1968-ல் வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஆபேரி ராக பாடல் ‘நகுமோ கனலேனி’யை வாசித்த சகோதரர்களில் இளையவர் எம்.பி.என் பொன்னுசாமி அவர்கள்.
பல நாட்கள் சென்னையில் தங்கியிருந்து சிவாஜி கணேசனுக்கு நாதஸ்வரம் வாசிப்பதைப் பற்றி பயிற்சி அளித்தார்.
இப்படத்தில் நிஜமான நாதஸ்வர கலைஞராகவே சிவாஜி மிளிர்ந்திருப்பார்.
“மதுரை சிந்தாமணி டாக்கீஸில் பார்வையாளர்களோடு அமர்ந்து நாங்கள் தில்லானா மோகனாம்பாள் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்போது எங்களை ரசிகர்கள் உச்சிமுகர்ந்து பாராட்டி தூக்கிக் கொண்டாடினார்கள். அதுவே என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம்” என்று கூறியுள்ளார்.
எட்டு தலைமுறையாக இவரது குடும்பத்தினர் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் கர்ப்பக்கிரஹத்தில் வாசித்துள்ளனர்.
1977-ல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கெளரவப்படுத்தியது. 1997-ல் கிருஷ்ண கான சபாவின் சங்கீதா சூடாமணி விருதையும் பெற்றுள்ளார்.
மகாத்மா காந்தி, காமராஜர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜவஹர்லால் நேரு, பாபு ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்களின் முன்னிலையில் வாசித்துள்ளார்.
இந்த சகோதரர்கள் தங்களுக்கு அளித்த தங்கப் பதக்கத்தை யுத்த நிதிக்காக மனமுவந்து அளித்து தங்கள் மனமும் தங்கம் என்பதை நிருபித்தார்கள்.
- நன்றி : கல்கி