‘என்ன இது.. என்ன இது..’ என்று ‘நள தமயந்தி’ பாடலைப் பதைபதைப்புக்குப் பயன்படுத்துகிற அளவுக்குத் தமிழ் திரைப்படங்களில் வன்முறை நிறைந்திருப்பது கடந்த ஆண்டும் தொடர்கதையானது.
கொரோனா காலகட்டத்திற்கு முன்னரே அது வெளிப்பட்டிருக்கிறது என்றபோதும், அப்போதைய ஊரடங்கு தருணங்களில் சில வேற்று மாநில, நாட்டுப் படங்களைப் பார்க்கிற வாய்ப்பினைச் சாதாரண ரசிகர்களிடையே விதைத்ததால் அது குறையாகத் தெரியவில்லை.
இன்னொருபுறம், அப்படிப்பட்ட ரசனையின் சதவிகிதம் மிகக்குறைவு என்பதனைக் கணக்கில் கொள்ளாமல், அதனைத் திரையில் காட்டுவதற்கான ஒரு சாக்காக, அப்படங்களை ஒரு முன்மாதிரியாக நமது இயக்குநர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
வன்முறையைத் திரையில் நிறைத்துத் தங்களது ரசனைகளை ரசிகர்களுக்கானதாக முன்வைத்தார்கள்.
அந்தப் படங்களின் வெற்றி, ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்களென்றே எண்ண வைத்தது. அது சரிதானா? இல்லை என்பதே கடந்த காலத்தின் பதிலாக உள்ளது.
திரையுலகின் ‘கூலி’!
கடந்த ஆண்டு அதிகம் வசூல் சாதனை புரிந்த தமிழ் படங்களாகக் ‘கூலி’, ‘குட் பேட் அக்லி’, ‘டிராகன்’, ‘விடாமுயற்சி’, ‘ட்யூட்’, ‘மதராஸி’, ‘தக் லைஃப்’, ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘மாமன்’, ‘தலைவன் தலைவி’, ‘பைசன் காளமாடன்’ படங்களைச் சொல்கின்றனர் திரையுலகினர்.
இந்த வரிசையில் ‘டூரிஸ்ட் பேமிலி’யும் ‘டிராகன்’னும் பெரிதாக வன்முறை தென்படாதவை எனச் சொல்லலாம்.
மற்றனைத்திலும், படத்தின் கதை, கதாபாத்திர வார்ப்புக்கேற்றவாறு உள்ளடக்கத்தில் வன்முறை என்பது பெரிதாகவோ, மிகப்பெரியதாகவோ கையாளப்பட்டிருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘விக்ரம்’, ‘ஜெயிலர்’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களின் வெற்றி அதன் பின்னிருக்கலாம்.
அந்தப் படங்களின் உருவாக்கத்தில் ‘கேஜிஎஃப் 1 & 2’ உள்ளிட்ட சில படைப்புகள் ஊக்கமூட்டியாக இருந்திருக்கலாம்.
எல்லாக் காலத்திலும் ‘எதிலும் அதீதம்’ என்ற வகையில் சில படங்களின் உள்ளடக்கம் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ட்ராமா, ரொமான்ஸ், ஆக்ஷன், த்ரில்லர், ஹாரர் எனப் பல வகைமைப் படங்கள் அதனை உணர்த்தியிருக்கின்றன.
ஆனால், பெரும் நட்சத்திரங்களின் படங்களில், பெரும்பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களில் அவ்வாறு நிகழ்ந்ததில்லை.
அவை அனைத்துச் சுவை பதார்த்தங்களும் அடங்கிய ‘விருந்தாக’வே பரிமாறப்பட்டிருக்கின்றன. சமீபகால வெற்றிகள் இலை முழுக்க ரத்தத்தை வழியவிட வகை செய்திருக்கின்றன.
அப்படிப்பட்ட வன்முறைச் சித்தரிப்புகள் கதையின் நகர்வுக்கு, அது ரசிகர்களிடத்தில் வெளிப்படுத்த வேண்டிய தாக்கத்திற்கு எந்தளவுக்கு உதவுகிறது எனத் தெரியவில்லை.
ஏனென்றால், அக்காட்சிகள் திரையில் தெரியத் தொடங்கியவுடனேயே கைத்தட்டலைக் கொட்டுகிறவர்கள் எண்ணிக்கை இன்று அதிகரித்திருக்கிறது.
