘சின்ன கத காது’ என்ற டேக்லைனும் உண்டு. அதற்கேற்ப, ‘இது சின்ன கத காது’ என்று பிரசாத் பாத்திரம் அடிக்கடி ஒரு ‘டயலாக்’கை உதிர்க்கிறது. ‘இது சின்ன விஷயம் கிடையாது’ என்பதாக அது அர்த்தம் தருகிறது. திரைக்கதையின் வெவ்வேறு இடங்களில் அந்த டயலாக் பயன்படுத்தப்படுவது, இப்படத்தோடு நாம் ஒன்றுவதற்கான காரணிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

குடும்பச் சித்திரம்!

‘35 – சின்ன கத காது’ படத்தில் சரஸ்வதியாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ், படம் முழுக்க ‘அதகளம்’ செய்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. கணவன், குழந்தைகளே தனது உலகம் என்றிருக்கும் ஒரு இளம்பெண், எப்படித் தனது வீட்டில், வெளியிடங்களில் தோற்றமளிப்பாரோ, அதனை 100 சதவீதம் அப்படியே திரையில் காட்டியிருக்கிறார். அந்த மாயாஜாலம் தான் இப்படத்தின் பெரும்பலம்.

ஒரு நாள் கூடத் தன்னிடம் கோபத்தை வெளிக்காட்டாத கணவன், முதன்முறையாக அவ்வாறு நடந்துகொள்வதை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதைக் காட்டுகிற காட்சியில் நிவேதாவின் நடிப்பு மனதைக் கொள்ளை கொள்கிறது. மகிழ்ச்சி, அழுகை, கோபம் என்று காட்சிகளுக்குத் தக்கவாறு ‘வெரைட்டி’ காட்டும்போது, எண்பதுகளில் இருந்த சரிதா, ரேவதி, ராதிகா உட்படப் பல திரை நட்சத்திரங்கள் நம் கண் முன்னே வந்து போகின்றனர்.

நாயகன் விஸ்வதேவுக்கு இப்படத்தில் பெரிதாக வேலை என்று நமக்குத் தோன்றலாம். அதுவே, அவரது நடிப்புக்கான அங்கீகாரம். ‘அண்டர்பிளே’ செய்து கதையில் தனது பாத்திரத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்த்தியிருப்பது அழகு. மனைவியிடம் பேசாவிட்டாலும், அவருக்காக ஒரு ‘பேக்’ வாங்கி வரும் காட்சியில் விஸ்வதேவின் நடிப்பு சிறப்பு.

போலவே, சிறுவன் அருணாக வரும் அருண்தேவ் பொதுலாவின் நடிப்பு பல காட்சிகளை உயிர்ப்புமிக்கதாக மாற்றுகிறது. அவரது சகோதரராக வரும் அபய் சங்கர் இடம்பெறும் காட்சிகள் குறைவென்ற போதும், ஒரு பாத்திரமாகத் தோன்றி கதைக்கு உரமூட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தில் பிரியதர்ஷிக்கு வில்லங்கமான பாத்திரம். கொஞ்சம் பிசகினாலும் கொடூர வில்லனாகிவிடக் கூடிய அபாயம் இருந்தும், ‘பெர்பெக்‌ஷன்’ எதிர்பார்க்கும் ஒரு ஆசிரியராக மட்டுமே அப்பாத்திரமாக அணுகியிருப்பது சிறப்பு.

கிரண் ஆக வரும் சிறுமியின் நடிப்பும் நம்மைப் படத்தோடு ஒன்றச் செய்கிறது.

கௌதமி, பாக்யராஜ் ஆகியோரும் இப்படத்தில் இருக்கின்றனர். பாக்யராஜ் இதில் ‘டப்பிங்’ பேசாத காரணத்தால், அவர் தெலுங்கு பேசுவது நமக்குப் பொருத்தமற்று தெரிகிறது.

நிவேதாவின் சகோதரர் ஆக வருபவர், மாணவ மாணவிகள் என்று பலரது நடிப்பு ஆங்காங்கே நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் ஒரு நடுத்தரக் குடும்பத்து வீடு உயிர்ப்புமிக்கதாகத் திரையில் தெரிகிறது. போலவே, இல்லறத்தை நல்லறத்துடன் பேணுபவர்களாக நாயகனும் நாயகியும் திரையில் ஒளிர்கின்றனர். அதில் ஒப்பனைக் கலைஞரின் பங்களிப்பைப் பாராட்டியே ஆக வேண்டும்.

