Take a fresh look at your lifestyle.

மனதை லயிக்கச் செய்த பாடலாசிரியர்கள்!

2
‘கண்மூடித் திறக்கும்போது’ பாடல் எனக்குள் ஏற்படுத்தும் ஆச்சர்ய அதிர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்பது எப்போதுமே எனக்கு குழப்பமாகவே இருந்திருக்கிறது.
 
ஒரு பாடலுக்குள் இப்படியான குட்டி குட்டி ஜென் கவிதைகளை வைப்பது அசாத்தியம். அது நா.முத்துக்குமாருக்கு கைவரப்பெற்றதை நினைக்கும்போது ஒரு திரைப்பாடல் ரசிகர்கள் இழந்தது மிக அதிகம் என நினைக்கிறேன்.
 
பாடலாசிரியருக்கு சூழல் விளக்கப்படுமே அன்றி வெகுசில பாடல்களில் மட்டுமே வரப்போகும் காட்சி கூறப்படும். அது பெரும்பாலும் நடப்பதில்லை. ஒரு பாடலில் எழுதும் வரியை காட்சிப்படுத்த முடியுமென்றால் அது ஒளிப்பதிவாளருக்கு பெரிய சவால் அல்லது ஒரு டாஸ்க். கண்மூடித்திறக்கும் போது பாடலை எடுத்துக் கொள்ளுங்கள். குட்டி குட்டி கவிதைகளை கண்டெடுப்பீர்கள்.
 
‘கண்மூடித்திறக்கும் போது
கடவுள் எதிரே வந்ததுபோல
அடடா என் கண்முன்னாலே
அவளே வந்து நின்றாளே’
 
‘உன்பேரும் தெரியாது
உன் ஊரும் தெரியாது
அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா..?’
 
“நீ என்னை பார்க்காமல்
நானுன்னை பார்க்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை
நிலா அறியுமா..”
 
இந்த மூன்றை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இவை மூன்றுமே தனித்தனியாக கவிதை வரிகள். இவற்றை ஒரே பாடலுக்குள் நாம் பார்க்கிறோம் என்றால் அதை எழுதியவனை எப்படி வியக்காமல் இருக்க முடியும்.
 
இது ஒரு ஆச்சரியம் என்றால், நான் மேலே குறிப்பிட்டது போல இன்னொரு ஆச்சரியமும் அங்கே இருக்கிறது. அதுதான் காட்சி.
 
கண்மூடித்திறக்கும் போது கடவுள் எதிரே வந்ததுபோல அடடா என் கண்முன்னாலே அவளே வந்து நின்றாளே
 
இந்த வரியை ஒரு ஒளிப்பதிவாளர் காட்சியாக்க முடியும். ஒருவன் நடந்து வரும்போது திடீரென ஒரு பெண் அவன் முன்பு வருகிறாள். அவனுக்கு கடவுளையே பார்த்தது போல் ஆகிறது. பேச்சு மூச்சின்றி ஆச்சரியமாக நிற்கிறான். இதைக் கண்டிப்பாக காட்சிப் படுத்தலாம். இதை காட்சியாக்கும்போது பார்க்கும் ரசிகனுக்கு அந்தக் காட்சி அவன் வாழ்வில் ரசித்த ஒன்றுடன் பொருத்திப்போக செய்து கொண்டாட வைக்கும்.
 
வீதி உலா நீ வந்தால் தெருவிளக்கும் கண்ணடிக்கும் என்கிற வரி வரும்போது
 
அவள் சாலையில் நடப்பதையும் அப்போது தெருவிளக்கு விநாடிக்கும் குறைவான நேரம் அணைந்து எரிவதுபோன்ற காட்சியை படமாக்கி இருந்தால், நன்றாக இருந்திருக்குமே என பலமுறை எண்ணியிருக்கிறேன்.
 
‘நீ என்னைப் பார்க்காமல் நானுன்னை பார்க்கின்றேன்’ என்பது காட்சி. ஒரே பாடலில் அழகிய வரிகளும் அடுக்கடுக்கான காட்சிகளும் விரிவதென்பது அலாதியானது. அழகானது.
 
‘எங்கேயோ பார்த்த மயக்கம்’ பாடலை எடுத்துக் கொள்ளுங்கள் ஒவ்வொரு வரியும் திரையில் காட்சியாக விரியும்.அங்கு நடக்கும் காட்சியை அப்படியே பாடலாக்கியது போல இருக்கும்.
 
