புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தனது கலையுலக வாரிசு என்று அழைக்கப்பட்டவர், பல மாபெரும் வெற்றி படங்களைக் கொடுத்தவர், பூஜை போட்ட அன்றே முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட தாவணிக் கனவுகள் படத்தின் தயாரிப்பாளர்,
இயக்குநர், எழுத்தாளர், கதாநாயகன், அற்புதமான வசனங்களுக்கு சொந்தக்காரர், தனது திரைக்கதைத் திறமையால் இந்திய சினிமாவையே வியக்க வைத்தவர் என பல்வேறு முகங்களுக்குச் சொந்தக்காரர் கே.பாக்யராஜ்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக, வசனகர்த்தாவாக, கதையாசிரியராக பல படங்களில் பணியாற்றியவர்.
அப்போது யோசித்து பாக்யராஜ் சொல்லும் கதைகளின் அளவுக்குக் கூட பல படங்களின் கதைகள் இருப்பதில்லை இன்று இருப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
அவர் இயக்கிய முதல் படம் சுவர் இல்லாத சித்திரங்கள். அது மாபெரும் வெற்றிப் படமாக ஆனது.
அந்தப் படம் எப்படிப்பட்டது என்பதை இப்போது பார்ப்போம்.
வறுமையில் வாடும் பார்வதி என்ற விதவைப் பெண்ணின் மூத்த மகள் பள்ளி மாணவியான சரோஜா. அதே தெருவில் வசிக்கும் அழகப்பன், ஒரு மில்லில் வேலை பார்ப்பவன். நாடகங்கள் மீது அவனுக்கு ஆர்வம். சரோஜாவைக் காதலிக்கிறான் அழகப்பன்.
பணக்கார குடும்ப நபர் சாந்தமூர்த்தி. அவனுக்கு முறைப்பெண் உண்டு. அவனோடுதான் அவளுக்கு கல்யாணம் நடக்கும் என்ற நிலை. ஆனால், சாந்தமூர்த்தி சரோஜாவைக் காதலிக்கிறான். அவளும் சாந்தமூர்த்தியைக் காதலிக்கிறாள்.
ஜவுளிக்கடைக்காரர் ஒருவர் பார்வதிக்கு பல விதங்களில் உதவுகிறார். பார்வதிக்கும் அவருக்கும் அந்தரங்க உறவு ஏற்படுகிறது.
சரோஜா சாந்தமூர்த்தியைக் காதலிப்பது தெரியாமல் தனது ஒரு தலைக்காதலில் திளைக்கிறான் அழகப்பன். ஒரு நிலையில் சரோஜா தன்னைக் காதலிக்கவில்லை என்பது தெரிந்ததும் தனது ஏமாற்றத்தையும் மீறி அவளின் காதலுக்கு உதவுகிறான்.
தன் மகன் சரோஜாவைக் காதலிப்பது தெரிந்து சாந்தமூர்த்தியின் அப்பா, மகனைக் கண்டிக்கிறார். முறைப் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்கிறார்.
ஆனால், சரோஜாவைத்தான் திருமணம் செய்வேன்’ என்று சாந்தமூர்த்தி சொல்லிவிட, முறைப்பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.
சாந்த மூர்த்தியின் அப்பா மகனுக்கு சொத்து ஏதும் தர முடியாது என்பதோடு வீட்டை விட்டே வெளியே போகச் சொல்லி விடுகிறார்.
பார்வதியின் அந்தரங்க உறவு சரோஜாவுக்கு தெரிகிறது. அம்மாவிடம் “நான் வேலைக்குப் போய் பணம் சம்பாதிக்கிறேன். அவரோடு உறவை விட்டு விடு” என்று சொல்லி, படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குப் போகிறாள்.
சாந்தமூர்த்தியும் வேலைக்குப் போகிறான். அவன் சரோஜா குடும்பத்தோடு பழகுவது பிடிக்காத அவனது அப்பா அந்த வேலையிலிருந்து அவனை விலக்கச் செய்கிறார்.
சரோஜாவின் தம்பிக்கு உடல் நலம் இல்லாமல் போக, உதவ வரும் மேற்படி ஜவுளிக்கடைக்காரரை அவர்கள் மறுக்க, தம்பி இறந்து விடுகிறான்.
அழகப்பன் காதலியின் குடும்பத்துக்காக தொடர்ந்து உதவுகிறான். கணவனை இழந்து, ஒரு குழந்தைக்குத் தாயாக இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். கிடைக்கும் பணத்தை சரோஜாவிடம் கொடுக்கிறான்.
அந்தப் பணம் தொலைந்து போகிறது. சரோஜா அம்மா பார்வதி, மீண்டும் ஜவுளிக் கடைக்காரரை அழைக்கிறாள். அவர் “உன் மகள் எனக்கு வேண்டும்” என்கிறார். சரோஜா அவர் வைத்து விட்டுப்போன பணத்தை எடுத்து குடும்பத்துக்காக செலவிடுகிறாள்.
காதலிக்கு உதவ முடியாத சாந்தமூர்த்தி கலங்குகிறான்.
இறுதியாக நிறைய இனிப்பு வாங்கி வருகிறாள் சரோஜா. மறுநாள் அந்த வீட்டில் முன் ஊரே கூடி அழுகிறது.
சாந்தமூர்த்தியாக சுதாகர், அழகப்பனாக பாக்கியராஜ், சரோஜாவாக சுமதி, முறைப்பெண்ணாக சி.ஆர்.சரஸ்வதி நடித்திருந்தனர். டெய்லராக வரும் கவுண்டமணியின் காமெடிகள் கலகலப்பாக இருக்கும்.
சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த கல்லா பெட்டி சிங்காரம், அழகப்பனின் அப்பாவாக பலருக்கும் தெரியும்படி நடித்த முதல் படம் இதுதான்.
பிறகு வெகுகாலம் அவர் பாக்யராஜ் படங்களின் ஆஸ்தான நடிகராகவே இருந்தார். டார்லிங் டார்லிங் படத்தில் மீண்டும் பாக்யராஜின் அப்பாவாக அசத்தி இருப்பார் சிங்காரம்.
ஜனகராஜ், வாகை சந்திரசேகர் போன்றோரும் கவுரவ வேடங்களில் நடித்தார்கள்.
கோவையில் பாக்யராஜ் வசித்த பகுதியில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து பாக்யராஜ் எழுதிய கதை இது.
பகவதி கிரியேஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரித்தார். பொதுவாக பாக்யராஜ் படங்களில் அவர் தனது பெயரை டைட்டிலில் போடும் இடம் சிறப்பாக இருக்கும். அதை முதல் படத்திலேயே ஆரம்பித்து விட்டார் பாக்யராஜ்.
வாசலில் போடப்படும் கோலத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கே.பாக்யராஜ் என்று எழுதி இருக்கும்.
படத்தின் முதல் பாதி முழுக்க காமெடியாகவும், இரண்டாம் பாதி முழுக்க சோகமாகவும் படம் இருக்கும்.
கங்கை அமரன் இசையில் படத்தில் மூன்று பாடல்கள். அதில் கண்ணதாசன் எழுதிய ‘காதல் வைபோகமே’ பாடல் இன்றும் இளமை குறையாமல் இருக்கிறது. சுந்தர்.சி நடித்த பெருமாள் என்ற படத்தில் இந்த பாடல் ரீமிஸ் செய்யப்பட்டது.
பாக்யராஜ் என்ற திரையுலக ஆலமரம் ஒரு சிறு செடியாக முளைத்தது இந்தச் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தில்தான்.
– சு. செந்தில் குமரன்