Take a fresh look at your lifestyle.

ரசனையையும் வாழ்வின் ரணங்களையும் சொல்லும் படம்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' பட விழாவில் இயக்குநர் த.செ. ஞானவேல்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினர் கலந்து கொண்டு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இந்தப் படம்.

கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் கலந்துகொண்ட திரைப் பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில் படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் த.செ. ஞானவேல்: ஒரு போர் பற்றி, அது ஏற்படுத்துகின்ற விளைவுகள் பற்றி, ஒரு குண்டு சத்தம் இல்லாமல், அது சம்பந்தமான ஒரு அழும் காட்சி இல்லாமல், மிக ஆழமாகப் போரின் வலியை வந்து இந்தப் படம் பேசியுள்ளது.

இதோட நகைச்சுவை எல்லாரும் பேசுவார்கள். ஆனால், வலியைச் சொன்னால் கூட நமக்கு அது பாதிக்காது. ஆனால் வலியை மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே அதெல்லாம் ஒன்னு இல்ல, அப்படின்னு சொல்றது இருக்கு இல்லையா அது மிகத் துயரமானது. 

அழகான ரசனையான ஒரு நகைச்சுவைக்கு பின்னால் ஒரு போர் என்ன செய்யும் அப்படிங்கிறது தான் இந்த கதை.

பெண்கள், குழந்தைகள், விலங்குகள் போன்றவற்றைப் பாதுகாப்பது போன்ற சில விதிகள் போரில் முக்கியம்.

ஆனால், இப்போது உலகம் கொடூரமாக மாறிவிட்டது. மனிதாபிமானம் இல்லை. நம்மைச் சுற்றி நடக்கும் கொடூரங்களை நாம் தினமும் பார்க்கிறோம்.

இலங்கையில் போர் எவ்வளவு இரக்கமற்றது என்பதை நாம் அனைவரும் படித்திருக்கிறோம்.

அது உருவாக்கிய தாக்கம் பேரழிவை ஏற்படுத்துவதால் மக்கள் இன்று வரை துன்பப்படுகிறார்கள்.

படத்தைப் பார்க்கும்போது நான் பிரமித்துப் போனேன். ஏனென்றால் அதுபோன்ற ஒரு நாட்டிலிருந்து வரும் ஒரு குடும்பத்தைப் பற்றிய ஒரு மகிழ்ச்சியான திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இதற்காகவே இப்படம் வெற்றி பெற வேண்டும். இப்படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.