Take a fresh look at your lifestyle.

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மூன்வாக்’ பயணம்!

‘ரோஜா’ தொடங்கி ‘மூன்வாக்’ வரை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒவ்வொரு படைப்பும் மாயாஜாலம் தான் என்று அவரைக் கொண்டாடுகிற ரசிகர்கள் உலகம் முழுக்க உண்டு. ஒவ்வொரு பாடலுக்கும் பின்னணி இசைத் துணுக்குக்கும் அவர் விலையாகத் தருகிற உழைப்பு அதற்குக் காரணம்.

திருப்தி என்பதை அறியாத ஓர் சிற்பி தனது படைப்பை நுணுக்கமாகச் செதுக்குவது போன்று அவர் தன்னிசையை இழைத்துத் தருவது நாமறிந்த விஷயம். அதையும் தாண்டிச் சமீபகாலமாக அவர் தன்னைப் பொதுவெளியில் வெளிப்படுத்திக் கொள்கிற விதம் இன்னும் கவனம் ஈர்க்கிறது.

வந்தேமாதம் காலம் தொட்டு..

தொண்ணூறுகளின் இறுதியில் ‘வந்தேமாதரம்’ ஆல்பம் வெளியானபோது, ரஹ்மானின் நீளமான சுருள் கேசம் அவரது பிம்பத்தை நம் மனதில் பதிய வைப்பதாக இருந்தது. இருபத்தைந்தைத் தாண்டியபிறகும் பதின்ம வயதுப் பையனாகத் தெரிந்த அவரது உருவத்தை அது மாற்றிக் காட்டியது. பிறகு அவரது ஆடைகள், அணிகலன்களில் மாற்றம் தெரிந்தது.

2000களில் இந்தித் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்தபோது, அங்கிருந்த இசையமைப்பாளர்கள் போன்று ‘பாரம்பரிய’த் தோற்றத்தை வெளிப்படுத்தினார். ஹாலிவுட்டுக்கு சென்றபோது, மேற்கத்திய பாணியில் தோன்றினார்.

‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிவிட்டுச் சென்னை வந்தபிறகு, நெடும்பயணம் மேற்கொண்ட ஒரு நடுத்தரவயதுக்காரர் மீண்டும் வீடு திரும்பியதைப் போன்று வெளிப்பட்டார்.

அதேநேரத்தில் ‘பேஷன்’ சார்ந்த ட்ரெண்டிங்கில் தனக்கேற்ற மிகச்சிலவற்றைப் பட்டும் படாமலும் பின்பற்றுகிற பாங்கு அவரிடத்தில் மெல்ல வளர்ந்துகொண்டே வந்தது.

இதோ இப்போது, அதன் உச்சமாகத் தன்னை இளமையாகக் காட்டிக்கொள்கிற ‘ஸ்டைலிங்’கை ரஹ்மான் கைக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த ‘மூன்வாக்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அதனைக் காண முடிந்தது.

அதன் நாயகன் பிரபுதேவா தொடங்கிப் பல ஆண் கலைஞர்களின் ஆடையலங்காரம், தோற்றத்தைப் போன்றே அவரும் தன்னை வெளிப்படுத்தியிருந்தார். கிட்டத்தட்ட ஒரு ‘பார்ட்டி தீம்’மை பின்பற்றுவது போன்றிருந்தது அந்த தோற்றம். ஏ.ஆர்.ரஹ்மானை வெகுகாலமாகத் தொடர்ந்து வருபவர்களுக்கு அந்த மாற்றம் நிச்சயம் ஆச்சர்யமளிக்கிற ஒன்று.

வியக்கத்தக்க குணங்கள்!

அப்போதும் சரி, இப்போதும் சரி, இளைய தலைமுறையினருடன் கைகோர்த்துச் செயல்படுவதிலும் அவர்களுடனான போட்டியை ரசித்துச் சிலாகிப்பதிலும் ரஹ்மான் கெட்டி. அந்தக் குணாதிசயம், அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்கள், பாடகர்கள் பாடகிகள், பாடலாசிரியர்களை அவருடன் நெருங்கச் செய்கிறது.

போலவே, அவர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்பதிலும் அவர் தெளிவாக இருக்கிறார். அது, அவரது இசையில் துல்லியமாகத் தெரிந்துவிடுகிறது.

‘தன்னைத் தேடி வருபவர்களின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிய மாட்டார்’ என்பது ரஹ்மானைப் பற்றி முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஒன்று. சமீபகாலமாக, அந்த இறுக்கத்தைத் தளர்த்தித் தன்னால் முடிந்தவரை அவர் இளகிச் செல்வதைக் காண முடிகிறது.

‘மூன்வாக்’ படத்தில் ரஹ்மான் 5 பாடல்களைப் பாடியிருக்கிறார். ஷங்கர், மணிரத்னம் என்று அவரது ஆரம்பகாலத் தோழமைகளே சாதிக்காத விஷயம் அது. அந்தப் படம் தன்னையும் பிரபுதேவாவையும் கொண்டாடுகிற படைப்பு என்ற நம்பிக்கைக்கு அவர் தந்த பரிசு அது.

