‘இது என்ன வகைமையில் அமைந்த படம்’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அமைந்துள்ள கதையைத் திரையில் ஒரே நேர்கோட்டில் சொல்வது கடினம்.
ஒருகாலத்தில் ‘கமர்ஷியல் படங்கள்’ இப்படித்தான் காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ், ஆக்ஷன் என்று அடுத்தடுத்து வந்து நம்மை மூச்சு முட்ட வைத்திருக்கின்றன.
இட்லிக்கடை, தோசா ஷாப், ஒன்லி சப்பாத்தி என்று குறிப்பிட்ட ஒரு உணவுப் பொருள் மட்டுமே இங்கு கிடைக்கும் என்றாகிவிட்ட காலகட்டத்தில், திரையில் பல வகையான உணர்வுகளைக் கொண்ட உள்ளடக்கத்தை விருந்து பரிமாறுகிற வித்தையைச் சிலர் ‘பரீட்சார்த்தமாக’ மேற்கொள்கின்றனர்.
திரைக்கதை ட்ரீட்மெண்ட் மூலமாக, ஒருகாலத்தில் இருந்த ‘மசாலா படங்களில்’ இருந்து இப்படங்கள் வேறுபட்டு நிற்கும்.
அப்படியொரு படமாக உருவாகியிருக்கிறது முஹாசின் இயக்கிய மலையாளப் படமான ‘வளா – தி ஸ்டோரி ஆஃப் பேங்கிள்’. தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
லுக்மென் ஆவ்ரன், ஷீத்தல் ஜோசப், தியான் சீனிவாசன், ரவீணா ரவி, சாந்தி கிருஷ்ணா, விஜயராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன், த்ரில்லர், ட்ராமா எனப் பல வகைமை கலந்து அமைந்த ‘வளா – தி ஸ்டோரி ஆஃப் பேங்கிள்’ திரைப்படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?
வளையலின் வரலாறு..!
வசதியான குடும்பத்தைச் சேர்ந்த விசாலாட்சியை (ஷீத்தல் ஜோசப்) காதலித்து வருகிறார் போலீஸ் கான்ஸ்டபிளான பானு பிரகாஷ் (லுக்மென் ஆவரன்). பானு பிரகாஷுக்காகத் தனது வீட்டை விட்டு விசாலாட்சி வெளியேற, இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொள்கின்றனர்.
வீட்டை விட்டு வெளியேறும்போது, தனது பாட்டியின் அலமாரியில் இருந்து ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு வருகிறார். பிறகுதான் அது நகைப்பெட்டி இல்லை எனத் தெரிய வருகிறது.
‘நகையா முக்கியம்’ என்கிறார் பானு பிரகாஷ். ஆனால், விசாலாட்சியால் அந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆதார் அட்டையில் தனது முகவரியை மாற்றுவதற்காக, அரசு அலுவலகம் செல்கிறார் விசாலாட்சி. அப்போது, அங்கு வேலை செய்யும் சரளாவின் (ரவீணா ரவி) கையில் இருக்கும் வளையலை காண்கிறார்.
நல்ல அகலமான, நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த, மரகதம் பதித்த தங்க வளையல் அது. பார்த்ததுமே அது பிடித்துப் போக, ‘இதை எங்க வாங்குனீங்க’ என்று கேட்கிறார் விசாலாட்சி.
அதற்குச் சற்று முன்னதாக, அங்கு வந்த ஒரு முஸ்லீம் பெண் ஒருவர் ‘இது என்னோட வளையல்’ என்று சரளாவிடம் சண்டையிட்டிருக்கிறார். அது தெரியாமல் விசாலாட்சி கேட்டுவிட, ‘இந்த வளையலை நான் எங்க வாங்கினா உனக்கு என்ன’ என்று கேட்டு அவரை அவமானப்படுத்துகிறார் சரளா.
அது விசாலாட்சியை வாட்டியெடுக்கிறது. அதேபோன்ற வளையலை வாங்கித் தர வேண்டுமென்று கேட்டு பானு பிரகாஷை நச்சரிக்கிறார்.
ஒருகட்டத்தில் விசாலாட்சி கேட்பது சரளாவின் கையில் இருக்கும் வளையலைப் போன்றது என்றறிகிறார் பானு பிரகாஷ். சரளாவின் கணவர் புருஷோத்தமனை (தியான் சீனிவாசன்) தேடிச் செல்கிறார்.
கணவரிடம் ‘இது என்னோட பாட்டி மரணப்படுக்கையில் தந்த வளையல்’ என்று சொல்லி வைத்திருக்கிறார் சரளா.