லதா நாயுடுவின் தயாரிப்பு வடிவமைப்பு, டி.சி.பிரசன்னாவின் படத்தொகுப்பு மற்றும் ஆடை வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ், ஒலி வடிவமைப்பு உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்கள் இயக்குனர் திரையில் காட்ட விரும்பிய உலகை உருவாக்க உதவியிருக்கின்றன.

படம் முழுக்க கர்நாடக இசையலையைப் பரவ விட்டிருக்கிறார் இசையமைப்பாளர் விவேக் சாகர். ஆனால், அது பாமரர்களும் திரைப்படத்துடன் இணையும் வகையில் உள்ளது. பின்னணி இசை மட்டுமல்லாமல், பாடல்களும் கதையை நகர்த்தும்விதமாகவே இருக்கிறது.

இயக்குனர் நந்த கிஷோர் இமானிக்கு இது அறிமுகப் படம். ஆனாலும், படத்தைப் பார்க்கையில் அந்த எண்ணமே நம் மனதைத் தீண்டுவதில்லை.

நாயகியின் கவர்ச்சி தோற்றம், நாயகனின் ஹீரோயிசம், வன்முறை நிறைந்த காட்சிகள், குயுக்தி நிறைந்த திரைக்கதை திருப்பங்கள், திரையில் மிரட்டும் பிரமாண்டம் என்றிருக்கும் சமகால கமர்ஷியல் படங்களுக்கு நடுவே, ஒரு குடும்பச் சித்திரத்தைத் தந்திருக்கிறார் நந்த கிஷோர்.

அதுவும், ‘அழுகாச்சி’ காட்சிகளைக் கொண்டு நிறைக்காமல் மிகையற்ற சித்தரிப்பைத் தவிர்த்திருக்கும் அவரது திரைக்கதை ட்ரீட்மெண்ட் பாராட்டுக்குரியது.

இந்தப் படத்தில், நாயகனின் சகோதரராக வருபவரைத் திருப்பதி தேவஸ்தானத்தில் இருப்பவராகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். ‘படிப்பு வரலேன்னா வேத பாராயணம் படிக்க வைக்கலாம்’ என்பது போன்று அப்பாத்திரம் பேசும் வசனங்கள் கொஞ்சம் சர்ச்சைக்குள்ளாகவும் வாய்ப்புண்டு.

தேர்ச்சி பெற்றாரா அருண்?

‘35’ படத்தின் அடிநாதமே, ’சிறுவன் அருண் கணித பாடத்தில் 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றாரா’ என்பதுதான்.

கதையில் காணப்படும் பிரச்சனை, அதனால் ஏற்படும் தாக்கம், பிரச்சனைக்கான தீர்வைக் கண்டறிந்து செயல்படுத்துதல் என்று நகரக்கூடிய திரைக்கதை அமைப்புக்கு நடுவே, அதற்கான கால அவகாசத்தைக் கலைத்துப் போட்டிருக்கிறது இப்படம்.

இந்தக் கதையில் சிறுவன் அருணோடு சேர்ந்து தாய் சரஸ்வதியும் தனது கல்வித்திறனை வெளிக்காட்டுவதற்கான ஒரு வாய்ப்பு உருவாகியிருப்பதாகக் காட்டியிருப்பதே இப்படத்தின் யுஎஸ்பி. அந்தக் காட்சி, இன்றைய பெண்கள் பலரைப் படத்தோடு இறுகப் பிணைக்கிறது. கூடவே, ‘எந்த வயதிலும் எதையும் சாதிக்க முடியும்’ என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.

விலையுயர்ந்த பரிசுகளும், மிகப்பெரிய வாக்குறுதிகளும் மட்டுமே தம் குழந்தைகளைத் திருப்திப்படுத்தி நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கித் தரும் என்று சில பெற்றோர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற காலகட்டத்தில், ஒரு மழைக்காலத்தில் வானவில்லைத் தமது குழந்தைகளுக்குக் காட்டி மகிழ்ச்சியடைகிற ஒரு சாதாரண பெற்றோரைக் காட்டுகிறது ‘35’.

இந்த நாடு, அப்படிப்பட்ட பெற்றோர்களைக் கொண்டே அடுத்த தலைமுறை சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது. அதனை ஏற்றுக்கொள்பவர்கள், நந்த கிஷோர் இமானியின் ‘35’ படத்தைக் கொண்டாடுவார்கள்!

– உதயசங்கரன் பாடகலிங்கம்