Take a fresh look at your lifestyle.

புன்னகை என்ன விலை?

தேனி அருகே தேவாரத்தில் நான், பாஸ்கர், இளையராஜா, அமர் நான்கு பேரும் ஒரு ஹோட்டலில் சாப்பிடச் சென்றோம்.

தென் மாவட்டங்களில் அந்த நாளில் எல்லா ஹோட்டலிலும் காலையில் கடையைத் திறந்ததும் பல் துலக்கக் கரியும், முகம் கழுவிக்கொண்டதும் நெற்றியில் பூச திருநீறும் வைப்பார்கள்.

எங்களிடம் இருந்த மொத்தக் காசையும் திரட்டி ஆளுக்கு இரண்டு இட்லி சாப்பிட்டோம்.

அப்போது இரண்டு காலும் இல்லாத ஒருவர், தன் சக்கர வண்டியில் ஹோட்டலுக்கு வந்து நெற்றியில் திருநீறு பூசுவதைப் பார்த்தேன். எனக்குப் பரிதாபமாகிவிட்டது.

இரண்டு காலும் இல்லாமல் அவர் என்ன வேலை செய்து பிழைக்க முடியும்? நண்பர்களுக்குத் தெரியாமல் நான் மறைத்துவைத்திருந்த பத்து பைசாவை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

அவர், “எனக்கு எதுக்குப்பா?” என்றார்.

“பரவாயில்லை, வெச்சுக்கங்க” என வற்புறுத்திக் கொடுத்தேன்.

பாஸ்கருக்கு ‘நாம பசியில் இருக்கிற நேரத்தில் இப்படி தானம்செய்ய வேண்டுமா’ என்ற கோபம்.

சிறிது நேரத்தில், கால் அற்ற அவரை ஹோட்டல் பையன் கல்லா பெட்டியில் தூக்கி உட்கார வைத்தான்.

அவர்தான் ஹோட்டல் முதலாளி என்று அப்போதுதான் தெரிந்தது. கல்லாவில் உட்கார்ந்து அவர் என்னைப் பார்த்துப் புரிந்தாரே ஒரு புன்னகை… சான்ஸே இல்லை!

குறிப்பு: ஒரு மகிழ்ச்சியான தருணத்தில், பாரதிராஜா, சிவாஜி கணேசன், ஆர். செல்வராஜ்.

– திரைப்படக் கதாசிரியர் ஆர். செல்வராஜ்
– சந்திப்பு : தமிழ்மகன்
– ஜூனியர் விகடன்- 24.05.2017