புருஷோத்தமன் வீட்டுக்குச் செல்லும்போது, தன்னுடன் பணியாற்றும் முஸ்தபாவையும் அழைத்துச் செல்கிறார் பானு பிரகாஷ்.
சரளாவின் வளையலைப் பார்க்கும் முஸ்தபா, ‘இதுல இருக்குற அரபி எழுத்தாச்சே’ என்கிறார். அந்த நொடி முதல் புருஷோத்தமன் மனதில் சந்தேகம், வன்மம், குரூரம், பேராசை எனப் பல உணர்வுகள் அலையடிக்கின்றன. அது மட்டுமல்லாமல் அந்த வளையலின் மதிப்பு என்ன என்று தெரிய ஆசைப்படுகிறார்.
அப்போது, அந்த வளையலுக்காகச் சுமார் 5 கோடி ரூபாய் வரை தரத் தயாராக இருக்கும் ஒரு கும்பலைக் காண்கிறார். அவர்களிடம் இருந்து முன்பணத்தையும் பெற்றுக் கொள்கிறார்.
மூன்று நாட்களில் சிந்தாமல் சிதறாமல் அந்த வளையலைத் தர வேண்டுமென்பது பணம் தந்த கும்பலின் கட்டளை.
ஆனால், அந்த வளையலைக் கழற்ற முடியாமல் கஷ்டப்படுகிறார் சரளா. அந்த வளையலை உடைத்தால், அதன் மதிப்பு குறைந்துவிடும். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார் புருஷோத்தமன்.
இந்த நிலையில், வளையலின் பின்னணி அறியும் முயற்சியில் இறங்கும் பானு பிரகாஷ் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கிறார். அது, அந்த வளையல் சரளாவின் குடும்பத்திற்குச் சொந்தமானதல்ல என்பதுதான்.
வளையலில் உண்மையான உரிமையாளரைத் தேடிச் செல்லும் பயணத்தில் சில புதிய தகவல்கள் கிடைக்கின்றன. அதன் மூலமாக, தான் கடந்த காலத்தில் செய்த ஒரு தவறையும் உணர்கிறார் பானுபிரகாஷ்.
அந்தத் தவறு எத்தகையது? அதனால் பாதிக்கப்பட்டவர் என்ன ஆனார்? அந்த வளையல் யாருடையது என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது இப்படத்தின் மீதி.
திரைக்கதையின் தொடக்கத்திலேயே, மத்தியத்தரைக்கடல் பகுதி நாடொன்றில் மிகுந்த வேலைப்பாட்டுடன் ஒரு வளையல் உருவாக்கப்படுவது கதையாகச் சொல்லப்படுகிறது.
அந்த வரலாற்றுத் தகவல் காரணமாக, நூற்றாண்டுகள் பழமையான அந்த வளையல் எப்படி இந்தியாவுக்கு வந்தது என்ற கேள்வி முதலிலேயே எழுந்து விடுகிறது. பின்னர், அதற்கான பதிலைத் தேடுகிற திரைப்பயணம் நம்மை ஈர்ப்பதாக உள்ளது.
நல்லதொரு முயற்சி!
‘வளா தி ஸ்டோரி ஆஃப் பேங்கிள்’ படத்தின் முன்பாதி வசீகரிக்கும் அளவுக்குப் பின்பாதி இல்லை. புதிதாகச் சில பாத்திரங்கள், அவை குறித்த பிளாஷ்பேக், அது தொடர்பான கிளைக்கதை என்று பல விஷயங்கள் ஒரே இடத்தில் அடுத்தடுத்து திணிக்கப்பட்டிருப்பது கொஞ்சம் அயர்வூட்டுகிறது.
எழுத்தாக்கம் செய்த ஹர்ஷத் மற்றும் இயக்குனர் முஹாசின் அதனைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வகைமை கொண்ட காட்சிகளை ஆக்கும்போது பார்வையாளர்கள் ‘ஜெர்க்’ ஆகாமல் பார்த்துக் கொள்வதிலும் திணறியிருக்கிறார் இயக்குநர். பின்பாதியில் வருகிற சண்டைக்காட்சிகள் யதார்த்தம் சிறிதுமில்லாமல் இருப்பதை நியாயப்படுத்தத் திரைக்கதையில் சொல்லப்பட்ட விவரணைகள் போதுமானதாக இல்லை.