பொதுவெளியில் எந்தக் கேள்வி கேட்கப்பட்டாலும், ஓரிரு வார்த்தைகளில் பதிலளிப்பது ரஹ்மானின் இயல்பு. சர்வஜாக்கிரதையாகப் பேச வேண்டுமென்கிற உணர்வு அதில் தென்படும். சமீபகாலத்தில் அதனை அவரிடத்தில் காண முடிவதில்லை.

மாறாக, தன் மனதில் பட்டதைச் சுருக்கமாக வெளிப்படுத்துகிற இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார். அதனால், எப்படிப்பட்ட கேள்விகளையும் தயக்கமின்றி எதிர்கொண்டு, அந்தக் கணத்தில் தன்னுள் விளைகிற பதில்களை வெளிப்படுத்துகிறார். அதில் நகைச்சுவையையும் கலக்க முயற்சிக்கிறார். இன்றைய தலைமுறைக்கு, அது ‘தஃக் மொமண்ட்’டாக தெரிகிறது.

தன் மீது முன்வைக்கப்படுகிற விமர்சனங்களை, அரசியல் பார்வையை, பாராட்டுகளைப் புன்னகையுடன் கடந்து போகப் பழகியிருக்கிறார். பொதுப்பிரச்சினைகளில் தான் முன்வைக்க விரும்புகிற கருத்துகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.

இசையமைப்பில் தொடங்கி கல்லூரி, தயாரிப்பு நிறுவனம், ஸ்டூடியோ எனப் பலப்பல முயற்சிகளை இளைய தலைமுறைக்காகக் கையிலெடுத்திருக்கிறார். குழந்தைகள் கைப்பிடித்து விளையாட அழைத்துச் செல்கிற ஒரு ஆசிரியரைப் போன்று அந்தக் கணங்களில் வெளிப்படுகிறார்.

சில ஆண்டுகளாக மெல்ல விளைந்த இம்மாற்றங்களுக்கு நடுவே எளிமை, பக்குவம், நேர்த்தி, அர்ப்பணிப்பு எனத் தனக்கான சிறப்பியல்புகளைக் கொஞ்சமும் நழுவவிடாமலிருப்பதில் கவனம் செலுத்துகிறார்.

இப்படி ரஹ்மானிடத்தில் வியக்கப் பல குணாதிசயங்கள்.

ஒரு ‘மூன்வாக்’

சிகரம் ஏறுபவர்கள் சந்திக்கிற பலகீனங்களில் ஒன்று, அதிலிருந்து இறங்குகிற காலக்கட்டத்தைச் சரிவாக உலகம் எண்ணிவிடக் கூடாதே என்கிற எண்ணம். அது பற்றிக் கவலைப்படாதவர்கள் அடுத்தடுத்த சிகரங்களில் ஏறுவார்கள்.

முந்தையதை விட இது சிறியதா, பெரியதா என்று யோசிக்காமல் ஏறுகிற தருணங்களில் மனதைச் செலுத்துவார்கள். ஆஸ்கர் விருதுக்குப் பிறகு இனிமேல் இந்தியாவில் ரஹ்மான் இருப்பாரா என்ற கேள்வியைப் புறந்தள்ளிவிட்டு, தொடர்ந்து சர்வதேச சினிமாவுக்கும் தொடக்கப்புள்ளியான தமிழ் சினிமாவுக்கும் இடையே அவர் வலசை வந்து கொண்டிருக்கிறார்.

தனிப்பட்ட வாழ்வுக்கும் இசை வாழ்வுக்குமான இடைவெளியில் அவர் எப்படிச் சமநிலை பேணுகிறார் என்பது பெரும் ஆச்சர்யம். அது மட்டுமல்லாமல், ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிற ‘ப்ளஸ்’ பாயிண்ட்களை வலிந்து குறிப்பிடுகிற மனப்பாங்கு அவரிடத்தில் பெருகியிருக்கிறது.

காலத்தால் விளைந்த இது போன்ற பல மாற்றங்கள், நிலவில் கால் பதித்த விண்வெளியாளர்களின் நடையைப் போன்று அவரது திரைப்பயணத்தை உணரச் செய்கிறது. ‘காதலன்’, ‘புதிய முகம்’, ‘பவித்ரா’ காலத்துப் பாடல்களை இப்போது கண் மூடிக் கேட்டாலும், அவை ரஹ்மானின் ‘மூன்வாக்’காக தெரிகின்றன. இன்றைக்கும் ‘ப்ரெஷ்’ஷாக இருக்கின்றன.

திரையிசை என்றில்லை, ஈர்ப்புவிசை குறைவான எந்தவொரு துறையிலும் பயணத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டுமென்பவர்கள் இப்படித்தான் ‘மூன்வாக்’ சாதனையாளராகத் தங்களை உருமாற்றிக் கொள்வார்கள்.. ஏ.ஆர்.ரஹ்மான் அதில் ஒருவர்..!

– சரோ

#ஏஆர்ரஹ்மான் #ரோஜா #மூன்வாக் #வந்தேமாதரம்ஆல்பம் #ஸ்லம்டாக்மில்லியனர் #காதலன் #புதியமுகம் #பவித்ரா #ஏஆர்ஆர் #arr #arrahman #rahman #rojafilm #moonwalk #vandemataramalbum #slumdogmillionaire #arrmusic #arrsongs #arrfans #indianmusic #tamilcinema