அது, அந்த வன்முறையை அவர்கள் கொண்டாடுவதைக் காட்டுகிறது. கைத்தட்டல் சத்தம் அடங்கி முடிவதற்குள், அடுத்ததாகத் திரையில் ரத்தத் துளிகள் தெறிப்பதே பெரும்பாலான படங்களில் நிகழ்கிறது.
கடந்த ஆண்டு வந்த படங்களில் மெட்ராஸ்காரன், வணங்கான், ஃபயர், ஸ்வீட் ஹார்ட், வீர தீர சூரன்: பாகம் 2, டென் ஹவர்ஸ், கேங்கர்ஸ், ரெட்ரோ, டெவில்ஸ் டபுள்: நெக்ஸ்ட் லெவல், லெவன், மார்கன், அஃகேனம், ஃபீனிக்ஸ், மாரீசன், சரண்டர், இந்திரா, பிளாக்மெயில், தணல்,
சக்தித் திருமகன், பல்டி, ஆர்யன், காந்தா, தீயவர் குலை நடுங்க, ரெட்ட தல போன்ற படங்களின் உள்ளடக்கம் ‘சுமார்’ ரகத்தில் அமைந்ததற்குத் திரைக்கதையில் இருந்த குறைகளைத் தாண்டி வன்முறைச் சித்தரிப்புகளும் ஒரு காரணமாக இருந்தன என்றால் மிகையல்ல.
இப்படங்களில் சிலவற்றில் கதைக்குத் தேவையான அளவில்தான் வன்முறை இடம்பெற்றிருந்தது என்றபோதும், வேறு சில படங்களில் அதீதமாக அதனைக் காண நேர்ந்தது அனிச்சையாக அசூயையை ஏற்படுத்தியது.
‘ஸ்டீபன்’ போன்ற படங்களை வன்முறை நிறைந்த காட்சிகளுக்காகவே சிலர் பார்க்கத் தயாராக இருந்தது, அதுபோன்ற படங்கள் பேச வந்த கருத்துகள் மீது மண்ணை அள்ளிப் போடுவதாக இருந்தது.
ஜெண்டில்வுமன், நிறம் மாறும் உலகில், மனிதர்கள், டிஎன்ஏ உள்ளிட்ட ஒரு சில படங்களில் தேவையான அளவுக்கு, ரசிகர்களைத் திரையோடு ஒன்ற வைக்கும் அளவுக்கு வன்முறை அவற்றின் உள்ளடக்கத்தில் கையாளப்பட்டிருந்தது.
இவற்றுக்கு நடுவே காதலிக்க நேரமில்லை, குடும்பஸ்தன், மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங், காதல் என்பது பொதுவுடைமை, மெட்ராஸ் மேட்னி, குட் டே, லவ் மேரேஜ், திருக்குறள், 3 பிஹெச்கே, பறந்துபோ, பன் பட்டர் ஜாம், கெவி, பேட் கேர்ள், பாம், குமாரசம்பவம்,
ஆண் பாவம் பொல்லாதது, ஆரோமலே, மிடில் கிளாஸ், அங்கம்மாள் போன்ற படங்கள் ‘மெலிதாக’த் திரையரங்குகளில் நுழைந்து வாழ்வின் வேறு பல அம்சங்களைப் பேசின. அவற்றில் சில அதற்கேற்ற வெற்றியையும் பெற்றன.
அதேநேரத்தில் வன்முறையைக் காட்டியே ‘இளசு’களைக் கவர்ந்துவிடலாம் என்ற நினைப்பில் களமிறங்கிய பல படங்கள் மண்ணைக் கவ்வின.
இருந்தாலும், இந்தியில் ‘சாவா’, ‘துரந்தர்’ படங்களின் மெகா வெற்றிகள் அவற்றின் உள்ளடக்கத்தில் காட்டப்பட்ட நுணுக்க விவரணைகளுக்காக மட்டுமல்லாமல் வன்முறைச் சித்தரிப்புகளுக்காகவே கொண்டாடப்படுகின்றன.
வலதுசாரிச் சிந்தனையைச் சிலாகிக்கிற படங்கள் சிறப்பு பெற்று வருவதும் தொடர்கிறது.
‘அனிமல்’ மாதிரியான படங்கள் ‘ஆல்ஃபா’ ஆணைச் சிறப்பித்தது என்றால் அதே போன்ற காட்சியமைப்புகள் பல படங்களில் இடம்பெறுகின்றன.
