‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் சொந்தப்பட நிறுவனமான ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேஷனல்’ தனக்கென தனி அடையாளத்தை வைத்துள்ள பட நிறுவனம். தான் கதாநாயகனாக நடித்த ‘ராஜபார்வை’ படத்தைத் தனது நிறுவனம் மூலம் முதன் முறையாக தயாரித்தார்.
தான் நடிக்காத படங்களையும், அந்த நிறுவனம் வாயிலாக தயாரித்தார் கமல். இதற்கு பிள்ளையார் சுழி போட்ட படம் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’.
சத்யராஜ், ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பின் ஏராளமான வெற்றிப் படங்களை, பிற நடிகர்களை வைத்து, ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ‘அமரன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போது, பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொண்டார், சிவகார்த்திகேயன்.
“மேஜர் முகுந்தைப் பற்றி நான் செய்திகளில் தான் தெரிந்துகொண்டேன் – ஆனால் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்தக் கதையை சொன்னபோது அது, என்னை மிகவும் பாதித்தது.
இந்தப் படம் முகுந்தின் பயணத்தைப் பற்றியது – அவர் ஒரு மிகச்சிறந்த தலைவர்” என உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், “கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பல கிளாசிக் படங்களை தமிழுக்கு கொடுத்துள்ளது – இந்தப் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக அவர் சொன்னார்.
நான் ரஜினிகாந்த் ரசிகன் என்பது அவருக்கு தெரியும் – ஆனால், அவர் அதையெல்லாம் யோசிக்காமல் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார் – அதனால்தான் அவர் இந்த இடத்தில் இருக்கிறார்.
‘அமரன்’ படத்தை ரஜினிகாந்த் முதல்நாளே பார்ப்பார் – அதுதான் அவங்களுக்கு இடையில் இருக்கும் அன்பு – அவர்கள் இருவரும் தான் உண்மையான அபூர்வ சகோதரர்கள்” என பேசியபோது, ஒரே ஆரவாரம்.
‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்தையும் விழாவில் சிவகார்த்திகேயன் சிலாகித்துப் பேசினார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‘பிரின்ஸ்’ படம் ரிலீஸ் ஆனபோது கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. நான் ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இவன் இதோட காலி என்றெல்லாம் என் காதுபடப் பேசினார்கள்.
அதன்பிறகு ஒருமுறை ஒரு நண்பரின் தீபாவளி கொண்டாட்டத்துக்காக சென்றபோது, அங்கு அஜித்குமார் இருந்தார் – எனக்கு கைகொடுத்து, உங்க வளர்ச்சியை பார்த்து நிறைய பேர் பாதுகாப்பற்ற தன்மையை உணர்ந்தால் நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் என்று சொன்னார்” என உருகினார் சிவகார்த்திகேயன்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம் பங்கேற்று, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கலைஞர்களைப் பாராட்டிப் பேசினார். தீபாவளியை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி ‘அமரன்’ திரைப்படம் திரைக்கு வருகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.
#சிவகார்த்திகேயன் #Sivakarthikeyan #அஜித் #Ajith #ராஜ்குமார்_பெரியசாமி #Rajkumar_periyasamy #அமரன் #Amaran #சாய்_பல்லவி #Sai_pallavi #மேஜர்_முகுந்த்_வரதராஜன் #Major_Mugunth_varadharajan #ராஜ்கமல்_பிலிம்ஸ் #Rajkamal_films #ஜிவி_பிரகாஷ் #GV_Prakash #ஆடியோ_வெளியீட்டு_விழா #Audio_launch #இயக்குநர்_மணிரத்னம் #Director_Manirathnam