Take a fresh look at your lifestyle.

“எண்ணித் துணிந்தால், இங்கு எது நடக்காமல் போகும்?”

திரைத் தெறிப்புகள் – 61 :

*

‘எதிர்நீச்சல்’ – எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் தலைப்பு!

1968-ம் ஆண்டில் கே. பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த இந்தத் திரைப்படத்தை இப்போது பார்த்தாலும், நாகேஷின் அபார நடிப்புத் திறமையை உணர முடியும். 

மிகுந்த வறுமையான நிலைக்கு இடையிலும், பல குடும்பங்கள் கூடி வாழும் வீட்டில் அவர்களுக்குப் பணிபுரியும் சேவகனாக வேலைகள் செய்து, படித்து, தன்னை வாழ்க்கையில் முன்நகர்த்திக் கொள்கிற கதாபாத்திரம் நாகேஷுக்கு.

“வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர் நீச்சல்…
சரிதான் போடா தலைவிதி? என்பது வெறும் கூச்சல்…
எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது?
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது?”

“விதியை நம்புவதைவிட உன் உழைப்பைத் தீவிரமாக நம்பு, அது உன்னை முன்னேற்றும்” என்ற உள்ளடக்கதை வைத்து, மிக எளிய வரிகளில் இப்பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் வாலி.

“பிள்ளையைப் பெறுகிற அம்மாவுக்கு பத்து மாசமும் எதிர் நீச்சல்.
பொறக்குற குழந்தை நடக்குற வரைக்கும் தரையில் போடுவதும் எதிர் நீச்சல்.
பள்ளிக்குப் பள்ளி இடத்துக்கு அலையும் அப்பனுக்கு அது தான் எதிர் நீச்சல்.
பிள்ளைக்கு எப்படி இடம் கெடச்சாலும் பரீட்சை வந்தா எதிர் நீச்சல்…”

வி. குமாரின் இசையமைப்பில் உருவான இந்தப் பாடலுக்கு தனது வெண்கலக் குரலில் படு அழுத்தமாகப் பாடியிருப்பார் சீர்காழி கோவிந்தராஜன்.

“கடற்கரை ஓரம் நடக்குற காதல் கல்யாணம் முடிப்பது எதிர் நீச்சல்.
கணக்குக்கு மேலே பிள்ளையைப் பெத்து காலம் கழிப்பதும் எதிர் நீச்சல்.
கண்மூடி வழக்கம் மண்மூடிப் போகக் கருத்தைச் சொல்வது எதிர் நீச்சல்.
வீட்டுக்கு வீடு ஓட்டுக்கள் வாங்கி பதவிக்கு வருவது எதிர் நீச்சல்…”

பிறப்பு துவங்கி, கல்வி, திருமணம், வாக்கு அரசியல் என்று எல்லாவற்றிலுமே அத்தகைய எதிர்நீச்சலை ஒருவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை வலியுறுத்தும் இந்தப் பாடலை, தான் இயக்கிய படங்களில் இடம்பெற்ற பாடல்களில் தனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருப்பார் இயக்குநர் கே. பாலசந்தர்.

காலத்தின் அலைக்கழிப்புகளுக்கு இடையே தனது தனித்திறத்தால் நீந்தி, நாம் காதுகளை வந்தடைந்திருப்பதே இந்த இசைப்பாடலுக்கான எதிர்நீச்சல் தான். 

*
-மணா.