Take a fresh look at your lifestyle.

பால்யம் முதல் பாட்டும் இசையுமாக வாழ்ந்த சூலமங்கலம் சகோதரிகள்!

100

சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ‘கந்த சஷ்டி கவச’த்தைத்தான் பலரும் விரும்பிக் கேட்பார்கள்.

முருகனின் உருவமும், இனம் புரியாத பரவசமும், மனதில் உற்சாகம், தன்னம்பிக்கை இவையெல்லாம் கேட்கிற ஒவ்வொருவருக்கும் ஏற்படும்.

தமிழ்ப் பெண்களின் பூஜையறையில் அப்படி இரண்டறக் கலந்துவிட்டது ‘கந்த சஷ்டி கவசம்.’

யார் இந்த சூலமங்கலம் சகோதரிகள்?

தேச பக்தியும் பக்தி இலக்கியமும் ஒன்றாகக் கலந்து மக்களிடையே பரவியிருந்த காலகட்டம்.

கர்னாடக இசையில் புகழ்பெற்றுத் திகழ்ந்தவர்கள் சூலமங்கலம் ஜெயலட்சுமி – ராஜலட்சுமி சகோதரிகள். பாம்பே சகோதரிகள், ராதா – ஜெயலட்சுமி, ரஞ்சனி – காயத்ரி, ‘ப்ரியா சகோதரிகள்’ ஆகியோருக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள்.

ஜெயலட்சுமி-ராஜலட்சுமி சகோதரிகள் இருவரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் சூலமங்கலத்தில் இசைப் பாரம்பர்யம் மிக்க குடும்பத்தில் ராமசாமி ஐயர், ஜானகி அம்மாள் தம்பதிக்குப் பிறந்தவர்கள்.

இவர்களது சொந்த ஊரிலேயே கே.ஜி.மூர்த்தி, பத்தமடை எஸ்.கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபலய்யர் ஆகியோரிடம் முறையாக சங்கீதம் பயின்றார்கள்.

பாட்டும் இசையுமாகவே இவர்களது பால்யம் கழிந்தது. கூடவே, தேச பக்தியும் தெய்வ பக்தியும் இணைந்திட, விழாக்களில் இவர்களைப் பாடப் பலரும் அழைத்தனர்.

கர்னாடக பக்தி இசையில் புகழ்பெறத் தொடங்கியதும், இவர்களை ‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்றே மக்கள் அழைத்தனர்.

1961-ம் ஆண்டு ‘அரசிளங்குமரி’ திரைப்படத்தில் பாடத் தொடங்கினர். அந்தப் பாடல், ‘ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்…’ சூலமங்கலம் சகோதரிகளுக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

ஆனாலும், முழு வேலையாக, திரை வாய்ப்புகளைத் தேடித் தேடியெல்லாம் இவர்கள் பாடியதில்லை. வரும் வாய்ப்புகளைக்கூட தேர்ந்தெடுத்தே ஒப்புக்கொண்டனர்.

பக்திப் படங்களில் ஆளுமைமிக்க ஏ.பி.நாகராஜன் படங்களான ‘கந்தன் கருணை’, ‘திருமால் பெருமை’, தேவரின் ‘தெய்வம்’, ‘குங்குமம்’ பட டைட்டில் பாடல், ‘கௌரி கல்யாணம்’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘தரிசனம்’ ஆகிய படங்கள் உள்பட பல படங்களில் இவர்கள் பாடியிருக்கிறார்கள்.

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானைப் பாடியவர்களெல்லாம் அறுபதுகளில் பெரும் புகழ்பெற்றார்கள்.

‘உள்ளம் உருகுதையா’ பாடல் உள்பட ‘சரவணன் சந்நிதிகள்’ போன்ற பாடல் தொகுப்புகளைப் பாடிய டி.எம்.சௌந்தர்ராஜன், ‘மருதமலை மாமணியே முருகையா’ பாடலைப் பாடிய மதுரை சோமு, ‘சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா’ பாடலைப் பாடிய பி.சுசீலா,

‘சிங்கார வேலனே தேவா…’ பாடலைப் பாடிய எஸ்.ஜானகி வரிசையில் ‘தெய்வம்’ படத்தில் இடம் பெற்ற ‘வருவான்டி தருவான்டி மலையாண்டி… பழநி மலையாண்டி’ பாடலைப் பாடிய சூலமங்கலம் சகோதரிகளின் குரல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.

இசைத் துறையில் இவர்கள் ஆற்றிய சாதனைகளுக்குப் பரிசாக, ‘முருக கானாமிர்தம்’, ‘குயில் இசைத்திலகம்’, ‘இசையரசிகள்’, ‘நாதக்கனல்’ ஆகியப் பட்டங்கள் இவர்களைத் தேடி வந்தன.

1983-ம் ஆண்டு ‘கலைமாமணி’ விருதும் தமிழக அரசின் சார்பில் சகோதரிகள் இருவருக்கும் வழங்கப்பட்டது.

இசை வடிவமாக கந்த சஷ்டி கவசம் ஒலிக்கும் இடங்களில் காற்றில் இசையாகக் கலந்திருப்பார்கள் சூலமங்கலம் சகோதரிகள் என்றால் அது மிகையில்லை.

  • நன்றி – விகடன்