சுஜாதாவின் எழுத்துக்களுக்கு எப்போதுமே வசீகரம் உண்டு. அவர் கதைகள், நாவல்கள் இப்போதும் அதிகமாக விற்பனையாவதே அதற்கு உதாரணம். அவருடைய சில நாவல்கள் திரைப்படமாகி இருக்கின்றன. அதில் ஒன்று ‘கரையெல்லாம் செண்பகப்பூ’.
பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா, சுமலதா, மனோரமா, தங்கவேலு, கல்லாபெட்டி சிங்காரம் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். ஜி.என்.ரங்கராஜன் இயக்கியிருந்தார்.
இவர், கமல்ஹாசனின் கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல்மீன்கள், எல்லாம் இன்பம் மயம் உட்பட பல படங்களை இயக்கியவர்.
கரையெல்லாம் செண்பகப்பூ கதையை ஆனந்த விகடனில் 1980-களில் தொடராக எழுதினார் சுஜாதா.
பொதுவாக நகரத்துப் பின்னணியில் கதை எழுதும் சுஜாதா, கிராமத்தை வைத்து எழுதிய கதை.
நாட்டுப்புறப் பாடல்களைப் பின்னணியாகக் கொண்டு உருவான த்ரில்லர் கதை. நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் இளைஞர், திருநிலம் என்ற கிராமத்துக்கு வருகிறார்.
மேம்பட்டி என்ற கிராமத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் அங்குள்ள பழைய ஜமீன் பங்களாவில் தங்குகிறார்.
அங்குள்ள வெள்ளி என்ற பெண் மீது அவருக்கு ஈர்ப்பு வருகிறது. வெள்ளி, அவளுடைய மாமன் மருதமுத்துவை விரும்புகிறாள்.
இதற்கிடையே ஜமீனின் உறவுக்காரப் பெண்ணாக வரும் பெண், அந்த இளைஞருடன் ஒரே வீட்டில் தங்குகிறாள்.
அந்த மாளிகையை சுற்றி நடக்கும் சில அமானுஷ்ய சம்பவங்கள் இளைஞனை பயமுறுத்துகிறது. இதற்கிடையே நடக்கும் ஒரு கொலை, மேலும் அதிர்ச்சியாக்க, அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
இதில் நா.வானமாமலை தொகுத்த ‘தமிழர் நாட்டுப்பாடல்கள்’ புத்தகத்தில் இருந்து சில பாடல்களை அனுமதியோடு பயன்படுத்தி இருக்கிறார் சுஜாதா.
இந்தப் படத்தின் பாடல்கள் அப்போது அடடா ஹிட். எஸ்.ஜானகி, இளையராஜா குரலில்’ ஏரியிலே எலந்த மரம்… தங்கச்சி வச்ச மரம்..’ இப்போதுவரை ரசனையான பாடலாக இருக்கிறது.
மலேசியா வாசுதேவன், பி.சுசிலா குரலில், ‘ஏறுபிடிச்சவரே..’, இளையாராஜா பாடிய ‘காடெல்லாம் செண்பகப்பூ’ உட்பட அனைத்து பாடல்களும் ஹிட்.
இந்தக் கதையை சுஜாதா தொடராக எழுதியபோது சினிமாவாக எடுக்கப் பல தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டார்கள். பிறகு அதை அப்படியே விட்டுவிட்டு மறந்துவிட்டார்கள்.
அந்த நேரத்தில்தான் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன், இந்த கதையை வாங்கி சினிமாவாக இயக்கினார்.
தொடராகப் படித்தபோது இருந்த பரபரப்பும் விறுவிறுப்பும் படம் வெளியானபோது இல்லாததால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை இந்தப் படம்.
இந்தப் படத்தின் கதையை உருவாக்க சுஜாதாவுக்கு ஐடியா கொடுத்தவர் இளையராஜா.
அவர்தான் நாட்டுப்புறப் பின்னணியில் ஒரு த்ரில்லர் கதையை எழுதுமாறு சுஜாதாவை கேட்டுக்கொண்டார். அதன்படி உருவானதுதான், இந்த ‘கரையெல்லாம் செண்பகப்பூ’!
– அலாவுதீன்