புத்தாண்டின் தொடக்கத்திலேயே ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவுக்கும், பிரமாண்ட டைரக்டர் ஷங்கருக்கும் புதிய சிக்கல்கள் முளைத்துள்ளன.
கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைத்து, உச்சநிலையை எட்டியது முதலே நயன்தாராவுக்கு பல சிக்கல்கள். அவற்றில் சரிபாதி, அவரே ஏற்படுத்திக்கொண்ட தனிப்பட்ட விவகாரங்கள். எஞ்சியவை சினிமாவில் அவர் எதிர்கொண்டவை.
அவருக்கும், டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனை ஆவணப்படமாக உருவாக்கினார்.
‘நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற பெயரில் இந்த ஆவணப் படம் சில மாதங்களுக்கு முன் நெட்பிளிக்சில் வெளியானது. இதில் நடிகர் தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ பட பாடல் காட்சி இடம்பெற்றது.
தனது அனுமதியில்லாமல், ‘நானும் ரவுடி தான்’ படப் பாடல் காட்சி இடம்பெற்றதாக நயன் மீது நடிகர் தனுஷ் வழக்கு தொடுத்தார்.
இதற்காக ரூ.10 கோடியை அவர் நயன்தாராவிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், தன் மீதான காழ்ப்புணர்ச்சியில் தனுஷ் பழிவாங்குகிறார் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
அதே ஆவணப் படத்தில் இடம் பெற்ற ‘சந்திரமுகி’ படக் காட்சிகள் நயனுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆவணப்படத்தில், ‘சந்திரமுகி’ படத்தில் நயன்தாரா நடித்த சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ‘சந்திரமுகி’ படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருந்தது. அவர்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் நயன்தாராவுக்கு ஏற்படவில்லை.
ஆனால் ‘சந்திரமுகி’ படத்தின் முழு உரிமையும் தற்போது ஏபி பிலிம்சிடம் உள்ளது. சிவாஜி புரொடக்ஷனிடமிருந்து ஏபி பிலிம்ஸ் உரிமைகளைப் பெற்றுக்கொண்டது.
அந்த நிறுவனம், தங்களிடம் அனுமதி பெறாமல் சந்திரமுகி காட்சிகளை நயன்தாரா பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
அத்துடன் இது தொடர்பாக நயன்தாரா தங்களுக்கு ரூ. 5 கோடியை நஷ்ட ஈடாகத் தர வேண்டும் என்றும் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஷங்கர் மீது லைகா புகார்:
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
படத்தில் இடம்பெற்றிருக்கும் ஐந்து பாடல்களுக்கு மட்டும் சுமார் ரூ. 75 கோடி செலவு செய்திருக்கிறார் ஷங்கர்.
ஆனால், படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் – 3’ படத்திற்கான பணிகளை முடித்துக் கொடுக்காமல் ‘கேம் சேஞ்சர்’ படத்தை வெளியிடக் கூடாது என ‘இந்தியன் – 3’வை தயாரிக்கும் லைகா நிறுவனம், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பிடமும், தயாரிப்பாளர் சங்கம் விசாரணை நடத்தி வருகிறது.
பொங்கலுக்குள் பஞ்சாயத்து முடியுமா?
– பாப்பாங்குளம் பாரதி.