உலகை எதிர்கொள்ளும் தைரியம் அவரிடமிருந்து தான் கிடைத்தது!
பாலு மகேந்திரா குறித்து இயக்குநர் வெற்றிமாறனின் அனுபவம்
பாலுமகேந்திராவிடம் பத்து நாள் பழகியவர்களாக இருந்தாலும் சரி, அவர் இப்படி செய்தார், இப்படி சொன்னார் என்று சொல்கிற அளவுக்கு நம்மைப் பாதிக்கக்கூடிய மிகப்பெரிய ஆளுமை அவர்.
எல்லா விதங்களிலும் அவர் நம்மை இன்ப்ளுயன்ஸ் செய்வார். நடை, உடை, பாவனைகளில் இருந்து அனைத்திலும் அவருடைய பாதிப்பு இருக்கும்.
எதையும் வலிந்து திணிக்கமாட்டார். அவரிடம் இருந்த எல்லோரும் நல்ல சினிமா பண்ணுவோம்.
ஆனால், ஒருவர் செய்த மாதிரி மற்றவர் செய்யமாட்டோம். தனித்தன்மை அப்படி தக்கவைக்கக்கூடிய தன்மை அவரிடம் இருந்தது.
அவரிடம் வேலைபார்த்தபோது ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு மாதிரி திட்டுவார். என்னை நிறைய திட்டுவார்.
ஆறு மணி என்றால் 5.58 அந்த கேட்டில் போய் நிற்பார். ஆறு மணிக்குத்தானே வரச் சொன்னார் என்று இரண்டு நிமிடம் காத்திருப்பார்.
திட்டிக்கிட்டே இருப்பார். திட்டி அவர் டயர்டு ஆவார். திட்டு வாங்கி நாங்க டயர்டு ஆவோம். ஆறு மணிக்கு வந்துடுடா எழுத ஆரம்பிப்போம் என்பார். நான் ஏழரைக்குப் போய் நிற்பேன்.
என்னப்பா… என்பார். வரச்சொன்னீங்க… எத்தனை மணிக்கு வரச்சொன்னேன். ஆறு மணிக்கு சார்… சரி. லேட்டாயிட்டு சார். அதுதான் ஏன் லேட்டாயிட்டுங்றேன்.
பஸ் லேட்டாயிட்டு.
மூணாங்கிளாஸ் பையன் மாதிரி சாக்கு சொல்லாதே. உன்னாலே ஒழுங்கா வேலை செய்யமுடியும்னு செய். இல்லாட்டி போய்டு.
என்னா சாப்பிட்டே என்று கேட்பார். இல்லை சார் என்பேன். அவரே பிரெட் டோஸ்ட் செய்துகொடுப்பார்.
எழுதுவது என்றால் அவர் டிக்டேட் செய்வார். நாம் எழுதவேண்டும். டயலாக்ஸ்னு சொல்லக் கூடாது. உரையாடல் என்றுதான் சொல்லவேண்டும்.
சில நேரங்களில் அவரே திரைக்கதை எழுதியிருப்பார். அவரே எழுதும்போது குறைவாக எழுதுவார். நமக்கு டிக்டேட் செய்யும்போது விரிவாகச் சொல்வார்.
நீலவானம்… டீடெய்லா எழுதிட்டு அடுத்த நாள் படிக்கச் சொல்வார். உள்ள வா… என்று படித்தால் மீண்டும் படி என்பார். உள்ள வா… என்போம். ஏய் உள்ள வா என்பதை விட்டுட்டியே என்பார்.
இதற்காக ஒரு மணி நேரம் திட்டுவார். அவருடன் வேலை செய்வது தலைகீழே தண்ணியில் முக்குவதுபோல இருக்கும். வீட்டுக்குப் போங்க என்றால், அப்பாடா என்றிருக்கும். ஒவ்வொரு நாளும் இப்படித்தான் இருக்கும்.
வெளியில முயற்சி பண்ணும்போது நிறைய ஏமாற்றங்கள் இருக்கும். சினிமான்னா உங்களுக்கே தெரியும். சார் பார்க்கலாம்னு தோணும்.
