Take a fresh look at your lifestyle.

தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ்!

தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர்,

முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி.ஜே.பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்.

ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார்.

மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இணையத் தொடர் குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம்:

“காக்கா முட்டை படத்திற்கு முன் வின்ட்‌ (Wind) என்றொரு குறும்படத்தை அவர் இயக்கி இருந்தார்.

அதில் இரண்டே கதாபாத்திரங்கள் தான். ஒன்று சடலம். மற்றொன்று விஜய் சேதுபதி.‌ அது ஒரு குறும்படம் போல் இருக்காது. திரைப்படம் போல் இருக்கும். அதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.

‘கடைசி விவசாயி’ படத்தை பார்த்துவிட்டு விஜய்யிடம் பேசினேன். ஒவ்வொரு பிரேமையும் உங்கள் இருவரது உழைப்பையும் பார்த்து ரசித்தேன் என்றேன்.

இந்த இணையத் தொடரில் விஜய் சேதுபதி ஆக்சன், திரில்லர் ஜானரில் நடித்திருக்கிறார்.”

நடிகர் விஜய் சேதுபதி: “இந்த வெப் சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு, மூன்று தொடர்களை உருவாக்கலாம்.

அனைத்தையும் கடந்து இன்று இந்த இணையத் தொடர் வெளியாவதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.  

தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ் இதுதான். 

மணிகண்டனுக்கும் எனக்குமான அறிமுகமும் நட்பும் எதேச்சையாக ஒரு நாள் நடந்தது.

அவருடைய நண்பர் வினோத் என்பவர் மூலமாக மணிகண்டனின் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது இன்று இங்கு வரை அழைத்து வந்திருக்கிறது.‌

மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். 

அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார். அவர் நடிகர்களிடமிருந்து மிக எளிதாக நடிப்புத் திறனை வாங்கி விடுவார்.

சில சமயங்களில் நடித்து முடித்த பிறகு தான் அவர் அந்த காட்சியில் அவ்வளவு விசயங்களை யோசித்து வைத்திருக்கிறார் என்பது புரியும்.

2008 முதல் இப்போது வரை அவரை எனக்குத் தெரியும். அவர் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும்.

இந்த வெப் சீரிஸ் உள்பட பல அற்புதமான படங்களை வழங்கி இருக்கிறார். அற்புதமான பாடல்களையும் அளித்திருக்கிறார். 

மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழல் வந்தபோது எடிட்டராக பணியாற்றிய அஜித்குமார் இயக்கினார்.

இந்த வெப் சீரிஸ் எப்படிச் செல்லும் என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்தபோது. அஜித் அதை அழகாக அவருடைய கையில் எடுத்துக்கொண்டு தெளிவாக நிறைவு செய்தார். 

ஒரு கட்டத்தில் மணிகண்டன் இல்லாத போது அஜித் குமார் இதை இயக்கும்போது நான்தான் அவருக்கு உதவியாக இருக்கும் என்று ‘உடன் பால்’ படத்தினை இயக்கிய இயக்குநர் கார்த்திக்கை அழைத்து இதில் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டேன்.

நம்ம ஊரைப் பற்றி உணர்வுபூர்வமாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் உரிமையுடன் கேட்டேன். அவரும் பணியாற்றினார். அனைவருக்கும் நன்றி.”