Take a fresh look at your lifestyle.

அறிஞர் அண்ணா பார்த்த கடைசித் தமிழ்ப்படம்!

‘தாமரை நெஞ்சம்’ படத்தை இயக்கி முடித்து விட்டேன். அவருக்கும் திரையிட்டுக் காண்பிக்க விரும்பினேன். என நண்பரான இராம. அரங்கண்ணலுடன் அண்ணா வீடடிற்குச் சென்றேன். 

படம் பார்க்க அழைத்தோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். தாமரை நெஞ்சம் படத்தை அவருக்காக விசேஷமாக கலைவாணர் அரங்கில் திரையிட்டுக் காண்பித்தோம். படத்தைப் பார்த்து விட்டு அண்ணா தரப்போகும் தீர்ப்புக்காகக் காத்திருந்தேன்.

தனக்கே உரித்தான புன்முறுவலுடன்  ‘ஒரே ஒரு வாக்கியத்தைக்’ கூறிவிட்டு அண்ணா காரில் எறிப் போய் விட்டார்.

அண்ணா வழங்கிய அற்புதச் சான்றிதழ்

அவர்கள் சொன்ன அந்த ஒரு வாக்கியம்: ‘ஒரு காவியத்தைப் பார்த்த திருப்தி இன்று எனக்கிருக்கிறது’ அந்த ஒரு பாராட்டு என்னை எங்கேயோ சிறகடித்துப் பறக்க வைத்து விட்டது. பூரித்துப் போனேன். அவருக்குத் தான் எத்தனை பெரிய பரந்த உள்ளம்.

எதிர் நீச்சல் படம் தயாராகி விட்டது. கால வெள்ளத்தில் எதிர் நீச்சல் அடித்து பல வெற்றிப் படிகளைத் தாண்டியவரான அந்தப் பேரறிஞரை எதிர் நீச்சல் படத்தைக் காணச் செய்யவும் பேரவாக் கொண்டோம் அப்பொழுது அவர் தமிழகத்தின் முதல் அமைசசர்.

தவிர, அமெரிக்கா சென்று புற்று நோய்க்காக சிகிச்சை செய்து கொண்டு தாயகம் திரும்பியிருந்த நேரம். நண்பர் அரங்கண்ணலுடன் சென் நுங்கம்பாக்கம் அவென்யூ ரோடிலுள்ள இல்லத்தில் அண்ணாவைச் சந்தித்தோம்.

அவரிடம் ‘நீங்கள் எதிர் நீச்சல் படத்தைப் பார்க்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டேன். ஃபைல்களைப் புரட்டிக் கொண்டே,  “ம்….பார்த்துடுவோமே” என்று பதில் அளித்தார். சற்று தயங்கியபடியே. “இன்றுள்ள உடல்நிலையில் உங்களால் படம் பார்க்க வர இயலுமா?” என்று என் சந்தேகத்தை மெல்லக் கேட்டேன். “நிச்சயமாக வருகிறேன்!” என்றார் அண்ணா.

கற்பகம் ஸ்டுடியோவில் படத்தைத் திரையிட உடனே ஏற்பாடு செய்யப்பட்டது. அன்று பொங்கல் திருநாள். கலைவாணர் என். எஸ்.கே. சிலையை வாணிமகால் அருகே திறந்து வைத்த அன்றே எதிர் நீச்சல்  படத்தைப் பார்க்கவும் வந்திருந்தார். கலைவாணர் சிலை திறப்பு விழா தான் அண்ணா சென்னையில் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி! அவர் பார்த்த கடைசித் தமிழ்ப் படம் எதிர்நீச்சல்!

-இயக்குநர் கே. பாலசந்தர்

நன்றி திரைக் கலைஞர்கள் வரிசை என்ற நூலில் இருந்து ஒரு பகுதி மணிமேகலைப் பிரசுரம் மார்ச் 1987