ஒரு தவறு வெற்றி பெற்றது என்பதற்காக எல்லாத் தவறுகளுக்கும் பச்சைக்கொடி காட்டிவிட முடியாது என்பதில் ரசிகர்கள் தீர்மானமாக இருக்கின்றனர்.
மேற்சொன்ன பட்டியலில் இடம்பெற்ற சில படங்களின் தோல்விகள் ‘மரண அடி’யாக அமைந்ததும் அதன் விளைவே.
‘டாக்ஸிக்’ ஊட்டும் பதற்றம்!
யஷ் நடிப்பில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் வரும் மார்ச் மாதம் வெளியாகவிருக்கிற ‘டாக்ஸிக்’ படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.
ஒரு கல்லறைப் பகுதியில் நடக்கும் வெளிநாட்டவரின் ஈமச்சடங்கின்போது, அங்கு வந்து நிற்கிற நாயகனின் காரும் அதனைத் தொடர்ந்து அவர் நடத்துகிற ஆக்ஷன் அடாவடியும் காட்சியாக விரிகிறது.
அந்தக் காட்சியில் கல்லறை நெடுக வைக்கப்பட்ட கண்ணிவெடியை இயக்கும் பொத்தானை நாயகன் யஷ் எப்படி அழுத்துகிறார் என்பதைக் காட்ட, ஒரு பெண்ணோடு அவர் உறவு கொள்கிற சித்தரிப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஷேவிங் க்ரீம் விளம்பரங்களில் பெண்களைக் காட்டுவது போன்று இதனைக் கண்டும் காணாமலும் கடந்துவிட முடியாது.
ஏனென்றால், ‘கேஜிஎஃப்’ வெற்றிக்குப் பிறகு யஷ்ஷின் நடிப்பில் வெளியாகிற படமிது.
ஜென்ஸீ ரசிகர்கள் பலர் இதனைக் கண்டு ரசிப்பார்கள். வன்முறையே பெருந்தீங்காக விவாதிக்கப்படுகிற நேரத்தில், பெண்ணை வெறும் போகப்பொருளாகக் காட்டுவது இன்னும் ஒருபடி மேலேறி நசுக்குவதாகவே அமையும்.
‘டாக்ஸிக்’ படத்தின் உள்ளடக்கத்தில் பெண்ணியச் சிந்தனைகள் மேலோங்கி நிற்கலாம்; நாயகனுக்கு இணையாக நாயகியோ, இதர பெண் பாத்திரங்களோ காட்டப்பட்டிருக்கலாம்;
ஆண் மையச் சிந்தனையை உடைத்தெறிகிற கருத்துகளும் அதில் இடம்பெற்றிருக்கலாம். ஆனால், இந்த ட்ரெய்லர் முன்வைப்பதென்னவோ ‘அனிமல்’ பார்வையைத்தான்.
‘வன்முறையே திரைப்படங்களின் கூடாது’ என்பவர்களைப் பதற்றத்தில் தள்ளியிருக்கிறது ‘டாக்ஸிக்’ ட்ரெய்லர்.
இயக்குநர் கீது ஒரு பெண் என்பதால் சிலர் ‘பாய்ண்ட் வரட்டும்’ என்பது போன்று அமைதியாக இருக்கின்றனர்.
இந்த ட்ரெய்லர் காட்சி ஒரு கவன ஈர்ப்பு உத்தியாகவும் இருக்கக்கூடும். அதையும் மீறி, இது போன்ற சித்தரிப்புகள் தான் பெருவாரியான கவனத்தைப் பெறும் என்கிற எண்ணமே சாதாரணர்களின் மீது சேறு வீசியதைப் போன்றிருக்கிறது.
2026ஆம் ஆண்டிலும் இது போன்ற படங்கள்தான் ரசிகர்கள் மீது படையெடுக்குமா என்ற எண்ணமும் எழுகிறது.
அதையும் மீறிச் சாதாரண மக்களின் வாழ்வை, வலியை, அவர்களது வெளியைச் சொல்கிற படங்களும் சித்திரமாய் காலத்தில் பதிகிற திரைச்சித்திரங்களும் குடும்பத்தோடு கண்டுகளித்துக் கொண்டாடுகிற பொழுதுபோக்கு படைப்புகளும் தியேட்டரை நிறைக்க வேண்டுமே என்கிற விருப்பம் நிறைந்து நிற்கிறது.
வன்முறையைக் கொண்டாடுகிற படைப்புகள் நம் பார்வையில் படாமல் இருக்க, அந்த விருப்பம் நல்லுரு பெறட்டும்.!
– ரோகிணி