உலக நாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ஹே ராம்’. கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதில் கமல்ஹாசனுடன் ஷாருக்கான், ராணி முகர்ஜி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளிலும் உருவான இப்படம் போதிய பார்வைகளும் விமர்சனங்களும் கிடைக்காததால் வசூல் ரீதியாக அன்று தோல்விப் படமானது.
ஆனால், நுட்பமான காட்சிகள் வழியாக கமல்ஹாசன் பெரிய திரையனுவபத்தைக் கொடுத்தற்காகவே இன்றும் விமர்சகர்களால் இப்படம் பாராட்டப்பட்டு வருகிறது.

இப்படத்தில், காந்தியைக் கொலை செய்யச் சென்ற சாகேத் ராம் என்பவர் அடையும் மனமாற்றங்களும் மத நல்லிணக்கத்தையும் திரைக்கதையில் திறமையாகக் கையாளப்பட்டிருந்தன.
இளையராஜாவின் “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” பாடல் மற்றும் பின்னணி இசை இப்படத்தின் அழகியலுக்கு மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்தன.
இத்திரைப்படம் இந்தியா சார்பில் அந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சரியாக, இன்றுடன் ‘ஹே ராம்’ வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.