Take a fresh look at your lifestyle.

சிரிப்பு – நம் மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடி!

திரைத் தெறிப்புகள் – 25:

*
தமிழ்த் திரை இசையில் எத்தனையோ நடிகர்கள் தங்கள் குரலில் பாடி நடித்திருக்கிறார்கள்.

பி.யு. சின்னப்பா, தியாகராஜ பாகவதர் துவங்கி, பாடி நடித்த நடிகர்கள் வரிசையில் தனித்து இடம்பெற்றவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.

1956-ம் ஆண்டு வெளிவந்த ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் டி.ஆர். பாப்பாவின் இசையமைப்பில் கவிஞர் ஏ.மருதகாசியின் பாடலை வெகு அழகாகப் பாடியிருப்பார் கலைவாணர்.

“சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே
நமது பொறுப்பு – மனம்

கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு – இது

களையை நீக்கி கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு…”

என்று வாய் திறந்த சிரிப்புடன் அமர்க்களமாய்ப் பாடியிருப்பார்.

அந்தப் பாடலின் போது அவர் முகத்திலும், உடல் அசைவிலும் காட்டியிருக்கும் பாவங்கள்  அபாரம். அவருடன் இணைந்து டி.ஏ. மதுரம் அட்டகாசமாய்ச் சிரித்து அந்தக் காட்சியைப் பிரமாதமாய் ரசிக்க வைத்திருப்பார்.

அடுத்து, சிரிப்பிலேயே பல்வேறு ரகமான சிரிப்புகளை அடுத்தடுத்து அவிழ்த்துவிட்டு கலைவாணர், மதுரம், குலதெய்வம் ராஜகோபால் மூவரும் பொங்கிய சிரிப்புடன் நகரும் அந்தப் பாடலைப் பார்க்கும் யாவருமே முகத்தின் இறுக்கம் கலையாமல் பார்க்க முடியாது.

“சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு – வேறு

ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்தச் சிரிப்பு

இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு.
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு.

இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு.
இது சங்கீதச் சிரிப்பு…”

என்று அந்தப் பாட்டு நிறைவடையும்போது மகிழ்ச்சியாக ஒரு ராகத்தை சங்கதிகளுடன் பாடுகிற இசைக் கலைஞரைப் போல வித்தியாசமான சங்கீதச் சிரிப்புடன் அந்தக்  காட்சி நிறைவடையும்.

‘ராஜா ராணி’ படத்தை எப்போதாவது பார்க்கும் பார்வையாளர்கள், மேல குறிப்பிட்ட கலைவாணரின் சிரிப்பு மயமான இந்தக் காட்சியை ஒரு முறை பாருங்கள். கலைவாணரின் பன்முகத் தன்மை “பளிச்சென்று” தெரியும்.