கென் கருணாஸ் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடிக்க, அனிஷ்மா அனில்குமார், மீனாக்ஷி தினேஷ், பிரியான்ஷி யாதவ், தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.
பர்வதா என்டர்டைமென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோ சார்பில் கருப்பையா ராம், சுலோச்சனா குமார் தயாரித்து இருக்கும் படம்.
2002 ஆம் ஆண்டில் விஜய், சந்தியா, விவேக் நடிப்பில் வின்சென்ட் செல்வா இயக்கி வெளிவந்த ‘யூத்’ படம் விஜய்யின் வெற்றிப் படங்களில் ஒன்று.
படிப்பறிவு இல்லாத காரணத்தால் சொந்தக் குடும்பத்தாலேயே துரத்தி அடிக்கப்பட்ட ஒரு மலையாளிக்கும் (சுராஜ் வெஞ்சாரமூடு), அவனை நம்பி காதலித்து கை கொடுத்து ஆளாக்கிய ஒரு தமிழ்ப் பெண்ணுக்கும் (தேவதர்ஷினி) பிறந்த ஒரே மகனான பிரவீன் (கென் கருணாஸ்), பள்ளிப் படிப்பில் மகா மட்டம்.
அதில் அப்பாவுக்கு வருத்தம் என்றாலும் அம்மா மகனுக்கு செல்லம் கொடுத்து வளர்க்கிறாள்.
பையனின் அடாவடிகளால் பள்ளி முதல்வர் (நளினி) அவன் மேல் நடவடிக்கை எடுத்தால் விஷம் குடிக்க முயற்சி செய்து மகன் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வைக்கும் அளவுக்கு, அம்மாவுக்கு மகன் மேல் பாசம்.
ஆனால், தன்னை ஒரு பெண்ணும் லவ் பண்ணவில்லை என்பதுதான் அவனது ஒரே வருத்தம். ஒரு நிலையில் பழகும் பெண்களை எல்லாம் லவ் பண்ண ஆரம்பிக்கிறான்.

முதலில் ஒரு பெண்ணை (மீனாட்சி தினேஷ்) காதலிக்கிறான். அவளும் காதலிக்கிறாள். அவள் ஊருக்குப் போயிருக்கும் நிலையில் அவனிடம் நெருங்கிப் பழகும் இன்னொரு பெண்ணையும் (பிரியான்ஷி யாதவ்) ‘வரவு’ வைக்கிறான்.
ஒரு நிலையில் முதல் பெண்ணுடனான அவனது காதலை உடைக்க உருவாக்கப்பட்ட சதித்திட்டம்தான் இரண்டாவது பெண்ணின் வரவு என்பது தெரிய வர, முதல் காதலியும் போய் விடுகிறாள்.
எனினும் சலிக்காமல் இன்னொரு பெண்ணை (அனிஷ்மா அனில்குமார்) காதலிக்கிறான்.
அந்தக் காதல் வீடு வரை போகிறது. அம்மா மகனுக்காக அதையும் பொறுத்துக் கொள்கிறாள். அப்பா அம்மாவுக்காக அமைதி காக்கிறார்.
ஒரு நிலையில் மகனுக்காக போராடிப் போராடியே அம்மா நோயாளியாகிறாள். அவன் பள்ளிப் படிப்பும் மோசமாகிறது.
அப்பாவும் முற்றிலுமாக வெறுக்கிறார். எல்லாமும் ஒரு நிலையில் அவனைக் கைவிட, உலகம் புரிகிறது. அந்த நிலையில் அவன் எடுக்கும் முடிவுகளே இந்தப் படம்.
கென் கருணாஸுக்கு இயக்கம் எழுத்து நடிப்பு மூன்றும் வருகிறது. மூன்றிலும் பாஸ் ஆகிறார்.
அனிஷ்மா அனில்குமார், மீனாக்ஷி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என்று மூன்று கதாநாயகிகளும் கலர்ஃபுல்.
தவிர தோழியாக நடித்திருக்கும் அந்த குண்டான கறுப்பழகி நடிகை பிரம்மாதப்படுத்தி இருக்கிறார்
தேவதர்ஷினியும் சுராஜ் வெஞ்சரமூடும் நடிப்பில் அசத்துகிறார்கள். படத்தின் பெரும்பலம் இவர்கள் போர்ஷன்தான்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான். அடிக்கடி நிறைய நிறைய வருவது வேறு ஒரு சுமை. அப்படியெல்லாம் பாட்டுகள் வைக்கும் அளவுக்கு கனமான சிறப்பான காட்சிகள் இல்லாத முதல் பாதி காரணமாக சுமை அதிகமாக தெரிகிறது.

விக்கியின் ஒளிப்பதிவு, நாஷின் படத்தொகுப்பு இரண்டும் பெரிதாகக் குறை இல்லாமல் இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். அதற்கு மேல் கொண்டாட ஒன்றும் இல்லை.
பள்ளிக் காதலை இப்படி புரமோட் செய்வதும் குளோரிஃபை செய்வதும், என்னதான் சினிமா என்றாலும் ஓவர்.
ஒரு நல்ல குணம் மற்றும் அறிவு காரணமாக ஏற்படும் ஈர்ப்பு என்றால் கூடப் பரவாயில்லை. பால் ஈர்ப்பு ரீதியாக மட்டுமே அந்தக் காட்சிகள் இருக்கின்றன.
முதல் பாதிக் காட்சிகள் படு செயற்கை. எல்லோரும் ஓவர் ஆக்டிங். சும்மா நிரப்புவதற்காக வரும் காட்சிகள் எல்லாம் சத்தியமாக சோதனை. ஏன் இந்தப் படத்தில் யாருமே நார்மலாக இல்லை என்ற எண்ணம் கூட வந்தது.
இடைவேளைக்கு அப்புறம் கொஞ்சம் தெளிந்து, கிளைமாக்ஸ் பகுதியில் கனம் சேர்க்கிறது படம் . அந்த வகையில் படம் ஸ்கொர் செய்கிறது.
ஆனால், அதிலும் ஒரு போதாமை இருக்கிறது.
பிரவீனுக்கு காதலி வைக்கும் தேர்வு அவன் நன்மைக்காகத்தான். அதையே ஒரு குறையாக சொல்வது பக்குவமின்மை.

உருப்படாமல் போனால் காதலி மட்டுமல்ல… அப்பா கூடத்தான் காதலி போலவே நடந்து கொண்டு இருப்பார். (உண்மையில், காதலியை விட அப்பா கடுமையாகவே நடந்து கொள்கிறார்).
எனில் காதலி மட்டம்; அப்பா உசத்தி என்பது என்ன நியாயம்? அம்மாவை மட்டும்தானே உயர்த்திப் பிடிக்க முடியும்?
எனினும் பழைய ‘லவ் டுடே’ பாணியில் கொஞ்சம் எழுதி, புதிய லவ் டுடே பாணியில் கொஞ்சம் காட்சிகள் வைத்து உருவாக்கப்பட்டு இருப்பது இந்தப் படத்துக்கு பலமாக மாறி விட்டது.
யூத்… இந்த வாரம் தியேட்டருக்கு போக ஒரே வாய்ப்பு.
— சு. செந்தில்குமரன்