Take a fresh look at your lifestyle.

“எனது ஜேம்ஸ்பாண்ட் இவர் அல்ல’’!

சீன் கானரியை நிராகரித்த எழுத்தாளர் பிளெமிங்

114

சீன் கானரிக்கும், சிவாஜி கணேசனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

இருவருமே தங்களை உச்சம் தொட வைத்த படங்களில், ஆரம்பத்தில் நிராகரிப்பட்டவர்கள் என்பது தான்.

தனது ‘பராசக்தி’ படத்தின் கதாநாயகன் சிவாஜி தான் என்பதில் உறுதியாக இருந்தார், அதன் தயாரிப்பாளர் பெருமாள் முதலியார்.

ஆனால், பங்குதாரர் மற்றும் படத்தில் சம்மந்தப்பட்ட சிலர்-

“இந்த மூஞ்சி சரி இல்ல. ஒல்லிப்பிச்சான் மாதிரி இருக்கார்’’ என முகம் சுளிக்க, பெருமாள் முதலியார் அதனை சவாலாக ஏற்றுக் கொண்டு, சிவாஜிக்கு போஷாக்கான உணவு அளித்து, முகத்தையும், உடம்பையும் மெருகேற்றி, பராசக்தியில் சிவாஜியையே கதாநாயகனாக நடிக்க வைத்தது வரலாறு.

சீன் கானரி, ஜேம்ஸ்பாண்ட்டாக அறிமுகமான முதல் படத்திலும் அவருக்கு இது போன்ற சிக்கல் உருவானது.

எழுத்தாளர் ஐயான் பிளெமிங், தான் தீட்டிய நாவலில் பிரிட்டிஷ் ரகசிய ஏஜெண்ட் 007 எனும் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கி இருந்தார்.

அதனை படமாக்க திட்டமிட்டார், தயாரிப்பாளர் ஆல்பர்ட் புரோகோலி.

கதாநாயகன் வேட்டை தீவிரமாக நடந்தது.

தற்செயலாக புரோகோலியின் மனைவி டானா, ஒரு திரைப்படத்தை பார்த்துள்ளார்.

அதில் நடித்திருந்த சீன்கானரியிடம் காணப்பட்ட, வசீகரமும், மிடுக்கும், டானாவுக்கு பிடித்துப்போனது.

‘கண்டேன் கதாநாயகனை’ என அவர் குஷியில் கூத்தாட, ஆல்பர்ட்டோ முகம் சுழித்தார்,

“ம் ஹூம்’’ என உதட்டை பிதுக்கினார்.

எழுத்தாளர் ஐயான் பிளெமிங், அதனை விட கூடுதலாகவே ரியாக்‌ஷன் காட்டினார்.

“நான் வடிவமைத்துள்ள ஜேம்ஸ்பாண்ட் இவர் அல்ல. எனது ஜேம்ஸ்பாண்ட், கமாண்டராக இருக்க வேண்டும். நெடுநெடுவென வளர்ந்துள்ள ஸ்டண்ட் ஆசாமி அல்ல எனது பாண்ட்’’ என சிடுசிடுத்தார்.

ஆனால் டானா “சீன்கானரி தான் ஜேம்ஸ்பாண்ட்’’ என்பதில் உறுதியாக இருந்தார்.

தயாரிப்பாளரும், எழுத்தாளரும் அரைகுறை மனதுடன் ஓ.கே.சொல்ல-

‘DR.NO’’ என்ற முதல் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் சீன்கானரி.

1962-ம் ஆண்டு வெளிவந்த இந்தப்படம், ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியது.

அதிரி புதிரி வெற்றி.

சீன்கானரியை முதலில் ஒதுக்கிய தயாரிப்பாளரும், எழுத்தாளரும், இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவரை தலையில், தூக்கி வைத்து கொண்டாடாத குறை.

இந்தப் படத்தின் வெற்றியால், பின்னாட்களில் சீன்கானரிக்காக பிரத்யேகமாக கதை எழுதினார் பிளெமிங்.

(சீன்கானரி, ஜேம்ஸ்பாண்டாக நடித்த எழு படங்களில் ஆறு படங்கள் பிளெமிங் கதையில் உருவானவை)

ஒரே படத்தின் மூலம் உச்சம் தொட்டார்.

அடுத்தடுத்து வந்த படங்களில் – “பாண்ட்… ஜேம்ஸ்பாண்ட்’’ என்ற ‘டயலாக்’குடன் கானரி அறிமுகம் ஆகும் காட்சியில் விசில் பறந்தது.

‘DR.NO’ படத்துக்கு பிறகு 6 படங்களில் ஜேம்ஸ்பாண்டாக நடித்து, முத்திரைப் பதித்தார்.

அந்தப் படங்களின் விவரம்:

FROM RUSSIA WITH LOVE (1963)
GOLD FINGER (1964)
THUNDER BALL (1965)
YOU ONLY LIVE TWICE (1967)
DIAMONDS ARE FORE EVER (1971)
NEVER SAY NEVER AGAIN (1983)

இப்போது, 90 வயதில் கோடிகளைக் குவித்து வைத்து விட்டு மரணத்தைத் தழுவிய சீன்கானரியின் ஆரம்ப காலம் குடிசையில் தான் ஆரம்பமானது.

ஸ்காட்லாண்டில் உள்ள எடின்பர்க் நகரில் ஆலைத் தொழிலாளியின் மகனாக 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி பிறந்தவர் சீன் கானரி. அம்மா வீட்டு வேலை செய்பவர்.

வறுமையால் 13 வயதிலேயே பள்ளிக்குப் போவதை நிறுத்தி விட்டு குடும்பத் தேவைக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.

அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் இருந்து பாலை வாங்கி வீடு வீடாக விநியோகம் செய்தார். பின்னர் கடற்படையில் வேலை கிடைத்தது.

அல்சர் காரணமாக, வீட்டுக்கு அனுப்பி விட்டது ‘ராயல் நேவி. வயிற்றுப் பிழைப்புக்காக காவலாளி வேலை பார்த்தார். லாரி ஓட்டினார். சவப்பெட்டிகளுக்கு பெயிண்ட் அடித்துள்ளார்.

கட்டுமஸ்தான உடல்கட்டு இருந்ததால், எடின்பர்க் ஓவிய கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மாடலாக இருந்து போஸ் கொடுத்துள்ளார். நாடகங்களில் நடித்தார்.

ஒரு முறை பிரபஞ்ச அழகன் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்றார். அந்த தகுதியால் சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அவர் நடித்த முதல் படம்-‘NO ROAD BACK’. ஆண்டு 1956.

2006-ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நடித்துக் கொண்டே இருந்தார். ‘ஜேம்ஸ்பாண்ட்’ படங்களுக்கு விடை கொடுத்த பின், மாறுபட்ட கதை அம்சம் கொண்ட பல படங்களில் நடித்தார்.

அப்படி நடித்த படன் தான்- ‘THE UNTOUCHABLES’. இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.

ரோஜர் மூர், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் கிரேக் என புதுப்புது ஆட்கள் ஜேம்ஸ்பாண்ட் வேடம் கட்டினாலும், ஜேம்ஸ்பாண்ட் என்றால் அது சீன்கானரி தான்.

– எம்.மாடக்கண்ணு.