Take a fresh look at your lifestyle.

ஓராயிரம் கதைகளைச் சொல்லிவிட்ட ஒரு பாடல்!

ஒரு படைப்பின் திறப்புப் பாடலாக அமையும் பாடலின் அந்த அடிகள் மட்டும் போதும் ஒரு முழுத் திரைக்கதையும் எழுதபட்டு விட்டது.
 
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்: 
 
“ஆரம்பத்தின் பிறப்பும்
உன் கையில் இல்லை – என்றும்
அடுத்தடுத்த நடப்பும்
உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு
பயந்தென்ன லாபம்  – அதில்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்….”
 
இந்தப் பாடலை நான் எண்ணி வியக்க முழு முதற்காரணமே ஒரு தத்துவார்த்தம் மிகுந்த கவி வரிகளை எவ்வளவு அழகானதொரு சாஸ்திரிய சங்கீதக் கம்பளத்தில் சுற்றிக் கொடுக்கும் பாங்கு தான்.
 
தமிழ்த் திரையிசையில் சாஸ்திரிய சங்கீதப் பாடலென்றால் கடவுள் வாழ்த்தே மிகுதியாகப் பேணப்பட்டது. காட்சியின் சூழலை உணர்ந்து குறித்த கதைப் பின்னணிக்கான அசரீரியாகவும் அவை அமைந்ததுண்டு.
 
ஆனால், ஒரு முழுமையான தத்துவப் பாடல் வரிகளை எடுத்து அவற்றை ஒரு பரிபூரணமான சாஸ்திரிய மரபிசைக்குக் கொடுத்தது தான் “ஏழு ஸ்வரங்களுக்குள்” பாடலின் அழகியலை மிகுதியாக்குகின்றது.
 
‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் கதையே ஒரு சாஸ்திரிய சங்கீதப் பாடகியைச் சுற்றியே வருவதனால் இந்தப் பாடல் ஒரு கடவுள் வாழ்த்தாக அமைந்திருந்தாலும் அது பாதகமாகியிருக்காது.
 
ஆனால், அங்கேயும் புதுமையை உள்நுழைத்துக் காட்டிய முத்திரையை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரில் இருந்து ஆரம்பித்து, பாட்டெழுதிய கவியரசு கண்ணதாசன், இசை கொடுத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடிய வாணி ஜெயராம் என்று ஒவ்வொருவராகத் தேடி மெச்ச வைக்கிறது.
 
கே.பாலசந்தரின் கலாகேந்திரா அலுவலகத்தில் வைத்து இந்தப் பாடல் ஒத்திகையை வைத்துவிட்டு மறுநாள் பாடல் ஒலிப்பதிவு என்றதுமே வாணி ஜெயராம் மிகுந்த கவனத்தோடும், பயத்தோடும் சென்றாராம்.
 
காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்துப் பத்தரை மணிக்கு ஒலிப்பதிவு முடிந்ததுமே, “இந்தப் பாடலுக்குக் கண்டிப்பாக விருது கிடைக்கும்மா” என்ற எம்.எஸ்.வி.யின் வாக்கு வாணி ஜெயராமுக்குத் தேசிய விருதாகப் பலித்தது.
 
இந்தப் பாடல் இன்னார்க்கு விதிக்கப்பட்டது என்பது போலவே வாணியம்மாவுக்கு இதுவும் வாய்த்திருக்கிறது.
 
“ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி”
 
– இந்தப் பாடல் ஒவ்வொரு நாள் விடியலிலும் நம்மை நாமே உள் விசாரணை செய்யக் கூடிய அளவுக்குக் கேள்விகளை எழுப்ப வல்லது.
 
“காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் – மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்…”
 
இந்தப் பாடலின் முடிவில் கொண்டுபோய் ஒரு நம்பிக்கையை வைக்கிறாரே அங்கே தான் கவியரசர் வாழ்கிறார்.
 
நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு
கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும்
மேகத்தைப் போல…
 
இன்னொரு உலகத்தில் இருந்துகொண்டு கண்ணதாசனும், விஸ்வநாதனும், பாலசந்தரும், வாணி ஜெயராமும் சேர்ந்திருந்து இப்போது சிலாகிக்கக் கூடும் இந்தப் பாடலை.
 
நன்றி – கானா பிரபா முகநூல் பதிவு