Take a fresh look at your lifestyle.

‘சரத்பாபு ஒரு குழந்தை’

-இயக்குநர் மகேந்திரன்

முள்ளும் மலரும் படத்தின் இறுதிக் கட்டம், அதாவது உச்சசக்கட்டம் அண்ணனை விட்டுப் பிரிந்து, தன்னை மணக்கப் போகும் இன்ஜினீயர் மற்றும் அவரது கூட்டத்தாருடன் செல்லும் தங்கை வள்ளி, அண்ணன் காளியிடமே மீண்டும் ஓடி வருவாள். கட்டிப்பிடித்து அழுவாள். ‘எனக்கு நீதான் முக்கியம்!’ என்பதைத் தனது அழுகையாலேயே உணர்த்துவாள்.

அண்ணன் காளிக்கு (ரஜினிகாந்த்) தங்கையின் அந்தச் செயலால் பெருமை பிடிபடாது. தங்கையை அழைத்துக் கொண்டு மணமகனிடம் (சரத்பாபு) வருவார். உலக்ததில் அண்ணனே தனக்கு எல்லாம்!’ என தன் தங்கை நிரூபித்துவிட்ட பெருமிதம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்.

“இப்ப என் தங்கச்சிய உங்களுக்கு மனைவியாக்க நான் சம்மதிக்கிறேன். என் தங்கச்சிக்கு உங்களைப் பிடிச்சிருக்கு…. ஆனா, இப்பவும் உங்களை எனக்குப் பிடிக்கலே சார்…” என்பார் அதுதான் காளியின் விசேஷ குணாதி சயம்!

வழக்கமான தமிழ் சினிமாக்களின் உச்சகட்டத்தில் காளி போன்ற கேரக்டர், இன்ஜினீயரிடம் சமரசமாகப் போய்விடுவது போலக் காட்டிவிடுவர்கள். இங்கேயோ… தங்கையை மணக்கப் போகிறவனைப் பார்த்துக் கடைசியில் கூட, “இப்பவும் உங்களை எனக்குப் பிடிக்கலே சார்!” என்கிறான் காளி.

இந்தக் காட்சியைப் படமாக்கும்போது திடீரென சரத்பாபு காணாமல் போய்விட்டார். கடைசியில் அவரை மேட்டுப் பாளையம் ரயில் நிலையத்திலிருந்து இழுத்து வந்தார் தயாரிப்பாளர்.

காரணம் தெரிந்தால்… சிரிப்பீர்கள்! “அது எப்படி, இப்பக் கூட என்னப் புடிக்கலேன்னு இந்த ஆள் சொல்லலாம்?” என்று என்னிடம் சரத்பாபு கோபப்பட்டபோது, நான் அடக்க முடியாத சிரிப்புடன் சொன்னேன் “சரத்… கதைப்படி, காட்சிப்படி காளிங்குற கேரக்டர்தான் இன்ஜினீயரை இப்படிக் கடைசி வரைக்கும் வெறுக்கிறான். ஆனா, காளியா நடிக்கிற ரஜினிகாந்த், இன்ஜினீயரா நடிக்கிற சரத்பாபுவை வெறுக்கலே… நீங்கள் இல்லாமல் கூட, காளி அப்படிப் பேசுவதை என்னால் எடுக்க முடியும். நீங்கள் இன்னும் வழக்கமான சினிமாக்களின் தாக்கத்தில்தான் இருக்கிறீர்கள்!”

பிறகுதான் அவருக்கு வழக்கமான தமிழ் ‘சினிமா வேறு வாழ்க்கை வேறு’ என்பதும் முள்ளும் மலரும் உச்சக்கட்டம் வழக்கத்திலிருந்து மாறுப்பபட்டது என்பதும் விளங்கியது.

சரத் பாபு தனிப்பட்ட முறையில் அற்புதமான மனிதர். அவரை ‘ஜென்டில்மேன்’ என்றுதான் குறிப்பிடுவேன்.  முள்ளும் மலரும் அவருக்கு ஆரம்ப கட்டம். எனவே ஒரு குழந்தை போல நடந்து கொண்டார்… அவ்வளவே!

-நன்றி சினிமாவும் நானும் என்ற நூலில் இருந்து ஒரு பகுதி