எஸ்.பி.பி. மறைந்து நாட்கள் கடந்தும், அவர் விட்டுச் சென்றவற்றைச் செவிகளால் கேட்க நேரும் போதும் கண்களால் காண நேரும் போதும் இப்படியோர் மகத்தான கலைஞர் நம்மிடம் இன்றில்லை என்ற யதார்த்தம் நம்மை வருந்த வைக்கிறது!
பிரம்மாண்டங்களும் அதிரடிக் காட்சிகளும் நிறைந்த இன்றைய திரைப்படங்களுக்கு நடுவே படம் முழுவதும் ஒரேயொரு பழைய கிராமத்து வீட்டை மட்டுமே களமாக வைத்து, அதில் இரண்டேயிரண்டு வயதான கணவன் மனைவி பாத்திரங்களை மாத்திரம் உலாவவிட்டு மொத்தப் படத்தையும் நகர்த்துவது மிகப்பெரிய சவால்!
‘மிதுனம்’ எஸ்.பி.பி.அவர்களும் லட்சுமி அவர்களும் வாழ்ந்து காட்டிய திரைப்படம்! (இதே பெயரில் மோகன்லால் – ஊர்வசி நடித்த மலையாளப் படம் ஒன்றுண்டு.)
‘மிதுனம்’ என்றால் இரட்டையரைக் குறிக்கும். இங்கே தம்பதி!
இதென்ன பிரமாதம்? பார்த்திபன் ஒரேயொரு காரெக்டரை வைத்து முழு படத்தையும் தரவில்லையா? என்று கேட்கலாம். நிச்சயமாக யாரும் நெருங்க முடியாத படைப்பு ‘ஒத்தச் செருப்பு’. 21.10.2020 அன்று அதற்கு விருது அறிவிக்கப்பட்டது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மிதுனம் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்படும் இந்தியத் திரைப்படங்களுள் இடம்பெற்ற பெருமையைப் பெற்றது.
ரமணா என்பவர் எழுதிய 26 பக்க சிறுகதையை நடிகரும் இயக்குனருமான தனிகேல பரணி 1.25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படம் ‘மிதுனம்.’
எஸ்.பி.பி. மிகச் சிறந்த நடிகர் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால், இந்தப் படத்தில் இவருடைய நடிப்பு வாயைப் பிளக்க வைக்கிறது!
அதுவும் அப்பேர்பட்ட உடம்பை வைத்துக் கொண்டு அன்றைய அறுபத்தைந்து வயதில் அவர் பண்ணும் சேட்டையும் கோமாளித்தனங்களும் இருக்கிறதே!
பசங்க கெட்டாங்க போங்கோ!
அப்பாதாசு ஒர் ஓய்வு பெற்ற ஆசிரியர். புச்சி லட்சுமி அவருடைய மனைவி.
மிதுனம் என்றால் தெலுங்கில் கணவன் மனைவி இருவரையும் குறிக்கும் (Couple).
தெலுகு மிதுனம் – தெலுங்குத் தம்பதி!
தாம்பத்ய ரசம் – அதாவது யாருமில்லாமல் தனித்து வாழும் வயதான தம்பதியர் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பையும் காதலையும் ஊடலையும் சுவையாக போட்டிப் போட்டுக்கொண்டு விளக்குகிறார்கள் எஸ்.பி.பி.யும் லட்சுமியும்!
படம் முழுவதும் இவர்கள் இருவரைத் தவிர ஒரு பசுவும் அதனுடைய கன்றும் ஒரு கோழியும்தான்! வேறு யாரும் கிடையாது!
வேறு யாரும் கிடையாது என்பது மட்டுமில்லை; சும்மாவேணும் வந்துபோவது கூட கிடையாது!
ஐந்து பிள்ளைகளும் வெளிநாட்டில் இருக்கிறார்கள். எஸ்.பி.பி., மனைவியின் மீது அன்பைப் பொழிகிறார்! புடவை துவைக்கிறார்; புதிய செருப்பு ஒன்றைத் தானே தைத்துக் கொடுக்கிறார்; கால்களுக்குத் தைலம் தடவி விடுகிறார்;
அதே மனைவியைத் தன் கால்களால் உதைத்துத் தள்ளவும் செய்கிறார். முரட்டுத்தனமான கோபத்துடன் அப்பாதாசு மனைவியை ஓங்கி மிதித்துத் தள்ளும்போது நமக்கே பகீர் என்றிருக்கிறது!
இந்தக் காட்சியை தவிர்த்திருக்கலாமோ? தவிர்த்திருந்தால் அப்பாதாசும் புச்சியும் இந்தளவுக்கு மனதில் நின்றிருக்க மாட்டார்கள்! பொறாமையாக இருக்கிறது! என்னவொரு வாழ்க்கை!
சரியான போஜனப் பிரியன் அப்பாதாசு!
மனைவியின் சமையலை ருசித்து ரசித்து சாப்பிட்டு விட்டு, ‘அத்புதம்’ என்று சொல்வதை நாமும் ‘அத்புதம்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
படம் முழுவதும் எஸ்.பி.பி. அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை! இப்படியெல்லாம் கூட கோமாளித்தனம் பண்ண முடியுமா என்று நாம் வியப்பதையன்றி வேறு வழியில்லை!
லட்சுமி அவர்கள் நடிப்பைத் தனியே சொல்ல வேண்டும்! ஒரு காட்சியில் வரும் இந்த உரையாடல் ஒரு சாம்பிள்:
“இவ்வளவு விறகை ஏன் சேமித்து வைத்திருக்கிறாய்?” என்று மனைவி புச்சியிடம் கேட்பார் அப்பாதாசு.
அதற்கு, “நீங்க நாளைக்கு மண்டையைப் போட்டால் வச்சு எரிக்க” என்பார் லட்சுமி!
தனக்கு முன்னாலேயே தன் கணவர் இறந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார் மனைவி லட்சுமி!
நினைப்பது மட்டுமல்ல; சொல்லவும் செய்கிறார்!
பாடல்கள், ஒளிப்பதிவு எல்லாமே அருமை!
பழைய ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும்’ பாடல் மெட்டில் வரும் பாடலில் மனைவி புச்சி சமைத்து வைத்திருந்த பண்டிகை உணவு வகையறாக்களின் பெயரை ஒவ்வொறாகச் சொல்லி அப்பாதாசு ஒவ்வொன்றாக விழுங்கும் இடம் படா தமாஷ்!
மொத்தத்தில் அப்பாதாசு பாஷையில் சொல்வதானால், ‘அ த் பு த ம்ம்ம்’
இந்தப் படத்தை இயக்கிய தணிகேல பரணி, கில்லி படத்தில் பிரகாஷ் ராஜுக்குத் தந்தையாக வருவார்! எஸ்.பி.பி.யை நம்பி ரிஸ்க் எடுத்திருக்கிறார்!
எஸ்.பி.பி.ஏமாற்றவில்லை! லட்சுமியுந்தான்!
– மா.பாரதி முத்துநாயகம்