Take a fresh look at your lifestyle.

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் அழகி!

ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான், இயக்குநராக அறிமுகமான படம் ‘அழகி’. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

உதயகீதா சினி கிரியேஷன்ஸ் உதயகுமார் வழங்கிய இந்தப் படம் 2002-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.

தமிழ் சினிமாவின் காதல் திரைப்படங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்தப் படம், முதல் காதலின் நினைவுகளைப் பேசி அனைவரையும் உணர்ச்சிகளில் ஆழ்த்தியது.

இந்தப் படம் இப்போது டிஜிட்டலில் மாற்றப்பட்டு வரும் 29-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதுகுறித்து பேசிய படக்குழு, “தங்கர்பச்சான், தான் எழுதிய ‘கல்வெட்டு’ எனும் சிறுகதையை மையப்படுத்தி, இதன் திரைக்கதையை அமைத்திருந்தார்.

வெளியான காலகட்டத்தில் அதிகம் பேசப்பட்ட இந்தக் காதல் படம் இன்றைய தலைமுறையினருக்கும் பிடிக்கும் என்பதால் மீண்டும் வெளியிடுகிறோம்” என்றனர்.

‘அழகி’ ரீ-ரிலீஸ் ஆவது பற்றி இதில் நடித்துள்ள நந்திதா தாஸ் கூறும்போது, “எனது திரைப் பயணத்தில் ‘அழகி’ ஸ்பெஷல், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், தனலட்சுமி கதாபாத்திரத்துடன் என்னை நன்றாகவே தொடர்புப்படுத்திக் கொண்டார்கள்.

22 வருடங்கள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது அந்த கதாபாத்திரம் இப்போதும் உயிர்ப்பாக இருப்பதை உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

– நன்றி: இந்து தமிழ் திசை