திரைத் தெறிப்புகள்-28:
*
கூட்டுக் குடும்ப வாழ்வை வலியுறுத்திப் பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதைக் கொண்டாடும் திரைப்படப் பாடல்களும் வெளிவந்திருக்கின்றன.
1973-ம் ஆண்டு வெளிவந்த ‘அன்புச் சகோதர்கள்’ படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் கீழே உள்ள இப்பாடலை பாடியிருப்பவர் பழம்பெரும் பாடகரான கண்டசாலா.
(“துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே” பாடியது இவர் தான்!)
தெலுங்கு திரையிசையில் உச்சம் தொட்ட, மிகவும் தனித்தன்மை வாய்ந்த அவருடைய குரலில் உருவான இந்த அருமையான பாடலை இயற்றிருப்பவர் கவியரசர் கண்ணதாசன்.
“முத்துக்கு முத்தாக
சொத்துக்குச் சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்குக் கண்ணாக.
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக .
தாயாரும் படித்ததில்லை.
தந்தை முகம் பார்த்ததில்லை.
தாலாட்டுக் கேட்டதன்றி
ஓர் பாட்டும் அறிந்ததில்லை..”
என்கின்ற இந்தப் பாடலை திரைப்படத்தில் பண்பட்ட நடிகரான எஸ்.வி. ரங்காராவ் தன்னுடைய சகோதர்களுடன் நேசத்துடன் கைகோர்த்துப் பாடுவதாக அமைந்திருக்கும்.
ரங்காராவின் முதிர்ச்சியான நடிப்பு அந்தப் பாடல் காட்சிக்கு வலுச் சேர்த்திருக்கும்.
“ஒன்று பட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை
ராஜாக்கள் மாளிகையும்
காணாத இன்பமடா
நாலு கால் மண்டபம் போல்
நாங்கள் கொண்ட சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப் போல்
தீராத வாசமடா
நூற்றாண்டு வாழ வைக்கும்
மாறாத பாசமடா…”
– என்று நிறைவடையும் இந்தப் பாடல் அன்றையக் காலத்துக் கூட்டுக் குடும்பத்துக்கான அன்பும், அரவணைப்புமான குரலை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பது இந்தப் பாடலின் சிறப்பு.
இந்தப் பாடலின் தலைப்பிலேயே ‘முத்துக்கு முத்தாக’ என்று தமிழில் ஒரு திரைப்படம் வெளிவந்து அதுவும் வெற்றி பெற்றிருப்பது இந்தப் பாடலுக்குக் கூடுதல் சிறப்பு.