பாசில் இயக்கிய ‘வருசம் 16’ பெற்ற மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வந்த படம் பிரபு நடித்த ‘அரங்கேற்ற வேளை’.
‘வருசம் 16’ படத்தின் க்ளைமாக்ஸில் வரும் அரங்கேற்றத்தின் போது துக்க சம்பவம் நடந்துவிட்டதால், அரைகுறையாக முடிந்த அரங்கேற்றத்தை அரங்கேற்ற வேளை என்ற அடுத்த படத்தில் தொடர்ந்தாரோ என்னவோ.
மலையாளத்தில் தன் சிஷ்யர்கள் சித்திக் லால் எழுதி இயக்கிய ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற படத்தை பாசில் தமிழில் அரங்கேற்றவேளையாக இயக்கினார். இது தமிழிலும் சுமாரான வெற்றியைப் பெற்றது.
மலையாளத்தில் சாய்குமார், முகேஷ், இன்னொசெண்ட் நடித்திருந்தனர். தமிழில் பாஸிலின் வழக்கமான ஆனந்த குட்டன் கேமராவை கையாள, இளையராஜா இசைக்க, கோகுல கிருஷ்ணன் வசனம் எழுத என இப்படி பாசிலுக்கு எப்போதும் பழக்கமான வழக்கமானவர்கள் இப்படத்தில் இணைந்து இருந்தனர்.
மலையாளத்தில் ரேவதி கதாபாத்திரம் கிடையாது, அதற்கு பதிலாக சாய்குமார் முகேஸ் இருவரும் மட்டும்தான். தமிழில்தான் இரு ஆண்களில் ஒருவர் பாத்திரத்தைப் பெண்ணாக மாற்றி இருந்தார் பாஸில்.
படத்தை தயாரித்திருந்தவர் அரோமா மணி. ஒரு காலத்தில் மிகப்பெரிய தயாரிப்பாளர். முரளி நடித்த உன்னுடன் படத்துக்கு இவர் தமிழில் படம் தயாரிக்கவில்லை என நினைக்கிறேன்.
அரோமாமணி வழங்கும் சுனிதா புரொடக்சன்ஸ் என்ற பெயர் பெரிய எழுத்தில் போடப்படும்.
தன் தந்தை வேலை பார்த்த வேலை தனக்கு சேரவேண்டும் என்ற உரிமையில் அந்த வேலையை பெற வருகிறார் பிரபு.
அந்த வேலையை இன்னொரு பெண் தனக்கிருக்கும் கஷ்டமான சூழ்நிலையை வைத்து தட்டிப்பறிக்க விரும்புகிறார் அப்படியொரு கதாபாத்திரத்தில் ராசி.
இப்பயாவது வேலை எதுவும் இல்லனா யூ டியூப் சேனல் ஓப்பன் பண்ணலாம்னு பொன்னான திட்டங்கள் எல்லாம் இருக்கு அப்போது அது எல்லாம் இல்லாததால் இருவரும் அடித்துக் கொள்கின்றனர். இருப்பினும் ராசியே பல தகிடுதத்தங்களை செய்து அந்த வேலையில் வெல்கிறார்.
இது சம்பந்தமாக பிரபுவுக்கும் வேலை கொடுத்த மானேஜர் வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் நடக்கும் ஆர்க்யூமெண்ட் நல்ல காமெடி கலாட்டாவாக இருக்கும்.
பிரபு அந்த பெண்ணுக்கு வேலை கிடைத்துவிட்டதே என கவலையில் இருக்கும்போது, சார் லடூ லடூ என நீண்ட இழுவையில் லட்டு கொடுத்து செல்லும்போது பிரபு அதை பார்த்து கோபப்படும் காட்சிகள் எல்லாம் நல்ல நகைச்சுவையாக இருக்கும்.
இந்த நிலையில் அடுத்த கட்டமா பூவாவுக்கு என்ன செய்வது என பிரபு தான் தங்கி இருக்கும் சக்தி நாடக சபாவில் உட்கார்ந்து யோசிக்கிறார்.
சக்தி நாடக சபாவை நடத்துபவர் வி.கேராமசாமி, ஆனால் நாடகம் என்பது மருந்துக்கும் புக் ஆவதில்லை, அதனால் பிரபுவுக்கும், ரேவதிக்கும் அதில் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு வாழ்ந்து வருகிறார்.
அமைதியான சுபாவம் கொண்ட ரேவதியை இதில் முதன்முதலாக ரவுடித்தனம் குறும்புத்தனம் கொண்ட பெண்ணாக பாசில் காட்டி இருந்தார்.