கொஞ்சம் முயன்றிருந்தால், சில ஆண்டுகளுக்கு முன் வந்த ‘ரோர்சா’ போன்று இப்படத்தின் வழியே செம்மையான ‘த்ரில்’ அனுபவத்தைத் தந்திருக்க முடியும். அந்த வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறது ஹர்ஷத் & முஹாசின் கூட்டணி. அதனைத் தாண்டி, இது ஒரு நல்ல முயற்சி என்பதை மறுக்க முடியாது.
ஒரு ‘சராசரி’யான மலையாளப்படம் தருகிற திரையனுபவத்தை விடச் சிறப்பானதாக உள்ளது ‘வளா – தி ஸ்டோரி ஆப் பேங்கிள்’ காட்சியாக்கம்.
ஒளிப்பதிவாளர் அப்னாஸ், படத்தொகுப்பாளர் சித்திக் ஹைதர், தயாரிப்பு வடிவமைப்பாளர் அர்ஷத் நக்கோத், ஒலி வடிவமைப்பாளர் தனுஷ் நாயனார் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு அதில் அடங்கியிருக்கிறது.
இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் கோவிந்த் வசந்தா. பாடல்கள் மெலடி மெட்டுகளாக அமைந்து மெல்ல நம் மனதைத் தழுவும் ரகம். பின்னணி இசை நம்மை வேறொரு உலகத்திற்கு இழுத்துச் செல்கிறது.
இந்தப் படத்தில் கோவிந்த் வசந்தா ஒரு பாத்திரம் ஏற்றிருப்பது இன்னொரு சிறப்பு.
நாயகனாக வரும் லுக்மென் ஆவரன் மலையாளத் திரையுலகில் கவனிக்கத்தக்க நடிகராக விளங்குபவர். இதில் அவரது ‘ஹீரோயிச’ இமேஜ் ஒரு படி மேலேற்றப்பட்டிருக்கிறது.
நாயகி ஷீத்தல் ஜோசப் அழகாகத் தோற்றமளிப்பதோடு நன்றாகவும் நடிக்கிறார். நல்லதொரு புது வரவு.
இப்படத்தில் இன்னொரு ஜோடியாக தியான் சீனிவாசன், ரவீணா ரவி இருவரும் வருகின்றனர்.
இளம் அரசியல்வாதியாக நடித்திருக்கும் தியான், நாயகனுக்கு ‘டஃப்’ கொடுக்கிற பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மனதுக்குள் பல ரகசியங்கள் அடக்கி வைத்திருக்கிற ஒரு சிக்கலான பாத்திரமாக, இதில் தோன்றியிருக்கிறார் ரவீணா ரவி. திரையில் அதனை அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் கலைஞர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுத் தரக்கூடியது.
இதில் சாந்தி கிருஷ்ணா, விஜயராகவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘ஓகே’ தான். ஆனால், அவை ‘பழைய படம்’ பார்த்த உணர்வைத் தோற்றுவிக்கின்றன.
இவர்களோடு அபு சலீம், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், நவாஸ் வள்ளிக்குன்னு, ஷாஃபி கொல்லம் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
அனிமேஷன் படமான ‘ரேட்டடூயி’யை (ratatouille) நினைவூட்டும் காட்சியொன்று இப்படத்தில் வருகிறது. அது போன்ற விஷயங்கள் இப்படத்தைச் சிலாகிக்க வைக்கின்றன.
குறிப்பிட்ட சாதியைச் சுட்டிக்காட்டி கிண்டலடிப்பது சில இடங்களில் நெருடுகிறது. அவற்றைத் தவிர்த்திருக்கலாம். அதுபோன்ற ‘சென்சிடிவ்’வான சில விஷயங்களைக் கையாள்வதில் இருக்கிற சூட்சமங்களை இயக்குநர் முஹாசின் அடுத்தடுத்த படங்களில் கைக்கொள்வது அவசியம்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாதி சிலருக்குத் திருப்தி தராமல் போகலாம்; புதிரை விடுவிக்கிற காட்சிகள் ‘சுமாரானதாக’த் தெரியலாம். கிளைமேக்ஸும் கொஞ்சம் சிறியதாகத் தோன்றலாம்.
ஆனால், ஒட்டுமொத்தமாக நோக்கினால் ‘வளா – தி ஸ்டோரி ஆஃப் பேங்கிள்’ நம் கவனத்தை ஈர்க்கிற உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.
தியேட்டர்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்போதும் ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் நிறையவே கவனிக்கப்படும்.
– உதயசங்கரன் பாடகலிங்கம்