கர்நாடக மாநிலப் பள்ளி ஒன்றில், ஏழாம் வகுப்புப் பாடத்தில் நடிகை தமன்னா குறித்த செய்தியை, படத்துடன் சேர்த்தது சர்ச்சையானது. (அந்த மாநிலத்தில் அனுமதி பெற்று சுயமாக இயங்கும் பல பள்ளிகள் உள்ளன. தன்னாட்சிக் கல்லூரிகள் போல, அந்தப் பள்ளிகளே பாடத்திட்டத்தை வகுத்துக்கொள்ளலாம்.)
இதற்கு சமூவலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் பலரும் நேரடியாகப் பள்ளிக்கு வந்து கண்டனம் தெரிவித்தனர்.
“ஒரு நடிகை, அதுவும் ஆபாசமாக நடிப்பவர். அவரைப் பற்றி எங்கள் குழந்தைகள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்” என்பது அவர்களது கேள்வி.
இதற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது “சிந்தி இன மக்களைப் பற்றிய பாடத்தில், அந்த சமூகத்தைச் சேர்ந்த பிரபலங்களை குறிப்பிட்டோம். அதில் தமன்னாவும் ஒருவர். அவ்வளவுதான்” என்று விளக்கம் கொடுத்தது.
அதுதான் ஓய்ந்துபோய் அடுத்தடுத்த விவகாரங்கள் வந்துவிட்டனவே – என்கிறீர்களா?
அதில் கவனத்துக்கு வராத ஒரு விசயம் இருக்கிறது.
தமன்னா குறித்து வெளியான அதே பாடத்தில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் குறித்தும் இருக்கிறது. அவரும் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர் தான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதே ரன்வீர் சிங், தன்னை முழு நிர்வாணமாகப் படம் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டது, நாடு முழுதும் சர்ச்சைக் கிளம்பியது.

ஆனால், இவரைப் பற்றி பாடத்தில் இருப்பது பெற்றோர்களையோ, சமூகதளவாசிகளையோ பாதிக்கவில்லை.
“என்ன இருந்தாலும் அவரு ஆம்பளை.. ஆனா, இந்த பொம்பளை ஆபாசமா நடிக்கலாமா…” என்கிற மனநிலைதான் இதற்குக் காரணம்.
தமன்னாவைப் பற்றிய கட்டுரையைப் பாடத்தில் சேர்த்தது தேவையா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ‘ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி’ என்கிற நமது பார்வையைத்தான் சுட்டிக் காட்டுகிறேன்.
நன்றி: பத்திரிகையாளர் டி.வி.சோமு முகநூல் பதிவு
#நடிகை_தமன்னா #தமன்னா #ரன்வீர்_சிங் #பாலிவுட்_நடிகர்_ரன்வீர்_சிங் #பாடத்திட்டம் #கர்நாடகா #படம் #ஆபாசம் #கவர்ச்சி #பெற்றோர்கள்_எதிர்ப்பு