Take a fresh look at your lifestyle.

வசூல் சாதனை படைத்த பவன் கல்யாண் படம்!

நூறு கோடியை வசூலை நெருங்கும் ஓ.ஜி

102

‘பவர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், ஜனசேனா என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஆந்திராவில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக கூட்டணியில் இணைந்து ஜனசேனா போட்டியிட்டது. இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு, அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கினார்.

கொஞ்சகாலம் சினிமாவை மறந்து விட்டு, தீவிரமாக அரசுப் பணிகளில் ஈடுபட்டார் பவன் கல்யாண். “மீண்டும் அவர் சினிமாவுக்கு வர வேண்டும்” என அவரது ரசிகர்கள் வலியுறுத்தினர்.

இதனால் சில மாதங்களுக்கு முன் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தான் ஏற்கனவே நடித்துப் பாதியில் நின்று போன படங்களை தூசுத் தட்டி நடித்தார். அதில் ஒரு படம் ‘ஹரிகர வீர மல்லு’. அண்மையில் ரிலீஸ் ஆன இந்தப் படம் ஓடவில்லை. படுதோல்வி அடைந்தது. இதனால் அப்செட் ஆனார் பவர் ஸ்டார்.

அவர் நடித்துப் பாதியில் நின்றிருந்த மற்றொரு படம் “THEY CALL HIM – OG. சுருக்கமாக ‘OG’.

இந்தப் படத்துக்கு இரவு, பகலாக கால்ஷீட் கொடுத்து நடித்தார். சுஜித் இயக்கி இருந்த ‘OG’ படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது.

தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆன ‘OG’ நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 92 கோடி ருபாய் வசூலித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ. 70 கோடி கல்லா கட்டியுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

உற்சாகமாக இருக்கிறார் பவர் ஸ்டார்.

– பாப்பாங்குளம் பாரதி.