ரேவதிக்கும் வேலை இல்லை, பிரபுவுக்கும் வேலை இல்லை, சக்தி நாடக சபா நடத்தும் வி.கே ஆர்க்கும் வேலை இல்லாத சூழ்நிலையில், சக்தி நாதன் என்பவருக்கு செல்லும் ஒரு போன் பி.எஸ்.என்.எல் ஆக மாறாத அந்தகாலத்தில் தவறுதலாக சக்தி நாடக சபாவுக்கு செல்கிறது.
தொழிலதிபர் சக்திநாதனாக வரும் ஜெய்கணேஷ் மகளை ஒரு கும்பல் கடத்துகிறது. கடத்திவிட்டு கடத்தினேன் என சக்தி நாதன் வீட்டுக்கு போன் போட்டு பணம் கேட்டு மிரட்ட முயற்சி செய்கையில் வழக்கம்போல் அந்த போன் சக்தி நாதன் வீட்டுக்கு பதிலாக சக்தி நாடக சபாவுக்கு செல்கிறது.
போன் போட்டு மிரட்டும் பக்கிராமிடம் பிரபு பேச, பிரபுவுக்கு விசயம் புரிகிறது, போன் மாறி வருவதை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் பிரபு, உடன் ரேவதி, வி.கேஆரை துணைக்கு சேர்த்துக்கொண்டு ஒரு மாஸ்டர் ப்ளான் போடுகிறார், அதில் அந்த பெண் கடத்தப்பட்ட வழக்கில் பல தகிடுதத்தங்களை செய்து அந்த கிட்நாப் பணத்தை தாங்கள் பெற முயற்சிக்கின்றனர் இதில் வெற்றி பெற்றார்களா என்பது கதை.
கடைசியில் பணம் கிடைக்கபோகும் நேரத்தில் கொடுத்த காசை கேட்டு ஜனகராஜ் வர அவரும் அவர்களுடன் இணைந்து கொள்ள, பணம் கிடைத்த பிறகு ரேவதி தனக்கு இருக்கும் கஷ்டத்தில் காணாமல் போக என கடைசிவரை டுவிஸ்ட்டுகள் இருந்தன.
கடைசியில் பெண் கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சியில் பிரபு, வி.கேஆர், ரேவதியை சிபாரிசின் பேரில் போலிசிடம் சொல்ல சக்திநாதனால் உதவி கிடைக்கப்பெற்று விடுதலையும் செய்யப்படுகின்றனர்.
இதில் நகைச்சுவை நடிகர் என யாரும் கிடையாது. வி.கே.ஆர்., ரேவதி, பிரபு மூன்று பேரும் அடிக்கும் கும்மாளம்தான் நகைச்சுவையே. மாஸா அவன புடி விடாத என வி.கே.ஆர் வேட்டி அவிழ்ந்து அண்ட்ராயருடன் நிற்கும் காட்சிகள் எல்லாம் வேற லெவல்.
வி.கே.ஆர் மிகச்சிறந்த நடிகர், அதுல பாருங்கன்னு ஆரம்பிக்கும் அழகே அழகு, அவரை மாதிரி எல்லாம் நடிகர் இப்போ யார் இருக்கா சொல்லுங்க பார்ப்போம். ரேவதி வேடத்திற்காக ஐந்து நடிகைகள் படத்திலிருந்து விலகிய பிறகுதான் ரேவதி தேர்ந்தெடுக்கப்பட்டாராம்.
கடத்தப்படும் பெண்ணாக அஞ்சு, ரேவதியின் அம்மாவாக வரும் சுகுமாரி போன்ற அனைவரும் நன்றாக நடித்திருந்தார். முக்கிய வில்லனான பக்கிராம் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் விஜயராகவன் நடித்திருந்தார்.
படத்தில் இளையராஜாவும் கலக்கி எடுத்திருந்தார், முதல் பாடலான “குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்”, துர்பரி கன்னட ராகத்தில் இளையராஜா போட்டிருந்த “ஆகாய வெண்ணிலாவே”, துடுக்கான பாடலாக போடப்பட்ட “மாமனுக்கும் மச்சானுக்கும்”, இறுதி பாடலாக சோகமாக ஆரம்பித்து வேகமெடுக்கும் “தாயறியாத தாமரையே” போன்ற பாடல்கள் மிக அற்புதமாக இருந்தன.
மொத்தத்தில் ஆல்பம் ஹிட் என சொல்லலாம். அரங்கேற்றவேளை 80-களில் வந்த மறக்க முடியாத படம் என சொல்லலாம்.
நன்றி: அபிராம் அருணாச்சலம் முகநூல் பதிவு