‘ஆண்கள் வெட்கப்படும் தருணம் உனைபார்த்த பின்பு நான் கண்டுகொண்டேன்’ என்கிற வரி வரும்போது, நயன்தாரா கண்களுக்கு பயந்து வெட்கப்பட்டு தனுஷ் மறைந்து கொள்ளுவார்.
 
இந்த அழகியலை வைப்பதற்காகவாவது இந்த குட்டியோண்டு கவிதையை காட்சியாக்கியதற்காக அந்த ஒளிப்பதிவாளரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
 
‘என்ன சத்தம் இந்த நேரம்’ பாடலில் வைரமுத்து ‘மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு’ என எழுதியிருப்பார். கமலும் தன் விழியால் ரேகாவின் விழிகளை மூடுவார்.
 
இந்த அழகான ஆசையை காட்சிப்படுத்த வேண்டும் என ஒரு ஒளிப்பதிவாளருக்கு தோன்றிய அதை காட்சிப்படுத்திய விதம் என்னை எப்போதுமே உச்சத்திற்குக் கொண்டு போகிறது.
 
ஒரு பாடல் வரி காட்சியாக நமக்குள் செல்லும்போது அது எப்போதோ நமக்குள் நடந்து மறைந்துகிடந்த ஒரு காட்சியை தூண்டும். நம்மை வியக்கவைக்கும் லயிக்கவைக்கும். அப்படியான பாடல்கள் இப்போது வருகின்றனவா எனத்தெரியவில்லை.
 
‘7கனிக்கூட்டம் அதிசயம்’ பாடலில் எதெல்லாம் அதிசயம் என வைரமுத்து பட்டியல் போடுவார். அதைக் காட்சிப்படுத்தியிருப்பார் ஒளிப்பதிவாளர்.
 
‘வான் மிதக்கும் உன் கண்கள்’ என்றால் ஐஸ்வர்யா ராயின் கண்கள் காட்டப்படும்.
 
‘நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே நகமென்ற கிரீடமும் அதிசயமே’ என்றால் ஐஸ்வர்யா ராயின் விரலும் நகமும் காட்டப்படும். இது எளிது.
 
சிக்கல் என்னவென்றால். ‘பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே’ என்கிற வரி வரும்போது ஐஸ்வர்யாராயின் உதடுகள் காட்டப்படும். அதரம் என்றால் உதடுகள்.
 
இப்படியாக பாடலும் காட்சியும் கைக்கோர்க்கும் போது கண்ணும் காதும் பலனடைகின்றன என நினைக்கிறேன்.
 
காட்சியை ஒரு பாடலாசிரியர் தன் எழுத்துக்கள் மூலமாக வழங்கும்போதும் அதைக் காட்சியாக திரையில் பார்க்கும்போதும் ஒரு பாடலுக்காக இத்தனை மெனக்கெடலும் கவிதையும் இருக்கிறதா என்கிற ஆச்சரியம் ஒரு ரசிகனுக்குள் ஏற்படும்.
 
இன்னும் எத்தனையோ பாடல்கள் குறித்து என்னால் எழுத முடியும். நீங்கள் என்னைப்போல பல பாடல்களில் இப்படியான விஷயங்களை ரசித்திருக்கலாம். அந்த உணர்வுகளை கொஞ்சமாவது தட்டியெழுப்பவே இதை எழுதினேன். எழுப்பியிருப்பேன் என நம்புகிறேன்.
 
வைரமுத்துவும் முத்துக்குமாரும் பாடலாசிரியர்களில் அதிகப்படியான உயரத்தை தொடுவதற்கு அவர்களிடமிருந்த அந்தக் காட்சியை பாடலுக்குள் வைக்கும் வித்தை மிக முக்கிய காரணம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
 
நன்றி : Lenin Ernesto  முகநூல் பதிவு
 

#என்னசத்தம்இந்தநேரம் #EnnaSaththamIndhaNeram #எங்கேயோபார்த்தமயக்கம் #EngeyoParthaMayakkam #பூவுக்குள்ஒளிந்திருக்கும் #Poovukkul #Jeans #ARRahman #Prashanth #Vairamuthu #AishwaryaRai #வைரமுத்து #முத்துக்குமார் #கண்மூடித்திறக்கும்போது #kanmoodithirakumbothu #namuthukumar #நாமுத்துக்குமார்