Take a fresh look at your lifestyle.

‘கங்குவா’ படத்தின் 12 நிமிடக் காட்சிகள் நீக்கம்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஞானவேல் ராஜா, தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

படத்தின் முதல் அரைமணி நேரத்தில் இரைச்சல், அதீத சத்தம் இருப்பதாகவும், இது, ரசிகர்களை எரிச்சல் அடையச்செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இதனை சூர்யாவின் மனைவி ஜோதிகாவே ஒப்புக்கொண்டுள்ளார். இணையத்தில் தொடர்ச்சியாக ‘கங்குவா’ படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வெளியான நிலையில் அவர் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார்.

அதில் ‘படத்தின் முதல் அரை மணி நேரம் சரியாக இல்லை – இரைச்சலாக இருக்கிறது – நமது திரைப்படங்களில் பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன.

கங்குவா, முதல் நாளில் முதல் காட்சியில் இருந்து ‘நெகடிவ் விமர்சனங்களை எதிர்கொண்டது வருத்தமளிக்கிறது ‘என ஜோதிகா தெரிவித்திருந்தார்.

இந்த ‘நெகடிவ்’ விமர்சனங்கள் பலன் அளித்துள்ளது. ‘கங்குவா’ படத்திலிருந்து 12 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது. அதிகமாக விமர்சிக்கப்பட்ட படத்தின் ஆரம்பக் காட்சிகளே பெரும்பாலும் வெட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே எதிர்மறை விமர்சனங்களையும் தாண்டி ‘கங்குவா’ படம் இதுவரை உலகம் முழுவதும் 127 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தத் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என இயக்குநர் சிவா பேட்டி ஒன்றில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

– பாப்பாங்குளம் பாரதி.