திருமதி. வி.என். ஜானகி நடிகையாக கொடிகட்டிப் பறந்த காலம் அது. அப்போது பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் பிரபலமான ஹீரோ இல்லை. இருவரும் மருதநாட்டு இளவரசி என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள்.
ஏற்கனவே மணமாகி இருந்த இருவரின் மனமும் இணைந்தன. இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.
எம்.ஜி.ஆர் பிரபலத்தின் உச்சியைத் தொட நடிப்பு தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்ட ஜானகி, கணவரின் நிழலாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்தார்.
பிறகு எம்.ஜி.ஆர் மறைந்தபின் அரசியல் பிரவேசம் செய்தார். கணவன், குடும்பம், வீடு என்ற குறுகிய வட்டத்துக்குள் இன்பம் கண்ட திருமதி. வி.என் ஜானகி அவர்களுக்கு அரசியல் ஒத்துப்போகவில்லை என்பதில், எந்த ஆச்சரியமும் இல்லை.
முன்னாள் முதல்வரின் மனைவியாக இருந்தாலும், தானே ஒரு மாதம் முதல்வர் அரியணையில் அமர்ந்து இருந்தாலும், திருமதி. வி.என். ஜானகி அம்மையார் இன்னும் தன் துணிகளைத் தானே துவைத்துக் கொள்கிறார். தானே சமையல் செய்கிறார்.
எம்.ஜி.ஆர் என்ற சரித்திர நாயகனின் மனைவியாக, தமிழகத்தை நிரந்தரமாக தன் பிடியில் வைத்திருக்கும் மாயையின் நிழலாக இருந்த திருமதி. வி.என் ஜானகி ராமச்சந்திரனுக்கு இன்று உடல் நலம் சரியில்லை.
எதைப் பற்றியும் பேச ஆர்வம் இல்லாதவருக்கு எம்.ஜி.ஆர் என்கிற மந்திரச்சொல்லில் முகத்தில் புன்னகை மலர்கிறது.
ராமாவரத்தில் உள்ள தன் வீட்டுக்கும், மருத்துவமனைக்கும் (டயாலிசிஸ் செய்து கொள்வதற்காக) அல்லாடிக் கொண்டிருக்கும் இவர், ‘எம்.ஜி.ஆர்’ என்ற வார்த்தையைக்கேட்டவுடன் பூரித்துப் போகிறார்.”
‘அவர் எப்படிப்பட்ட மனிதர் என்று கேட்டால் ‘ஆயிரத்தில் ஒருவர்’ என்று பளிச்சென்று பதில் சொல்கிறார்.
அவரைப் பற்றி நினைவுகூறுவதே அவருக்கு சுகானுபவம். “அவரை நான் திருமணம் செய்துக் கொண்டபோது, அவர் பெரிய நடிகராக வருவார் என்றுதான் நான் நினைத்தேன்.
அவர் பெரிய அரசியல்வாதி ஆவார் என்றோ, முதலமைச்சராக வருவார் என்றோ நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை.
ஆனால், அவரை நான் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தேன். அவர் எந்தக் காரியத்தைச் செய்தாலும் சரியாகச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருந்தது.
அதனால் அவர் என்ன செய்தாலும் எனக்கு சம்மதம்தான். நடிப்புத் தொழிலிலோ, அரசியலிலோ அவருக்கும் எனக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் ஏற்பட்டதே இல்லை.
அவருக்குப் பணிவிடை செய்து மகிழ்ச்சி அடையும் மனைவியாகத்தான் நான் இருந்தேன். அப்படித்தான் நான் இருக்க விரும்பினேன்.
காலை 5 மணிக்கு முன் எழுந்துவிடுவார். நான் அவர் எழுந்து கொள்வதற்கு முன்னால் எழுந்து, குளித்துவிட்டு சமையல் வேலையை மேற்பார்வைச் செய்வேன். அவர் அன்றைக்கு உடுத்த வேண்டிய உடைகளை ‘அயா’ன்’ செய்து வைப்பேன்.
அவருக்கு எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும். அவர் எழுந்து குளித்தப் பிறகு தன் ‘பூஜை’ அறைக்குச் சென்று விடுவார்.
அந்த அறையில், நடுவில் ஒரு கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும்.
மேலே அவருடைய அம்மாவின் படம், மகாத்மா காந்தியின் படம், என்னுடைய அம்மா, அப்பாவின் படங்கள் தான் இருக்கும்.
தினசரி பூஜை அங்குதான். நான் அவரோடு 40 வருடங்கள் வாழ்ந்ததே எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவருடைய குணங்களுமே என்னைக் கவர்ந்தவை.
முக்கியமாக, இளமையில் அவர் வறுமையில் வாடியதால், அவர் அவர் யாரும் பசியோடு இருப்பதை விரும்ப மாட்டார். வீட்டுக்கு வருபவர்கள் என்ன அவசரத்தில் இருந்தாலும், அவர்கள் சாப்பிட்டால் தான் அவர்களைப் போக விடுவார்.