வாடா என்று சொல்லிவிட்டு, டீ போடுகிறேன். அவர் கண்டுபிடித்து வைத்திருக்கிற ஒரு டீயைப் போடுவார். குக்கிங் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். குக் பண்ணி மற்றவர்களுக்குக் கொடுப்பார்.
ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஐந்து மாதத்துக்கு ஒரு முறை அவரைப் பார்க்கும்போது இந்த உலகை எதிர்கொள்கிற தைரியம் கிடைக்கும்.
சினிமாவை நேசிக்கக்கூடியவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கக்கூடியவர். அவர் சொன்னதைக் கேட்டு. பேசியதைக் கேட்டு இயக்குநரான நிறைய பேர் இருக்கிறார்கள்.
மே 19 அவருடைய பிறந்த நாள். நாங்க போய் பார்த்து அவருடன் பேசிக்கொண்டிருப்போம். முழு நாளும் அங்கே இருப்போம். ரொம்பவும் உற்சாகமாக இருப்போம்.
ஒரு படம் பிடிச்சிருக்குன்னா, அந்த பிலிம் மேக்கர் யார் என்றெல்லாம் பார்க்கமாட்டார். நேராகப் போய் பார்த்து பாராட்டுவார். பாராட்டுவதிலும் அன்பை தெரிவிப்பதிலும், மன்னிப்புக் கேட்பதிலும் அவ்வளவு ஒரு பக்குவமான மனிதர்.
பாலுமகேந்திரா சார் இறந்த பிறகு நாங்கள் எல்லாம் சந்தித்துப் பேச வாய்ப்புகளே இல்லை. ஒருநாள் ஷங்கி என்னை அழைத்து அவர் வைத்திருந்த புத்தகங்களை தந்தார். நான் வாங்கிவந்து அலுவலகத்தில் வைத்திருந்தேன்.
ஒன்றுக்கு மூன்று புத்தகங்கள் வாங்கி வருவார். அத்தனையையும் வாங்கி பூட்டி வைத்துக்கொள்வார். அவர் கொடுக்கிற புத்தகங்களைத் தான் படிக்கவேண்டும்.
இவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றன. ஏன்டா எடுத்துப் படிக்கமாட்டேங்கிறீங்க என்பார். நிறைய படிங்க என்ற ஆர்வத்தைத் தூண்டினார்.
பாலுமகேந்திரா ரீடிங் சர்க்கிள் என்ற ஆரம்பிக்கும் ஆசை இருந்தது எனக்கு. ஆனால் அதை அந்த நேரத்தில் என்னால் செய்யமுடியவில்லை.
தனஞ்செயன் கேட்டுக்கொண்டதால் சில புத்தகங்களை அவருக்குக் கொடுத்தோம். மீதி புத்தகங்கள் என்னிடம் இருந்தன.
அஜயன் பாலா வந்து பாலுமகேந்திரா நூலகம் தொடங்கப்போகிறேன் என்றார். என்கிட்ட இருந்த புத்தகங்கள் சிலவற்றைக் கொடுத்தேன்.
ரொம்ப நாட்களாக ஒரு ரீடிங் செட்அப் செய்யவேண்டும் என்று ஆசையாக இருந்தது. எந்த ஒரு இயக்கமும் இதுமாதிரியான ஒரு இடத்தில் இருந்துதான் தொடங்கமுடியும்.
விவாதிக்கக் கூடிய இடத்தில் இருந்துதான் கலை சார்ந்து, அரசியல் சார்ந்து பண்பாடு சார்ந்து ஒரு விழிப்புணர்வை எட்டமுடியும்.
இப்படியான ஒரு சூழல்லி நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். அதற்கு இதுபோன்ற நூலகங்கள்தான் அடிப்படையாக இருக்கும்.
பாலுமகேந்திரா நூலகம் ஒரு இயக்கமாக தொடரவேண்டும். அதற்கான எல்லா உதவிகளையும் நான் செய்வேன்” என்றார்.
– தான்யா