Take a fresh look at your lifestyle.

“ஊரை அடிச்சுப் பிழைக்க வேண்டாம்”!

திரைத் தெறிப்புகள் – 70 :

*

மக்களுடைய பேச்சு மொழியில் அமையும் பாடல்கள் பொதுவாகச் சட்டென்று பிரபலமாகி விடுகின்றன. பாட்டின் உள்ளடக்கத்தைப் பொறுத்தும் பாடல்கள் வெற்றியைத் தொடுகின்றன.

இந்த வரிசையில் 1956-ம் ஆண்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடித்து வெளிவந்த வெற்றிப் படமான ‘மதுரை வீரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற,

“ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?
எண்ணிப் பாருங்க… ஐயா எண்ணிப் பாருங்க…”

– பாடலும் அப்படித் தான்.

கவிஞர் கண்ணதாசனின் வசனத்தில் உருவான இந்தப் படத்தின் வசனங்கள் மட்டுமல்ல, பாடல்களும் எளிமையாகவும் கூர்மையானதாகவும் இருந்தன.

“நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா..
பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா..
மூட்டையடிச்சா உன்னையே விடுவானா?
நெனச்சுப் பாருங்க…
நல்லா நெனச்சுப் பாருங்க…”

இந்தப் பாடலுக்குத் துள்ளலாக இசையமைத்திருப்பார் பழம்பெரும் இசையமைப்பாளரான ஜி. ராமநாதன். இந்தப் பாடலைப் பாடியவர்கள் டி.எம். சௌந்தரராஜனும், ஜிக்கியும்.

“தேட்டை போடும் புள்ளிகளெல்லாம்
கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்..
சிறையில் கம்பி எண்ணணும்.
பூட்டை உடைக்கும் புலியே!
இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க…”

இந்தப் பாடல் காட்சிக்குப் படு துள்ளலாக நடனமாடியிருப்பார்கள் எம்.ஜி.ஆரும், பத்மினியும். கொள்ளையர் கூட்டத்திற்கு இடையே இவர்கள் போய்ப் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தக் காட்சி.

“காலமெல்லாம் வழிப்பறிக் கொள்ளை.
கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை.
கனவில் கூட வேண்டாமையா நல்லாக் கேளுங்க.

ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்.
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்.

ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க.
நாமே வாழ வேணுங்க…”

என்று, உழைத்து நேர்மையாக வாழ்வதை எளிமையாக வலியுறுத்தி நிறைவடைந்திருக்கும் இந்தப் பாடலைக் கேட்கும்போது இப்பாடல் எக்காலத்திலும் பாடுவதற்கு உகந்த பாடலைப் போல் இருக்கிறது.

*

-மணா.