இவரும் வெளியில் அவசரமாகப் போக வேண்டி இருந்தாலும், ‘சாப்பிட்டு வாங்க அப்புறம் நான் கிளம்புறேன்’ என்று சொல்வார்.
நானும், ‘நான் இன்னும் சாப்பிடலை’ என்று யாரும் அவரிடம் சொல்லும்படி வைக்க மாட்டேன்.
அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் இன்னொன்று இருக்கிறது. அதுதான் அவர் அனைவருக்கும் கொடுக்கும் மரியாதை.
யாராக இருந்தாலும் குழந்தையாக இருந்தாலும் கூட அவர் மதிப்போடு தான் நடத்துவார். அவருடைய பரந்த குணத்துக்கு ஒரு உதாரணம், ராமாவரத்தில் நடக்கும் பொங்கல் விழா.
அன்று எம்.ஜி.ஆர். முதல் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் வரை எல்லோரும் ஒரே மாதிரியான உடைகளை அணிவார்கள். அதேபோல் பெண்களும். நான் அணியும் சேலையைப் போலவே அவர்களுக்கும் சேலைத் தரப்படும். அவருக்கு கிராமப்புறக் கலைகள் என்றால் ரொம்ப இஷ்டம்.
அதனால் கரகாட்ட, ஒயிலாட்டக் கலைஞர்கள் பொங்கல் திருநாளன்று தோட்டத்திற்கு வரவழைக்கப்படுவார்கள்.
ராமாவரமே கோலாகலமாக இருக்கும். அன்றைக்கு அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவோம்.
தனக்குக் குழந்தை இல்லையே என்ற மனக்குறை அவருக்கு இல்லவே இல்லை.
வீட்டிலிருந்த மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி மகிழ்வார். இந்த மகிழ்ச்சிதான் அவரது மனக் குறையைப் போக்கி இருக்க வேண்டும்.
அவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுவதில் நாட்டம் இருந்ததில்லை. குழந்தைகள் ‘கேக் வெட்டி பிறந்தநாள் விழா’ கொண்டாடுவதை அவர் விரும்பவேமாட்டார்.
பொதுவாக தமிழ் கலாச்சாரத்துக்கு விரோதமான எந்த அம்சமும் அவருக்குப் பிடிக்காது. ஒருமுறை நான் தற்செயலாக நெற்றியில் சந்தனம் இட்டுக்கொண்டேன். அதைப் அவருக்குக் பார்த்து கோபம் வந்துவிட்டது. சந்தனத்திற்கு பதிலாக உடனே குங்குமம் இட்டுக் கொள்ளும்படி சத்தம் போட்டார்.
அவர் எவ்வளவு ‘பிஸியாக இருந்தாலும், வீட்டிலுள்ள குழந்தைகள் (என் அண்ணன் நாராயணனின்) ஒழுக்கத்தோடு நடந்து கொள்கிறார்களா’ என்பதைக் கவனித்துக் கொண்டிருப்பார். குழந்தைகள் பெரியவர் களிடம் மரியாதையாகப் பழகுகிறார்களா என்பதை உன்னிப்பாகக் கவனிப்பார்.
குறிப்பாக வேலைக்காரர்களிடம் குழந்தைகள் அவமரியாதையாக நடந்து கொள்வதை அவர் பொறுத்துக் கொள்ளவே மாட்டார்.
கார்டிரைவர், தோட்டக்காரர் ஆகியவர்களை மாமா அல்லது அண்ணா என்றுதான் அழைக்கவேண்டும் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துப் பழக்கப்படுத்தி இருந்தார்.
குழந்தைகளைப் பகட்டாக வளர்க்கக் கூடாது என்பார். வீட்டில் அனைவரும் தரையில் பாயை விரித்துதான் படுத்துக் கொள்ள வேண்டும்.
அவரும் அப்படித்தான். அவர் உடல் நிலை மோசமான போதுதான், அதுவும் டாக்டர்கள் வற்புறுத்தியதால்தான், அவர் கட்டிலில் படுக்கத் தொடங்கினார்.
அவரைமட்டுமல்ல அவருடைய படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய எல்லா படங்களும் நல்ல கருத்துக்கள் சொல்வதாக அமையும்.
அரசியலில் அவருக்கு எந்த டென்ஷன் ஏற்பட்டாலும் வீட்டில் அதைக் காட்டிக் கொள்ளவே மாட்டார். அவர் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்’ என்று தான் சொல்ல வேண்டும்.
அவர் ஆட்சி 1980ல் கலைக்கப்பட்டபோது கூட அவர் வீட்டில் எல்லோரிடமும் சந்தோஷமாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
ஆட்சி பீடத்தில் இருந்தபோதும் சரி, ஆட்சிக் கலைக்கப்பட்ட பிறகும் சரி, அவர் ஒரே மாதிரிதான் இருந்தார்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘அவர் ஆயிரத்தில் ஒருவர்’
(1996ல் வெளிவந்த இந்தியா டுடே பெண்கள் மலரில் ராதா வெங்கடேசன் எடுத்த பேட்டி…